
'ரிஷிகளில் நான் வியாசராக இருக்கிறேன்' என்கிறார் பகவான் கிருஷ்ணர். வியாச முனிவரை, அவர் வேதங்களைத் தொகுத்து வழங்கியதால், ‘வேத வியாசர்’ என்று அழைப்பதுண்டு. வேத வியாசர் அவதரித்த நாள் ஆதலால் ஆஷாட மாத பௌர்ணமி, ‘வியாச பௌர்ணமி’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. நமது கலாசாரத்தில் குரு அல்லது ஆசிரியர் எப்போதும் கடவுளுக்கு நிகராகக் கருதப்படுகிறார். குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்பது நாம் நமது குருமார்களுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். பிறப்பைக் கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவைக் கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தைப் பார்க்கலாம் என்பதற்காக இவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதம் ஆகியவற்றை எழுதிய ஒரே குருவான வியாசருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாளை, ‘வியாச பௌர்ணமி என்றும் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்.
நேபாளத்தில் இந்தப் பண்டிகை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பௌத்தர்களும் குரு பூர்ணிமாவை, ‘புத்த பூர்ணிமா’ என்று சிறப்பித்து வழிபடுகிறார்கள். இந்த நாளில் சீடர்கள் கடவுளுக்கு நிகரான தங்கள் குருக்களை வழிபட்டு மரியாதை செலுத்துகிறார்கள். ஜைனர்கள் ஸ்ரீ மகாவீரரையும், பௌத்தர்கள் புத்தரையும் வணங்குகிறார்கள். இந்துக்கள் வேத வியாசர் என்னும் மகரிஷியை வணங்குகிறார்கள்.
மாணவர்கள் தங்களுக்குக் கல்வி கற்றுக்கொடுத்த குருவை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய ஸ்ரீ கிருஷ்ணர், வேதங்களைத் தொகுத்த வேத வியாசர் உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதிசங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருளைப் பெறுவர்.
தன்னையறிய விரும்புவர்களுக்கு, அதைப் பற்றிய தேடலில் ஈடுபடுகிறவர்களுக்கு குருவிடம் அடைக்கலம் புகுமாறும் குருவிற்கு சேவை செய்யுமாறும் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். ஆத்ம ஞானமானது, ஒருவர் தன்னுடைய சுய முயற்சியால் அடைந்து விட முடியும் என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு சூட்சுமமாகவும் அறிவு நிலைக்கு அப்பாற்பட்டும் இருக்கிறது. மனிதர்களின் அக இருளை (அஞ்ஞானத்தை) நீக்கி (மெய்ஞானத்தை) ஆத்ம ஞானத்தை ஓளிர வைப்பவர்தான் குரு.
இவ்வுலக வாழ்க்கையில் இன்ப, துன்பங்களில் உழன்று சம்சார சாஹரத்தை நீந்திக் கடக்க முடியாமல் அவதிப்படும் மாந்தர்களை கருணையோடு கரையேற்றவே மஹான்கள் அவதரித்து குருவாக வழிகாட்டுகிறார்கள். குரு பூர்ணிமா நம் மனதிலிருந்து இருளை அகற்றும் ஆசிரியர்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தின் அனைத்துப் புனித நூல்களிலும் குருவின் இன்றியாமையைப் பற்றியும் குருவிற்கும் சிஷ்யனுக்கும் இருக்கும் அசாதாரணமான பந்தத்தையும் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆகவே, குரு பூர்ணிமா தினத்தன்று நம் குருமார்களை வணங்கி வழிபட்டு சிறப்படைவோம்.
இந்த பாரத புண்ணிய பூமியில் எத்தனையோ மஹான்கள் அவதார புருஷர்களாக இந்த மண்ணில் பிறந்திருந்தபோதிலும், மனிதர்களோடு கலந்து பழகி, அவர்களோடு ஒருவராக எளிமையாக வாழ்ந்து, அதேசமயம் அவர்கள் ஆன்மிகத்தில் முன்னேற்றமடையவும் ஒரு குருவாக இருந்து வழி காட்டியிருக்கிறார்கள். குரு பூர்ணிமா நாளில் நாம் வணங்கும் மகானை நினைத்து அவர் படத்துக்கு ஒரு மலராவது சாத்தி வணங்குவது நம்மை என்றென்றும் நல்ல நிலைமையில் வைக்கும்.