
இந்து மதம் சார்ந்தவர்களின் வீட்டு பூஜையறையில் அவர்களின் விருப்ப தெய்வங்களாக பல கடவுள்களின் உருவச் சிலைகள் இடம்பெற்று இருக்கும். விநாயகர், முருகன், லக்ஷ்மி, சரஸ்வதி, பெருமாள் போன்ற கடவுள்களின் படங்கள் இருப்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வராது. ஆனால், முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான சிவபெருமானின் அம்சமாக வழிபடப்படும் சிவலிங்கத்தை வீடுகளில் வைத்து வணங்கலாமா என்பதில் மட்டும் எப்போதுமே அனைவருக்கும் தீராத சந்தேகம் உண்டு. காரணம், அழிக்கும் செயலுக்கு மூலகாரணமாக அவரே விளங்குகிறார் என்பதே.
அழித்தல் எனும் அந்த சொல்லுக்கு நமது மனதில் உள்ள மாயைகளை அழித்துக் காக்கும் கடவுளாகவும் சிவபெருமானை வணங்கலாம் என்பதால் ஆன்மிகம் வகுத்த சில நியதிகளின்படி சிவலிங்கத்தை வீடுகளில் வைத்து வணங்கலாம் என்கிறார்கள் பெரியோர்கள். வீடுகளில் சிவலிங்கம் வைத்து இருப்பவர்கள் எப்படி வழிபட வேண்டும்? எப்படி அபிஷேகம், ஆராதனைகள் செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக, ஆலயங்களில் பெரிய அளவில் இருக்கும் சிவலிங்கத்தை வீடுகளில் வைப்பது முறையல்ல என்பதால் சிறிய அளவிலான லிங்கம் வைத்து வழிபடலாம். அதிலும் உள்ளங்கைகளுக்குள் அடங்கும் அளவு இருப்பது நல்லது என்ற கருத்தும் உண்டு. ஆனால், தற்போது அதை விட சற்று பெரிய கல்லில் ஆன சிவலிங்கங்களை கோயில்களிலேயே விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது.
சிவனுக்குள்ளேயே உலகம் மட்டுமின்றி, அனைத்து கடவுள்களும் ஐக்கியமாகி விடுவர் என்பதால் சிவலிங்கம் இருக்கும்போது மற்ற தெய்வங்களை உடன் வைக்கும் அவசியமில்லை எனவும் கருதப்படுகிறது. லிங்கத்துடன் நந்தி சிலையும் இருப்பது மிகவும் முக்கியம். லிங்கம் மட்டும் தனியே இருப்பது நல்லதல்ல. அத்துடன் சிவலிங்கத்தை கிழக்கு பக்கம் பார்த்தவாறு திறந்த தூய்மையான இடத்தில் வைக்க வேண்டும். கிழக்கு பக்கம் சிவலிங்கம் என்றால், வணங்குபவர்கள் தெற்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு வணங்குதல் சிறப்பு.
வீட்டில் இருக்கும் லிங்கத்துக்கு தினமும் காலையில் நாம் குளித்ததுமே, தண்ணீர் ஊற்றி அபிஷேம் செய்து பிரசாதம் படைத்து வழிபடுவது நல்லது முடியாது என்பவர்கள் வாரம் ஒரு முறையாவது அபிஷேகம் செய்வதை கடைப்பிடிக்க வேண்டும். காரணம் சிவபெருமான் ஒரு அபிஷேகப் பிரியர்.
வீட்டில் ஒரு எளிய சிவலிங்க அபிஷேகத்தை எப்படி செய்வது?
ஒருமுகப்படுத்திய பக்தியுடன் வீட்டில் அபிஷேகம் செய்வது அர்த்தமுள்ள மற்றும் சுகமான ஆன்மிக அனுபவமாக இருக்கும். முதலில் அபிஷேகம் செய்யும் இடத்தை தூசி தும்பு பழைய பூக்கள் ஆகியவற்றை அகற்றி நீரால் துடைத்து சுத்தம் செய்யவும். சிவலிங்கத்தை தூய நீரால் கழுவி பலகை போன்ற ஒரு பீடத்தில் அல்லது சுத்தமான மேற்பரப்பில் வைக்கவும்.
அபிஷேகம் செய்வதற்கு முன்பு அதற்கு தண்ணீர், பால், தேன், தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றை சேகரித்து தயாராக வைக்கவும். பூக்கள் (வில்வ இலைகள், மல்லிகை அல்லது ரோஜா இதழ்கள் போன்றவை) சந்தன விழுது அல்லது பொடி, மணம் தரும் தூபம் (தூபக் குச்சிகள்), தீபம் (விளக்கு) ஆகியவற்றையும் எடுத்து வைக்கவும். ஏனெனில், சிவலிங்கத்தின் அபிஷேகம் பொருள் தாமதம் நிமித்தம் காக்க வைக்கக் கூடாது.
வீடுகளில் நாம் கீழே அமர்ந்து அபிஷேகம், ஆராதனைகள் செய்வது நல்லது. முதலில் விளக்கை முறைப்படி ஏற்றி வைத்து விநாயகப் பெருமானுக்கு பிரார்த்தனை செய்து அவரது ஆசிகளைப் பெறுவது முக்கியம். பிறகு தண்ணீரில் தொடங்கி, பால், தேன், நெய், தயிர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றி அபிஷேகம் செய்யவும். ஒவ்வொரு அபிஷேகம் முடிவில் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து, பூப்போட்டு (உதிரிப்பூக்கள் போதும்) ஊதுபத்தி, கற்பூரம் காண்பிக்கவும். பின்னர் நீர் ஊற்றி அடுத்த அபிஷேகம் செய்யவும்.
அபிஷேகம் நிறைவு பெற்றதும் சிவலிங்கத்தை எடுத்து திருநீறு அல்லது நீர் மேல் வைத்து சந்தனம் பூசி அலங்கரித்து மஞ்சள் துணியை துண்டு போல் அணியவும். (இது அவரவர் விருப்பம்) பூக்கள் கொண்டு மேலும் அலங்கரிக்கவும். இதேபோல் நந்திக்கும் நடைபெற வேண்டும்.
வெற்றிலை பாக்கு, பழத்துடன் நைவேத்தியத்தை (பிரசாதம்) படைத்து அனைவரும் சேர்ந்து, 'ஓம் நமசிவாய' மந்திரம் போன்ற சிவ மந்திரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்து கற்பூர ஆரத்தி காண்பிக்கவும். திருநீறு மற்றும் பிரசாதங்களை பகிர்ந்து அபிஷேகம் ஆராதனையை முடிக்கலாம். அபிஷேகத்தின்போது மணி அடிப்பதும், சிவாயநம மந்திரம் உச்சரிப்பதும், அமைதியான, நல்ல எண்ணங்களுடன் இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அபிஷேகம் செய்து நீரை நமது கால்களில் படாதவாறு அருகில் மரம், செடிகள் அல்லது நீர்நிலைகளில் ஊற்றுவது நல்லது. தற்போது வீட்டில் அபிஷேகம் செய்வதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட பாத்திரம் கடைகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தூய மனதுடன் செய்யும் எந்த எளிய அபிஷேகத்தையும் நிச்சயம் இறைவன் ஏற்று நன்மை புரிவார் எனும் நம்பிக்கை முக்கியம்.