

வீடுகளில் புதுமனை புகுவிழாவின்போது பால் காய்ச்சும் நிகழ்வு மிக முக்கியமான ஒரு சம்பிரதாய நிகழ்வாகும். அப்போது அடுப்பில் பால் பொங்கி வழிவது சுப சகுனமாகவும், ஒரு முக்கியமான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
"பால் பொங்குவதுபோல வாழ்க்கை பொங்கட்டும்" எனப் பெரியவர்கள் வாழ்த்துவார்கள். ஆனால், பால் பாத்திரத்தை விட்டு வெளியே பொங்கி வழிவது பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன, அறிவியல் ரீதியான விளக்கங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
சாஸ்திரமும் நம்பிக்கைகளும்
ஆன்மீக ரீதியாகவும் சாஸ்திர ரீதியாகவும் பால் என்பது லட்சுமி தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. வெண்மை, தூய்மை, வளம் ஆகியவற்றின் குறியீடாகப் பால் விளங்குகிறது. பால் பொங்கி வழிவது அந்த வீட்டில் செல்வம், தானியம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை நிரம்பி வழியும் என்பதைக் குறிக்கும் சுப சகுனமாகப் பார்க்கப்படுகிறது.
புதுமனை புகுவிழா போல புதிய தொழில் தொடங்கும்போது பால் காய்ச்சி பொங்க வைப்பது, தொழில் வளர்ச்சி மற்றும் வணிகத்தில் லாபம் பெருகுவதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. சுப நிகழ்ச்சிகளின்போது பால் பொங்குவதைப் பார்க்கும் போது, மனித மனங்களில் "நமது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகப்போகிறது" என்ற நம்பிக்கையும் நேர்மறை ஆற்றலும் தானாகவே உருவாகிறது.
திசைகளின் பலன்: பால் எந்த திசையில் பொங்கி வழிகிறது என்பதைப் பொறுத்தும் பலன்கள் கூறப்படுகின்றன. கிழக்கு திசையில் பொங்கினால் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், தெற்கு திசையில் பொங்கினால் கவனமாக இருக்கவேண்டும், மேற்கு திசையில் பொங்கினால் கடன் தீரும், வடக்கு திசையில் பொங்கினால் பண வரவு கூடும் என்பது ஐதீகம்.
அளவோடு பொங்குதல்:
பால் பாத்திரத்தின் விளிம்பு வரை பொங்கி, சிறிதளவு மட்டும் அடுப்பின் மீது வழிந்து விழுவது சுபமாகக் கருதப்படுகிறது. அதற்காக முற்றிலும் எல்லாப் பாலும் பொங்கி, அடுப்பு அணைந்து போகும் அளவுக்குக் கீழே வழிந்து விழுவது கவனக்குறைவின் அடையாளமாகும். அது சுபமாகக் கருதப்படாது.
தை முதல் நாளில் புதுப் பானையில் பச்சரிசி, வெல்லமிட்டுப் பால் பொங்கி வரும்போது "பொங்கலோ பொங்கல்!" என மக்கள் கூவி மகிழ்வார்கள். இது மிகப்பெரிய மங்கல நிகழ்வாகும். குடும்பத்தில் வளமும் மகிழ்ச்சியும் பொங்குவதை இது குறிக்கிறது.
அறிவியல் விளக்கம்:
பாலில் நீர், கொழுப்பு புரதம் மற்றும் லாக்டோஸ் ஆகியவை கலந்துள்ளன. பாலைச் சூடாக்கும் போது, அதில் உள்ள நீர் ஆவியாக மாறத் தொடங்கும். அதே நேரத்தில், பாலில் உள்ள புரதமும் கொழுப்பும் அடர்த்தியாகி, பாலின் மேல் பகுதியில் மெல்லிய ஆடை போன்ற படலத்தை உருவாக்குகின்றன.
அடிபாகத்தில் உள்ள நீர் கொதித்து ஆவியாக மாறும்போது, மேலே படிந்துள்ள ஆடை அந்த ஆவியை வெளியேற விடாமல் தடுக்கிறது. சூடு அதிகரிக்க அதிகரிக்க, நீராவியின் அழுத்தம் அதிகமாகி, மேலே உள்ள ஆடையைத் தள்ளிக்கொண்டு மேல்நோக்கி எழுகிறது. இதுவே பால் நுரைத்து பொங்கி வழிவதற்குக் காரணம்.
பால் பொங்கி வழிவதைத் தடுக்கும் முறைகள்:
வீட்டில் தினசரி பால் காய்ச்சும் போது பொங்கி வழிந்து அடுப்பில் இருக்கும் ஸ்டாண்டை நனைத்து, தீய்ந்த வாடையை வீடு முழுக்கப் பரப்பும். அடுப்பை சிம்மில் வைத்து பாலைக் காய்ச்சும்போது, நீராவி மெதுவாக வெளியேறி ஆடையை மிதமாக உயர்த்தும்.
சட்டெனப் பொங்கி வழியாது. பால் பொங்கி வரும்போது சில துளிகள் தண்ணீரைத் தெளித்தால், நுரை அடங்கும். பாத்திரத்தின் மேலே ஒரு மரக்கரண்டியை குறுக்கே வைத்தால், அது நுரையை உடைத்து ஆவி வெளியேற வழிவகுக்கும். பால் கீழே வழியாது.
புதுமனை புகுவிழாவின் போது அல்லது விசேஷ நாட்களில் பால் பொங்குவது என்பது மக்களின் மனதிற்குள் ஒரு நேர்மறை ஆற்றலையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அந்த வகையில் அது ஒரு அழகான கலாச்சார நம்பிக்கை. அதே நேரத்தில், அறிவியல் ரீதியாக அது திரவத்தின் தன்மையால் நடக்கும் இயல்பான நிகழ்வு.
இந்தத் தகவலைப் படிப்பதன் மூலம் வீடுகளில் பால் பொங்குவது குறித்த தேவையற்ற பயங்கள் நீங்கி, ஆன்மீக நம்பிக்கைகளின் பின்னணியில் உள்ள சரியான திசைப் பலன்களையும், அன்றாட வாழ்வில் பால் பொங்கி வழியாமல் தடுப்பதற்கான எளிய அறிவியல் வழிமுறைகளையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.