
மரத் தேர் தெரியும், வெள்ளி தேர் தெரியும், தங்கத் தேர் தெரியும். ஆனால், வைரத் தேர் எந்தக் கோயிலில் உள்ளது தெரியுமா? தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை அகிலாண்டேஸ்வரி சமய ஜம்புநாதீஸ்வரர் கோயில். இந்த ஆலயத்தின் தேர் இலுப்பை மரத்தின் வைரம் பாய்ந்த பலகைகளைக் கொண்டு செய்யப்பட்டுள்ளதால் இந்தத் தேரினை ‘வைரத் தேர்’ என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். இந்தத் தேர் பங்குனி உத்திர திருவிழாவில் பூரம் நட்சத்திரத்தன்று வீதியுலா வரும்.
இத்தலம் மகிமை மிகுந்த முருகன் திருத்தலமாகும். இத்தலத்தில் வழக்கத்திற்கு மாறாக மயில் வாகனம் இடப்புறம் தலையையும் வலப்புறம் தோகையுடனும் காட்சி தருகிறது. அருணகிரிநாதர் திருப்புகழால் துதித்துள்ள முருகத் தலங்களில் இதுவும் ஒன்று. ‘சம்பாதி’ என்ற கழுகு முனிவர் இத்தல முருகனை வழிபட்டதால் இந்த ஊர் கழுகுமலை என்று பெயர் பெற்றது. யானை படுத்திருப்பது போன்ற தோற்றமுடன் குன்றின் முன்பகுதி திகழ்கிறது. இங்குள்ள மலையில் கற்பாறையை குடைந்து மூர்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடைவரை கோயிலாகும். இக்கோயிலுக்கு விமானமும், சுற்று பிராகாரமும் கிடையாது. மலையை சுற்றித்தான் பிராகார வலம் வர வேண்டும்.
இந்த மலை முன்னூறு அடி உயரம் கொண்டது. கருவறையும் அர்த்த மண்டபமும் மலையை குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. ராமாயணக் காலத்தில் ஜடாயுவின் தம்பியான சம்பாதி ஜடாயுவுக்கு ஈமக் கிரியை செய்ய முடியாமல் போனதால் ஏற்பட்ட பாவத்திலிருந்து விடுபட இத்தலத்தில் உள்ள சிவபெருமானை ஆம்பல் மலர்களால் பூஜித்து அவர் அருள் பெற்றதாக வரலாறு. சம்பாதியின் தோஷம் நீங்க தந்தையாருக்கு முருகன் சிபாரிசு செய்ததாகவும், இந்த சம்பவம் தைப்பூசத் திருநாளன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இத்தல முருகப்பெருமானுக்கு ஒரு முகமும் ஆறு கரங்களும் உள்ளன. தென்னிந்தியாவிலேயே இம்மாதிரியான திருக்கோலம் கொண்ட முருகன் கோயில் இது மட்டுமே. தாரகாசுரனை வதம் செய்த கார்த்திகேயனை அதே கோலத்துடன் காட்சி அளிக்கிறார் என்று கூறப்படுகிறது. முருகன் மேற்கு முகமாக அருளும் சன்னிதானத்தை உடைய மலை. தனது இடது காலை மயிலின் கழுத்திலும் வலது காலை தொங்கவிட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சி தருகிறார்.
இந்தத் தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது. எனவே, சூரசம்கார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். முருகப்பெருமானுக்கு தனி பள்ளியறையும் சிவபெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருக்கின்றன. இந்தக் கோயிலின் தெப்பக் குளத்தில் பால் போன்ற நிறத்தில் குடிநீர் கிடைப்பதால் சுற்றுப்புற கிராம மக்கள் அனைவருமே இந்த குளத்தைதான் பயன்படுத்துகிறார்கள்.
அதிமதுர பாண்டியன் என்ற அரசன் வெகு காலத்திற்கு முன்பு பழங்கோட்டையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இந்த மன்னனுடைய அரண்மனைக்கு சுமார் ஒரு மைல் தொலைவில் உவண வனம் என்ற காடு ஒன்று இருந்தது. காட்டில் ஒரு மலை முன்னூறு அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளித்து வந்தது. இந்த மலையை உவணகிரி என்று அழைப்பர்.
ஒரு நாள் அதிமதுர பாண்டியன் வேட்டையாடி களைப்புற்று உவண வனத்தில் உள்ள மலையின் அடிவாரத்தில் ஒரு வேங்கை மரத்தடியில் தங்கி இளைப்பாறினான். அப்போது ஒரு பசு தானாகவே ஒரு பாறையின் மேல் பால் சுரப்பதையும் பூஜை, மணியோசை ஒலிப்பதையும் கனவில் கண்டான். விழித்தெழுந்த அவன் பசு பால் சுரந்த பாறையின் அருகில் சென்று அதை உற்று நோக்கினான். அரசன் வருவதைப் பார்த்ததும் அந்த பசு மருண்டு ஓடத் தொடங்கியதாம். பூஜை மணியின் ஓசையும் குறைந்ததாம். இது குறித்த சிந்தனையுடன் மன்னன் ஊர் திரும்பினான்.
அன்று இரவே முருகப்பெருமான் இரண்டு அடியார்களுடன் மன்னன் கனவில் தோன்றி, பசு பால் சுரந்த பாறை அமைந்த இடத்தில் தனக்கு ஒரு ஆலயம் அமைக்கும்படி கட்டளையிட்டு மறைந்தாராம். இறைவனின் கட்டளைப்படி அவ்விரு அடியார்களும் மன்னனை சந்தித்து செய்தியைக் கூறினர். உடனே மன்னன் பசு பால் சுரந்த பாறைக்கு பரிவாரங்கள் சூழ விரைந்து சென்று பார்த்தபோது அந்தப் பாதையில் ஒரு குகையும் அதனுள் மயில் வாகனத்தில் அமர்ந்த முருகன் சிலையும் இருப்பதைக் கண்டான். மன்னன் மகிழ்ச்சியுடன் அந்த வனத்தைத் திருத்தி முருகனுக்கு ஒரு கோயிலையும் ஊர் பெயரை திருத்தி கழுகுமலை எனப் பெயரிட்டான். கழுகுமலை கந்தனை காணக் கண்கள் கோடி வேண்டும்.