

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கோடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ கோடி கொடுத்த நாதர் (அபிராமேஸ்வரர்) சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரு கோடி சித்தர்கள் வழிபட்டதாக கூறப்படும் இந்த ஆலயம் அதன் தனித்துவமான சிறப்புகளுக்காக அறியப்படுகிறது.
மூலவர் கோடி கொடுத்த நாதர், அபிராமேஸ்வரர் அம்பிகை முத்தாம்பிகை, ஓலை படித்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.
பலிபீடம் மற்றும் நந்தி (ரிஷபம்) கொண்ட கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி தனியாக வீற்றிருக்கிறார். வெளிப்பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் மற்றும் நாகர் சிலைகள் உள்ளன. கோவிலின் கிழக்குப் பகுதியில் ஜேஷ்டா தேவி, மகிஷாசுரமர்த்தினி போன்றோர் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர். அம்பிகை தனி சன்னதியில் அர்த்த மண்டபத்தில் அபய வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி காணப்படுகிறாள்.
இக்கோவில் பல்லவ காலத்தைச் சேர்ந்தது. அதாவது 7 முதல் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கோவிலின் சிறப்பு அம்சங்கள்:
ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோவில் உடனுறை ஸ்ரீ முத்தாம்பிகை அம்மன் கோவிலில் ஒரு காலத்தில் ஒரு கோடி சித்தர்கள் தங்கி, சிவபெருமானை வேண்டி தவம் செய்ததாக ஆன்மீக வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால் ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட ஆலயம் இது என்பதுடன் இந்த ஊரின் பெயரும் 'ஒரு கோடி' தான். இந்த முத்தாம்பிகை அம்மனை 'ஓலை படித்த நாயகி' என்றும் அழைக்கிறார்கள்.
உலகிலேயே சிறிய வாசல்:
இந்த கோவிலின் நுழைவு வாயில் உலகிலேயே மிகச்சிறியதாக (ஒரு சிறிய சாளரம் போல) அமைக்கப் பட்டுள்ளது. ஒரு கண் வைத்துப் பார்க்கும் அளவிற்கு மிகச் சிறியதாக உள்ளது. இந்தச் சிறிய துவாரத்தின் வழியாக மட்டுமே மூலவரைக் காணமுடியும். பூஜை செய்வதற்கு இன்னொரு வழி இருக்கிறது. அதில் சென்றால் சிவலிங்கத்தை நேரில் காணலாம்.
பக்கவாட்டில் சாதாரணக் கதவுகள் இருந்தாலும், இந்த சிறிய துவாரத்தின் வழியே இறைவனைக் காண்பதே இங்கு மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. சித்தர்களின் அபூர்வ சுவடிகளைப் பாதுகாக்கும் பொருட்டும், சித்தர்களின் சூட்சுமங்களை பாதுகாக்கும் பொருட்டும் இந்த ஆலயம் உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயிலுடன் இப்படி சிறியதாக அமைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.
இங்கு அருளும் கோடி கொடுத்த நாதரை வழிபட வறுமை நீங்கி கோடி கோடியாய் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
கோடி கொடுத்த நாதர்:
இக்கோவிலின் மூலவர் கோடி கொடுத்த நாதர் ஆவார். உலகிலேயே மிகச் சிறிய நுழைவாயிலைக் கொண்ட இக்கோவில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. இந்த இறைவனை வழிபட செல்வம் பெருகும். இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் கோடி மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவில் 2000 வருடங்களுக்கு மேல் பழமையானது. இந்தக் கோடி கொடுத்த நாதரை தரிசிக்க உலகிலேயே மிகச் சிறிய வாசல் கொண்ட கோவில் இதுதான். கோவிலில் சிறிய துவாரம் வழியாகவே சிவலிங்கத்தைக் காண முடிகிறது.
பூஜை செய்வதற்கு என்று இன்னொரு வழி இருக்கிறது. அதில் சென்றால் சிவலிங்கத்தை நேரில் காணலாம். வாசலில் இருந்து நேராக பார்க்கும் பொழுது அம்மன் சிலை தான் தெரியும். ஆனால் பக்தர்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று தரிசிக்க அனுமதி இல்லை. வெளிவாசல் வழியாகவே சிவனை வழிபட வேண்டும்.
சூரியன் உதயமாகும் பொழுது இந்த சிறு துவாரம் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் நெற்றியின் மேல் படுகிறது. இந்த அற்புதமான காட்சியைக் காண்பதற்காகவே மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து தரிசிக்கிறார்கள். இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட நினைத்த காரியங்கள் நடைபெறும் என்பது ஐதீகம்.
கோவில் அமைந்துள்ள இந்த அழகிய இயற்கை சூழல் மிகுந்த கிராமத்தில் மொத்தம் 230 வீடுகள் மட்டுமே உள்ளன. ஆயிரத்திற்கும் குறைவான மக்களே இங்கு வசிக்கிறார்கள். நெல் விவசாயம் தான் இங்கு பிரதானத் தொழிலாக உள்ளது. இங்குள்ள பல சிலைகள் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு பின்பு கோவில் அருகே நிறுவப்பட்டுள்ளதாகவும், கோவிலின் உள்ளே பல்வேறு அரிய வகை ஓலைச்சுவடிகள் இருந்ததாகவும், நாளடைவில் அவை காணாமல் போயும், பலரால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன என்றும் கூறப்படுகிறது.
எங்குள்ளது?
இந்த ஆலயம் விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் உள்ள தோகைப்பாடி என்ற இடத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஒரு கோடி கிராமம் அமைந்துள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.