ஏன் ஐந்தாகப் பெருகினார் ஆஞ்சநேயர்? மயில் ராவண வதமும் பஞ்சமுக அனுமனின் ரகசியமும்!

உலகைக் காக்க ராம தூதன் எடுத்த ஐந்து முக அவதாரத்தின் அரிய ஆன்மீகப் பின்னணி.
பஞ்சமுக அனுமன் - Panchamukha Hanuman
பஞ்சமுக அனுமன் - Panchamukha HanumanImage credit: Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

ராமாயணக் காவியத்தின் முக்கிய கதாபாத்திரமான ராம தூதரான அனுமனுக்கு வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, சுந்தரன் எனப் பல பெயர்கள் உண்டு. அனுமன் சில கோவில்களில் பஞ்சமுகத்துடன் காட்சி தருவதைக் கண்டிருக்கிறோம். அதற்கான காரணம் பலருக்கும் தெரியாது. ராமாயணப் போரின் பொழுது பாதாள உலகத்தின் அரசனான மயில் ராவணன் (அஹிராவணன்) என்ற அரக்கனிடமிருந்து ராமர் மற்றும் லட்சுமணரைக் காப்பாற்றி, அவனை வதம் செய்வதற்காகவே ஆஞ்சநேயர் பஞ்சமுக (ஐந்து முகங்கள்) வடிவம் எடுத்தார்.

பஞ்சமுக அனுமன் புராண வரலாறு:

ராம-ராவண யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், ராவணன் தனது தம்பியும் பாதாள உலக அரவனுமான மயில் ராவணனின் உதவியை நாடுகிறான். மாயாஜாலங்கள் நிறைந்த மயில் ராவணன் ராம லக்ஷ்மணர்களை மயக்கமடையச் செய்து கடத்திச் சென்று தன் பாதாள உலகத்தில் சண்டி தேவிக்கு பலியிட முயன்றான்.

அவர்களை மீட்க அனுமன் பாதாள உலகம் சென்றார். அங்கு மயில்ராவணனின் உயிர், ஐந்து வெவ்வேறு திசைகளில் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேல்நோக்கி) எரியும் ஐந்து விளக்குகளில் மறைந்திருப்பதை அறிந்தார்.

அந்த ஐந்து விளக்குகளையும் ஒரே நேரத்தில், ஒரே நொடியில் அணைத்தால் மட்டுமே மயில் ராவணனைக் கொல்ல முடியும் என்ற ரகசியத்தை அனுமன் அறிந்து கொண்டார். ஒரு முகத்தைக் கொண்டு ஒரே நேரத்தில் ஐந்து திசைகளில் எரியும் விளக்குகளை அணைப்பது சாத்தியமில்லை என்பதால், அனுமன் விஸ்வரூபம் எடுத்து ஐந்து முகங்கள் மற்றும் பத்து கரங்களுடன் 'பஞ்சமுக ஆஞ்சநேயராக' விஸ்வரூபம் எடுத்தார்.

தன் ஐந்து முகங்களால் ஐந்து திசைகளில் இருந்த விளக்குகளையும் ஒரே மூச்சில் அணைத்து, மயில் ராவணனை வதம் செய்து ராமர் மற்றும் லட்சுமணனை மீட்டெடுத்தார்.

இதையும் படியுங்கள்:
சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்! காணக் கண் கோடி வேண்டும்!
பஞ்சமுக அனுமன் - Panchamukha Hanuman

ஐந்து முகங்களின் சிறப்புகளும் திசைகளும்:

பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஒவ்வொரு முகமும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி அமைந்து தனித்துவமான அருளை வழங்குகின்றன.

கிழக்கு திசை நோக்கி இருக்கும் ஸ்ரீ அனுமன் முகம் மனத்தூய்மை, நினைவாற்றல் மற்றும் இழந்த பெருமைகளை மீட்டெடுப்பதற்காக அருள் வழங்கும் முகம்.

தெற்கு திசையை நோக்கி இருக்கும் ஸ்ரீ நரசிம்ம முகம் பயம் நீக்கி, எதிரிகளை வெல்லும் தைரியம் மற்றும் வெற்றியை அருளும் முகம்.

மேற்கு திசையை நோக்கி இருக்கும் ஸ்ரீ கருட முகம் தீய எண்ணங்கள், மாயை மற்றும் விஷத்தன்மைகளில் இருந்து பாதுகாப்பு அளித்திட உதவும்.

வடக்கு திசையை நோக்கி இருக்கும் ஸ்ரீ வராக முகமோ கிரக தோஷங்களை நீக்குவதும், மழை போன்ற செல்வ வளத்தை பெருக்குவதற்கும் அருளும் முகம்.

மேல் நோக்கி (வானம் பார்த்து) இருக்கும் ஸ்ரீ ஹயக்ரீவ முகம் சிறந்த அறிவுத்திறன், ஞானம் மற்றும் கல்வி மேன்மையை அளித்திடும்.

ஆன்மீக ரீதியாக இந்த ஐந்து முகங்கள் மனித உடலில் உள்ள ஐந்து பிராண வாயுக்களையும் (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்), ஐந்து இந்திரியங்களையும் (ஐம்புலன்கள்) அனுமன் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதைக் குறிக்கிறது.

பஞ்சமுக அனுமன் - Panchamukha Hanuman
பஞ்சமுக அனுமன் - Panchamukha Hanuman

பஞ்சமுக அனுமனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

இவரை வழிபடுவதால் வாழ்வில் சகல நன்மைகளும், பாதுகாப்பும், வெற்றியும் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையையும், மனக்கஷ்டங்கள் நீங்கி நிம்மதியும் உண்டாகும். தீய சக்திகள், திருஷ்டி மற்றும் வாஸ்து தோஷங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம்.

செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை மற்றும் அனுமன் ஜெயந்தி நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமைகளில் அனுமனை வழிபட நவகிரக தோஷங்களான ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் பெருமளவு குறையும். மனச்சோர்வு நீங்கி எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் முக்கிய பகுதிகளிலும் அமைந்துள்ளன. புதுச்சேரிக்கு அருகில் திண்டிவனம் சாலையில் பஞ்சவடி என்னுமிடத்தில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயராக 36 அடி உயர ஒரே கல்லால் ஆன அனுமன் சிலை உள்ளது

மந்திராலயத்துக்கு அருகில் துங்கபத்ரா நதிக்கரையில் பிரசித்தி பெற்ற பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

சென்னையில் தரமணி மற்றும் கௌரிவாக்கம் போன்ற பகுதிகளிலும், திருவள்ளூரில் ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 32 அடி உயரமான பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டின் இந்த அதிசய சிவலிங்கங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
பஞ்சமுக அனுமன் - Panchamukha Hanuman