

அதிசய சிவலிங்கங்கள்:
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில். தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் கொண்ட ஆலயம். இங்குள்ள லிங்கம் 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்டது.தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் ஆண் அம்சம் கொண்டது. கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் பெண் அம்சம் கொண்டது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த சுண்ணாம்பு கல் நந்தியில் விழும் சூரிய ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
அதேபோல் கோயிலின் கருவறையின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் வெயில்காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர்காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். ஐப்பசி மாத பெளர்ணமி பூஜை அன்று மூலவருக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் மிகவும் விசேசமானது.
தேனி மாவட்டம் சின்னமனூர், பூலாநந்தீஸ்வரர் கோயிலில் பக்தர்களின் சிரசிற்கு நேர்கோட்டில் லிங்கம் அமைக்கப்பட்டிருப்பது இங்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு. கோயிலின் மூலவர் எப்படி பார்த்தாலும் ஒரே உயரத்தில் காட்சி தரும் வகையில் சிவபெருமான் காட்சி தருகின்றார். அதாவது நீங்கள் நின்று தரிசித்தாலும் சரி, அல்லது மூலவரின் முன் அமர்ந்து தரிசித்தாலும் உங்கள் உயரத்திற்கு ஏற்ப உயரம் மாறி தெரியும் அதிசயம் லிங்கமாக பூலாநந்தீஸ்வரர் காட்சி தருகின்றார்.
கோயில் என்றாலே சுவாமி சன்னதியை சுற்றுவது முக்கியமான அம்சம். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சுவாமி சன்னதியை சுற்றிக் கூடாது என்ற தடை உள்ளது. இங்கு மூலவர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம்.
சிவபெருமானின் ஜடாமுடியை மிதிக்கக் கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை உள்ளது. மேலும், இக் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு 'ஐயாறப்பா' என்று குரல் கொடுத்தால், அது மீண்டும் ஏழுமுறை எதிரொலிக்கிறது.இது சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
திருக்கருகாவூர் முல்லைவன நாதர் தல இறைவன் முல்லைவனநாதர் சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். இந்த லிங்கத்தின் சிறப்பு புற்று மண்ணினால் ஆன லிங்கம் என்பதே. அதனாலேயே இந்த லிங்க மேனிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆகவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்தமைக்கான வடுவின் அடையாளத்தினை இன்றும் காணலாம்.
செங்கல்பட்டில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ளது. ஞானபுரீஸ்வரர் ( இடைச்சுரநாதர் ) கோயிலில் மரகதக் கல்லால் ஆன சுயம்பு லிங்க மூலவர் உள்ளார். மூலவருக்குத் தேன் அபிஷேகம் செய்யும் போது மரகத லிங்கம் ஒளிவீசி ஜொலிப்பதைப் பார்க்க முடியும். இங்கு தேன் அபிஷேகம் செய்தால் சகல நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
நாகப்பட்டினம் அருகே உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் 'கோணப்பிரான்' ஆலய மூலவரை பாணாகரன் என்ற அசுரன் பெயர்த்தெடுக்க முயன்றதால் லிங்கம் கோணலாகி இத்தல ஈசன் கோணப்பிரான் என்று பெயர் பெற்றார். வடக்காகச் சாய்ந்துள்ள இந்த லிங்கம் ஓர் அபூர்வ வடிவமாகும்.
மன்னார்குடிக்கு அருகில் உள்ள திருப்பாதாளீச்சரம் என்ற திருத்தலம் உள்ளது. இத்தல இறைவன் பெயர் சர்ப்பபுரீஸ்வரர். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிபட்டு வழிபட்ட தலம். இதற்கு அடையாளமாக இந்த சுயம்பு மூர்த்தியின் மேல் பாம்பு ஊர்ந்து சென்றது போன்ற வடு உள்ளது.
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நீடுர். இங்கு சோமநாதேஸ்வரர் கோயில் உள்ளது. இந்திரன் காவிரி மணலைப் பிடித்து வைத்து பூஜித்த லிங்கம் இறுகி வெள்ளையானது. லிங்கத்தின் பின்புறத்தை நண்டு பூஜித்து. அந்த இடத்தில் அதன் கால் சுவடு பதிந்துள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள திருமலைச்சங்காட்டில் உள்ளது சங்கவனேஸ்வரர் கோயில்.இங்கு மூலவர் சங்கு போன்ற உருண்டையான வடிவில் காட்சி தருகிறார். திருமால் இத்தலத்து இறைவனை வழிபட்டு பாஞ்ஜன்ய சக்கைப் பெற்றுள்ளார் என்பதற்கான சான்று இது என்கிறார்கள்.
கொல்லூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற மூகாம்பிகை கோயில் கருவறையில் இருப்பது 'சக்தி லிங்கம் ' இது கோல ரிஷி என்பவரால் வழிபடப்பட்ட பெருமை உடையது. இந்த லிங்க பாணத்தின் மீது வைக்கப்படும் தலை போன்ற அமைப்பு ராணி சென்னம்மாள் என்பவரது உபயமாகும்.
இந்த சந்நிதியில் அபிஷேகம், சக்தி லிங்கத்துக்கு மட்டுமே செய்யப்படுகிறது. அலங்காரம் மற்றும் இதர ஆராதனைகள், மூலவரான மூகாம்பிகை அம்மனுக்கு செய்யப்படுகின்றன.
மதுரை - மானாமதுரை சாலையில் 20 கி.மீ. தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருப்புவனம். எனுமிடத்தில் உள்ளது புஷ்பவனேசுவரர் ஆலயம். மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று.
கருவறையில் மூலவர் புஷ்பவனேசுவரர் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் இந்த அமைப்பு வேறு எங்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.