உலக வரலாற்றில் முதல் முறையாக பூமியில் 2024ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி சராசரியாக உலகளாவிய மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை 17.16 டிகிரி செல்சியஸ் நிலவியது. ERA5 தரவுத் தொகுப்பில் இருந்து பூர்வாங்க தரவுகளின் பகுப்பாய்வின்படி, வெப்பமான நாட்களை உலகம் அனுபவித்தது. ஜூலை 22 மற்றும் 23 அன்று ERA5ல் தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலை 17.16 ° C மற்றும் 17.15 ° C ஐ எட்டியது.
வரலாற்றில் முதல் முறையாக, 2024 நவம்பர் 17 அன்று ஒரே நாளில் 5 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளனர் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 2024 நவம்பர் 17ம் தேதி இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஒரே நாளில் 3100 விமானங்களில் 5 லட்சம் பயணிகள் பயணம் செய்து இந்த வரலாற்று சாதனையை படைத்தனர்.
2024 இந்தியாவின் பொதுத் தேர்தல், பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் 2024 ஜூன் 1 வரை இந்தியாவில் நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் 2024 ஜூன் 4 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் உலகிலேயே முதல் முறையாக 96.9 கோடி வாக்காளர்கள் வாக்களித்து சாதனை படைத்தனர்.
ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை மற்றும் பெண் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு சாதனையை படைத்தார் மனு பாக்கர். இந்த சாதனையை தனது 22 வயதில் சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஜூலை 28ல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றார். அடுத்து அதே பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி, கொரிய அணியை வீழ்த்தி இந்தப் பதக்கத்தைப் பெற்றது.
ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் நிர்ணயித்த அளவை விட உடல் எடை 100 கிராம் கூடியதால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது, ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களையும் நொறுங்கச் செய்தது. இப்படி நடந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை.
2024 மே மாதம் 5ம் தேதி நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான NEET முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, NEET 2024ல் 720 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை அறிய ஒவ்வொரு தேர்வாளரும் ஆர்வமாக இருந்தனர். NEET 2024 தேர்வில் குறிப்பிடத்தக்க வகையில் 720க்கு 720 மதிப்பெண்களை, 67 மாணவர்கள் பெற்று சாதனை நிகழ்த்தினர்.
சிங்கப்பூரில் (2024ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி) நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ். இதன் மூலம் இளம் வயதில் (18 வயதில்) உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஐபிஎல் ஏலம் 2025, நவம்பர் 24 மற்றும் 25, 2024ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 577 வீரர்கள் கலந்து கொண்டனர். பட்டியலில் ரிஷப் பண்ட் முதலிடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறது. வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். அவரை 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியிருக்கிறது.
2024 ஆகஸ்ட் 8ல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை வெண்கலப் பதக்கத்துடன் நிறைவு செய்தது இந்திய ஆடவா் ஹாக்கி அணி. ஒலிம்பிக் வரலாற்றில் மொத்தமாக இத்துடன் 13ஆவது பதக்கத்தை வென்றிருக்கிறது. 1972க்குப் பிறகு, முதல் முறையாக இரு ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 2023 - 2024 நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 66,858.92 கோடி ரூபாய்) என ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் 6 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது மூன்றில் ஒரு மடங்கு (சுமார் 33 சதவீதம்) அதிகரித்துள்ளது, இது வரை இல்லாத சாதனையாகக் கருதப்படுகிறது.