
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குழந்தை வளநாட்டில் பந்த காட்சி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இந்த திருவிழா குழந்தை வளநாட்டில் உள்ள பத்து கிராமங்களும் ஒன்றிணைந்து நடத்திய மிகப் பிரம்மாண்டமான தேர் திருவிழாவாக இருந்தது. சோழர்கள் காலத்தில் நாடுகள், நிர்வாக ரீதியாக பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. பத்து முதல் பதினெட்டு ஊர்கள் வரை கொண்டது ஒரு வளநாடாகக் கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு வளநாட்டிற்கும் ஒரு தலை கிராமம் இருக்கும். அந்த தலைக் கிராமத்தில் இருந்து வளநாட்டில் உள்ள கிராமங்களை நிர்வாகம் செய்வார்கள். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களின் பெயர்கள் கோட்டை என்று முடியும். பல கிராமங்களின் பெயர்கள் சோழ மன்னர்களின் பெயர்களையோ அவர்களின் பட்டப்பெயர்களையோ தாங்கி நிற்கும்.
ராஜராஜசோழன் தனது மகள் குந்தவை நாச்சியாருக்கு சீதனமாக வழங்கிய பல வளநாடுகளில் குழந்தை வளநாடு முதன்மையானது. இது குந்தவை வளநாடு என்றும் குழந்தை வளநாடு என்றும் அழைக்கப்படுகிறது.
சோழர்கள் காலத்தில் இருந்து ஒவ்வொரு வளநாட்டு ஒற்றுமைக்கும் ஊர் கூடி திருவிழா எடுக்கும் நடைமுறை இருந்தது. சோழர் காலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்ற பந்த காட்சி திருவிழா பின்னர் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் திருவிழாவாக மாறியது. பந்த காட்சி என்பது ஒரு இரவில் பத்து ஊர்களின் தேர்கள் ஒரே இடத்தில் ஒன்றாக கூடும். தேர்கள் வரும் போது ஏராளமான மக்கள் தீப்பந்தங்களின் ஒளியில் இறைவனை வழிபாடு செய்வார்கள். பந்தங்களின் ஒளியில் கடவுள் காட்சி தருவதால் பந்த காட்சி என்று அழைக்கப்படுகின்றது.
பனையக்கோட்டை, சடையார் கோயில், துறையுண்டார் கோட்டை, அருமலைக் கோட்டை, ஆர்சுத்திபட்டு, சின்னப்புலி குடிக்காடு, நார்தேவன் குடிக்காடு, வடக்கு நத்தம், அரசப்பட்டு, கொருக்கப்பட்டு ஆகிய பத்து ஊர்களை உள்ளடக்கியது குந்தவை (அ) குழந்தை வளநாடு . இந்த வளநாட்டிற்கு தலைக் கிராமமாக பனையக்கோட்டை இருக்கிறது.
பத்து ஊர்களில் இருந்தும் பாரம்பரிய கோயில்களில் உள்ள தெய்வங்களான விளக்கேற்றி அம்மன் , சூரப்பன் , சூலப்பிடாரி , காளியம்மன் , முக்கரை அம்மன் , முத்து மாரியம்மன் , சின்ன விளக்கேற்றி அம்மன், மழை மாரியம்மன், மாகாளி அம்மன், பூமாரி அம்மன் ஆகியோர் பத்து தேர்களில் இரவில் கிராம வலம் வந்து இறுதியாக பனையக்கோட்டையில் உள்ள பந்த காட்சி திடலில் ஒன்று கூடுவார்கள். இதற்காக பத்து தேர்கள் திருவிழா நடைபெறும் அன்று புதிதாக உருவாக்கப்படுகின்றன.
2025 ஜூன் 5-ம்தேதி கோவிலில் காப்பு கட்டப்பட்டது. ஜூன் 13-ம் தேதி இரவு 10 மணிக்கு தேர்கள் புறப்பட தயாராகின. ஒவ்வொரு தேரும் பெரும் ஆரவாரத்தோடு பிரம்மாண்டமாக பந்தக் காட்சி திடலை நோக்கி வரும். ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் நடுவே ஒளி வண்ணத்தில் தேர் ஊர்ந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 12 மணிக்கு இடை விடாத பிரம்மாண்டமான வாணவேடிக்கை தொடங்கி விடியும் வரை தொடர்ந்தது.
அதிகாலை 4 மணிக்கு முதலில் விளக்கேற்றியம்மன் தேர் திடலுக்கு வந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு தேராக 10 தேரும் திடலை வந்து அடைந்தது. இது போல பத்து ஊரும் சேர்ந்து 10 தேரை கொண்டு திருவிழாவை 10 ஆண்டுக்கு ஒருமுறை நடத்துகின்றது. பந்த காட்சி முடிந்ததும் இருநாள் கழித்து தேர் ஊரில் ஒவ்வொரு தெருவாக ஒவ்வொரு வீட்டிற்கும் வரும். ஒவ்வொரு வீட்டிலும் கிடா வெட்டி வீட்டில் உள்ளவர்களுக்கு விருந்து வைப்பார்கள்.