உலகின் மிக உயரமான இடத்தில் சிவ பெருமானுக்கு கட்டப்பட்ட கோயில்தான் தூங்காநாத் கோயில். இந்த கோயிலை பாண்டவர்கள் கட்டி வழிபாடு செய்துள்ளனர். இங்குள்ள இறைவனை தரிசிக்க எப்போதும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த கோயில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்திரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது. இமயமலை தொடரில் அமைந்துள்ள இந்த கோயில் பஞ்சகேதார் கோயில்களில் மிகவும் உயரமானது. தூங்காநாத் என்றால் மிக உயரமான இடத்தில் உள்ள இறைவன் என்று பொருள்.
இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலிலிருந்து சிறிது தொலைவில் சந்திரஷீலா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சென்றால் தான் துங்காநாத் கோயில் இறைவனின் அருள் கிடைக்கும். பஞ்ச கேதார் கோயில்கள் அனைத்தும் 'கத்யூரி' கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன.
புராண வரலாறு:
* இந்து மதத்தின் நம்பிக்கையின் படி, மலைமகளான பார்வதிதேவியும் மஹாதேவரான சிவபெருமானும் இமயமலையில் வாசம் செய்கின்றனர். இந்த இடத்தில்தான் பார்வதி மகாதேவரை தனது கணவராகப் பெற கடும்தவம் செய்தார். பார்வதிதேவி தன் தவத்தின் பயனாக இறைவனையே மணந்தாள். பார்வதிதேவி தவம் செய்த இடம் என்பதால் இந்த தலத்திற்கு புராண சிறப்புகள் அதிகம். திருமண வரம் வேண்டி இறைவனை பூஜிப்பவர்கள் தூங்காநாத் சென்று இறைவனையும் தேவியையும் தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும் .
* இன்னொரு புராண கதைப்படி இராவணன் துங்காநாத் மலைப்பகுதியில் இருந்து இறைவனை தியானம் செய்வான். ஶ்ரீராமர் இலங்கை வேந்தன் ராவணனை கொன்றதால் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு இருக்கும் என்று கவலையுற்றார். இராவணன் பிறப்பால் பிராமணன் என்பதால், இராமர் தன்னை பிரம்மஹத்தி தோஷம் பீடித்து இருப்பதாகக் கருதினார். இந்த கோயிலுக்கு வந்து இராமர் மஹாதேவரை நோக்கி தவமிருந்து தன் பாவங்களை போக்கிக்கொண்டார்.
* மற்றொரு புராணக் கதையின் படி பஞ்ச பாண்டவர்கள் மஹாபாரத யுத்தத்தில் தங்களின் சகோதரர்களான கர்ணன் மற்றும் கெளரவர்களை கொலை செய்ததால் கோத்ர ஹத்யம் என்ற பெரும் பாவமும், தனது குருவும் பிராமணரும் ஆகிய துரோணரை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும் பிடித்து துன்பப்பட்டனர். தங்கள் பாவங்களிலிருந்து விடுபட அவர்கள் காசி கோயிலில் சென்று பூஜை செய்தனர்.
ஆயினும் இறைவனின் மணம் இறங்கவில்லை . மேலும், பாண்டவர்கள் போரில் நேர்மைக்கு புறம்பான செயல்களை செய்ததால், சிவபெருமான் அவர்களுக்கு காட்சியளிக்க விருப்பம் இல்லாமல் கார்வால் பகுதிக்கு சென்று நந்தியாக இருந்தார். சிவபெருமானை காணாது தவித்த பாண்டவர்கள் கர்வால் மலையில் அவரை தேடினர். இறுதியில் பீமன் ஒரு காளையை கண்டு அது தான் மகாதேவர் என்பதை அறிந்து அதன் கால்களையும் வாலையும் இறுக பற்றிக் கொண்டான். அந்தக் காளை சட்டென்று மறைந்தது. அந்த நேரத்தில் தூங்காநாத்தில் இறைவனின் கைகள் தோன்றின. ருத்திரநாத்தில் முகம் தோன்றியது , மத்திய மகேஸ்வரில் நாபியும் , கல்பேஸ்வரில் முடியும் தோன்றின. கேதார் நாத்தில் தலை உயர்ந்தது . ஐவகை ரூபங்களில் இறைவனை தரிசித்து, பாண்டவர்கள் ஐந்து இடங்களில் கோயிலையும் கட்டி வழிபட்டு பாவங்களிலிருந்து நீங்கினர்.
பயணம் :
கடுமையான பனிப்பொழிவு காரணமாக நவம்பர் முதல் மார்ச் வரை துங்கநாத் கோயில் மூடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் கோயில் இறைவன் மக்குமத் கிராமத்தில் உள்ள மண்டலேஷ்வர் கோயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பூஜிக்கப் படுகிறார். துங்கநாத் கோயிலுக்குச் செல்ல சென்னையில் இருந்து டேராடூன் வரை விமானம் அல்லது ரயில் மூலம் செல்லலாம். அங்கிருந்து சாலை வழியாக கோயிலுக்கு செல்லலாம் .