
சிவ கணங்களுக்குத் தலைவர் நந்தி தேவர். சிவாலயங்களில் அதிகார நந்தியாக இருந்து பக்தர்களின் மனங்களை பரிசோதித்து அனுப்பும் அதிகாரம் பெற்றவர். இதன் காரணமாகவே பிரதோஷ வேளையில் நந்தியின் காதுகளில் தங்களது குறைகளைச் சொன்னால் அவை முற்றிலும் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் அன்றைய தினத்தில் நந்தியின் காதில் மனமுருக பிரார்த்தித்தால் விரைவில் திருமணம் நடைபெறும். தொடர்ந்து பன்னிரண்டு மகா பிரதோஷ வேலைகளில் சிவாலயம் சென்று நந்தி தேவரை முறையாக பூஜித்து, நந்தி தேவரின் காதருகில் சென்று மற்றவர் கேட்காத வகையில் நம் குறைகளைக் கூறி வந்தால் நிச்சயம் வேண்டிய பலன் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிவன் கோயில் நுழைவு வாயிலில் இருப்பவர் அதிகார நந்தி. முகம் மட்டும் பசு வடிவிலும், உடல் சிவ சொரூபமாகவும் இவர் காட்சி தருவார். இவருடைய அனுமதி பெற்றே ஆலயத்தில் நுழைகிறோம் என்பது ஐதீகம் ஆகும்.
சிவபெருமான் பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நடனம் ஆடுவதால் நந்தி தரிசனம் சிவ தாண்டவ தரிசனம் ஆகிவிடுகிறது. நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமானை தரிசித்தால் எல்லா தேவதைகளையும் தரிசித்த பலன் உண்டு.
நந்தி ரிஷப சொரூபமாகவும் சிவ சொரூபமாகவும் உள்ளவர். சிவன் சன்னிதியில் காட்சி தரும் நந்தியின் நாக்கு இடது நாசியை அடைத்துக் கொண்டிருக்கும். நந்தி தனது வலது நாசியால் சுவாசிப்பதாக இதற்குப் பொருள். இதை சூரிய கலை என்கிறோம். சிவன் கோயில் அம்மன் சன்னிதியில் உள்ள நந்தியின் நாக்கு வலது நாசியை மூடியது போல் இருக்கும். இங்கு நந்தி இடது நாசியினால் சுவாசம் செய்கிறார் என்பது பொருளாகும். இது சந்திர கலை எனப்படும். ஆலயத்தின் வெளியே அமர்ந்திருக்கும் நந்தியின் நாக்கு இரு நாசிகளுக்கும் இடையில் நடுவாக துருத்திக் கொண்டிருக்கும். வாசியோகம் என்பதற்கு நந்தியே அதிபதி எனலாம். இவரது மூச்சுக்காற்றில் ஊஞ்சலில் இறைவன் ஆடுவதாக ஒரு நம்பிக்கை.
சுவாசக் கலை வலது - இடது அல்லது சூரிய - சந்திர கலைகள் என்று வேறுபடலாம். நமது கைவிரலைப் பயன்படுத்தி நாசியை மாற்றி மாற்றி அடைத்து சுவாசப் பயிற்சியை மேற்கொள்கிறோம். நந்தி கைகளுக்கு பதிலாக நாவை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
இறைவன் கருவறையில் இருந்து வடியும் திருமஞ்சன நீர் (அபிஷேக நீர்) கோமுகம் வழியே வெளியேறுகிறது. அந்தக் கல்லின் வடிவம் பசுவின் பின்பகுதியைப் போன்று அமைக்கப்பட்டிருக்கும். பசுவை பின்பகுதியில்தான் வழிபட வேண்டும். எனவே, அதை கோமுகம் என்கிறோம். கோ முகத்திலிருந்து வெளிவரும் அபிஷேக நீர் புனிதமாகக் கருதப்படுகிறது. பிரதோஷப் பிரசாதமான அபிஷேக நீர், காப்பரிசி, திருநீறு போன்றவை மனதில் மற்றும் உடலில் உள்ள மாசுகளைப் போக்கி நற்கதியை அளிக்கும் என்றும் கூறுவர்.