
ஓணம் பண்டிகையானது கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு சிறப்பான மாதம் ஆவணி ஆகும். மலையாள மக்கள் இந்த மாதத்தை ‘சிங்க மாதம்’ என்று கூறுவர். இதுவே இவர்களது முதல் மாதமாகவும் கருதப்படுகிறது. இம்மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளை 'ஓணம்' என்கிறார்கள். இது 'மேஷ விஷு' என்றும் கூறப்படுகிறது.
சிவன் கோயிலில் இருந்த எலி ஒன்று அக்கோயிலின் கருவறையில் விளக்கு தொடர்ந்து எரிகின்ற வகையில் அதன் திரியை தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. எலியின் இந்தச் செயலால் மகிழ்ந்த சிவன், அடுத்த பிறவியில் அந்த எலியை 'பலி'யாகப் பிறக்கச் செய்தார். பின்னர் அவரே மகாபலி சக்கரவர்த்தியாகி மூவுலகையும் ஆளுகின்ற ஆற்றலையும் பெற்று மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். ஒரு சமயம் மன்னர் மகாபலி அசுவமேத யாகம் ஒன்றை நடத்தத் தொடங்கினார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்திரன், திருமாலை அணுகி மகாபலியின் கொட்டத்தை அடக்குமாறு வேண்டினான். அதற்கு இணங்கினார் திருமால். அவரது முக்கிய நோக்கம் மகாபலியின் பெருமையை மேலும் பரப்புவதுதான்.
இதற்காக பிராமணச் சிறுவனாக, வாமன வடிவம் எடுத்துச் சென்றார் மகாவிஷ்ணு. ‘உனக்கு என்ன வேண்டும்?‘ என்று மன்னன் மகாபலி கேட்க, ‘எனது காலால் மூன்று அடி மண் போதும்’ என்றார் திருமால். உடனே அதற்கு ஒப்புக் கொண்டார் மகாபலி. உடனே திருமால் விஸ்வரூபம் எடுத்தார். தனது ஒரு கால் அடியால் விண்ணுலகை அளந்தார். அடுத்த காலடியால் பூவுலகை அளந்தார். பிறகு புன்னகையுடன், ‘மூன்றாவது அடியை எங்கு வைப்பது?’ என்று கேட்டார். அதைக் கண்டு பிரம்மித்த மகாபலி மன்னன், ‘என் தலை மீது வையுங்கள்’ என்று கூறினான். அதன்படியே வைத்து அவனை பாதாள உலகத்துக்கு அனுப்பி அங்கு மன்னன் ஆக்கினார் திருமால்.
கோரிக்கை: அப்போது மகாபலி மன்னன், திருமாலை நோக்கி 'அடியேன் பேறு பெற்ற இப்பெருநாளை அனைவரும் ஈடில்லா இன்ப நாளாகக் கொண்டாடி கழித்தல் வேண்டும். அதனை கண்டு களிக்க நான் ஆட்சி செய்த நாட்டுக்கு வருடம் ஒரு முறையாவது வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்ற வரத்தைக் கேட்டு பெற்றுக் கொண்டான். பெருமானும் அப்படியே அருளினார். திருமாலுக்கு மூன்றடி மண் தானம் கொடுத்த நாள் ஆவணி மாதம் துவாதசி திதியாகும். ஆவணி திருவோணத்துடன் துவாதசியும் சேர்ந்து வந்தால் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
வரவேற்பு: திருவோண நாளில் மகாபலி தனது நாட்டுக்கு விஜயம் செய்யும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தங்கள் இல்லத்திற்கு மகாபலி வருவதை வரவேற்கவே வாசலில் பூக்களம் இட்டு வீட்டை அழகுபடுத்தி வைத்திருக்கின்றார்கள். பெரும்பாலும் மலர்களால் பூக்களத்தை அலங்கரிப்பது அவர்களின் 10 நாளைய வழக்கம். இந்தப் பத்து நாள் விழாவில் மகாபலியின் புகழ் பாடும் பாடல்களும், நடனங்களும் அப்போது ஏற்பாடு செய்யப்படுகின்றன. சம்பா குளம், கோட்டயம் பகுதிகளில் பாம்பு படகு போட்டிகள் நடைபெறும்.
ஒவ்வொரு படகும் சுமார் நூறு அடி நீளம் கொண்டவை. 150 நபர்கள் ஒவ்வொன்றிலும் பயணம் செய்ய முடியும். இந்தப் படகுகளின் ஒருமுனை நாகப்படை எடுத்து ஆடுவது போல இருக்கும். அதனால்தான் பாம்பு படகு என்று பெயர். திருமாலுக்கும் மகாபலிக்கும் பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு படகு பந்தயம் தொடங்கும். நதியின் இருபுறமும் மக்கள் நின்று கைதட்டியும், உரத்து குரல் கொடுத்தும் உற்சாகப்படுத்துவார்கள். வென்றவர்களுக்குப் பெரும் பரிசு வழங்கப்படும். மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். கேரளத்துப் பெண்கள் அவர்களின் பாரம்பரிய வெள்ளை உடை அணிந்து கும்மி அடித்து மகிழ்வார்கள். 'ஓண சத்தியா' சிறப்பு பெறும்.
நாம் எந்த நிலையில் பிறந்து இருந்தாலும் இறையருள் இருக்குமானால் இவ்வுலகில் உயர்வுடன் வாழ முடியும் என்பதை மகாபலியின் திருவோண பண்டிகை நினைவூட்டுகிறது.