

திருமண வாழ்க்கைதான் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதுடன், அடுத்ததொரு செழுமையான தலைமுறைக்கும் வித்திடுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமண வரம் மட்டும் கைகூடுவதில்லை. தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணம் பல குடும்பங்களில் மிகப்பெரிய சிக்கலாகவே உருவெடுத்து வருகிறது. இதற்கு முன்வினை பயன் என்றும், ஜாதக நிலையென்றும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.
வீட்டில், மணமாகாத கன்னிப்பெண்களும், ஆண்களும் திருமணத்தடை நீங்க கோவிலில் விளக்கேற்றுவதும், பரிகாரம் செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
ஆனாலும், உரிய நேரத்தில் கைகூடி வர வேண்டிய திருமணப்பேறு மட்டும் கிட்டாமல் போகிறதே என்று கவலைக் கொள்பவர்கள், நாளை(ஏப்ரல் 1) பங்குனி உத்திரம் அன்று விரதத்தை கடைபிடித்தால், விரைவில் வீட்டில் மேளம் கொட்டும் என்பது ஐதீகம்.
ஏனெனில் பங்குனி உத்திர தினத்தில்தான், அதிக தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, மீனாட்சி - சொக்கநாதர், ஸ்ரீராமர் - சீதை, முருகப்பெருமான் - தெய்வானை, நந்தியெம்பெருமான் - சுயசை, ஆண்டாள் - ரங்கமன்னார், இந்திரன் - இந்திராணி... என்று தெய்வத் திருமணங்கள் பலவும் நடைபெற்றதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த கல்யாண விரத நாளில் விரதமிருந்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி, நீண்ட நாட்களாகத் தள்ளிப்போகும் திருமணங்கள் உடனே நடக்கும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். தம்பதியரிடையே அன்பு பெருகும் என்பது நம்பிக்கை.
மார்ச் 31ம்தேதி மாலை 3.20 மணிக்கு உத்திர நட்சத்திரம் தொடங்குகிறது. அடுத்த நாளான ஏப்ரல் 1ம்தேதி மாலை 4.17 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் நிறைவு பெறுகிறது. பெளர்ணமி திதி ஏப்ரல் 1ம்தேதி காலை 7.38 மணிக்கு தொடங்குகிறது. பெளர்ணமி ஏப்ரல் 2ம்தேதி காலை 7.57 மணிக்கு நிறைவடைகிறது.
பங்குனி உத்திரம், பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் இணையும் நன்னாளாகும். நாளைய தினம் பங்குனி உத்திரத்தன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் அல்லது கல்யாண விரதம் என்றும் சொல்லலாம். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த தம்பதியர் கூட, இந்நாளில் முறையாக விரதம் இருந்து சிவனையும் பார்வதியையும் மனமுருக வேண்டி வழிபட்டால் வேறுபாடுகள் மறைந்து நீண்ட காலம் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்று ஐதீகம்.
பங்குனி உத்திரத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி, முருகப்பெருமான் அல்லது சிவன்-பார்வதியை நினைத்து, பால்/பழம், உலர் திராட்சை உண்டு மாலை கோவிலில் வழிபாடு செய்து திருக்கல்யாண உற்சவத்தைக் கண்டு, விரதத்தை நிறைவு செய்யவேண்டும். வீட்டில் உள்ள முருகப் பெருமானுக்கு அன்றைய தினம் செவ்வரளி மலர்களால் அலங்காரம் செய்து, பால், பழம், தேன், தினைமாவு அல்லது ஏதாவது இனிப்பு செய்து நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
பங்குனி உத்திரம் அன்று அதிகாலை நீராடி விட்டு சூரிய உதயத்திலிருந்து சூரியன் அஸ்தமனம் ஆகும் வரையிலும் விரதம் கடைபிடிக்க வேண்டும். சிலர் நாள் முழுவதும் உணவு ஏதும் அருந்தால் வெறும் தண்ணீர் மட்டும் அருந்தி விரதம் அனுஷ்டித்து மறுநாள் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்னர் உணவருந்துவார்கள்.
மேலும் இந்த நாளில் மௌன விரதம் அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்று கூறப்படுகிறது. பங்குனி உத்திரம் அன்று நாள் முழுவதும் மௌன விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் 1 மணிநேரமாவது கடைபிடிக்கலாம். அன்று யாரிடமும் கோபம் கொள்வதோ, தீய சொற்களை பேசுவதோ கூடாது.
இன்னும் சில முருக பக்தர்கள் பங்குனி உத்திரத்திற்காக 48, 21,11, 7 நாட்கள் விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
ஒருசிலர் பங்குனி உத்திரம் அன்று சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் அதுதான் விரதம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. அனைத்து நாட்களும், அனைத்து நேரமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை முருகனிடம் செலுத்துவது தான் உண்மையான விரதம். பங்குனி உத்திரம் அன்று ஒரு நாளாவது மற்ற விஷயங்களில் மனதை அலை பாய விடாமல் முருகனை மட்டும் மனதில் நினைத்து, முருகனின் திருநாமங்களை சொல்லி வழிபடுவது தான் உண்மையான விரதம் என்கின்றனர் சான்றோர்கள்.
அன்றைய தினம் முழுவதும் விரதம் அனுஷ்டிப்பவர்கள் முருகன் சிந்தனையுடன் இருந்து, முருகனுக்கு உகந்த பாடல்கள், கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் போன்றவற்றை கேட்பது அல்லது படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.
மேலும், அன்றைய தினம் கோவில்களில் அன்னதானம் வழங்க விரும்பினால், முருகப்பெருமானுக்கு விசேஷமான சர்க்கரை பொங்கல், தினை மாவும், தேனும் பக்தர்களுக்கு வழங்கலாம். அல்லது உங்களால் முடிந்தவற்றை இல்லாதவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். அதேபோல் அன்றைய தினம் நாம் சாப்பிட வேண்டிய மூன்று வேளை உணவையும் மற்றவர்களுக்கு தானமாக அளிப்பது மிகவும் சிறப்பு.
இறைவன்கள், தங்கள் இறைவியோடு இணைந்த அற்புத நாள் இந்த பங்குனி உத்திரம். இந்த நாளில் மணமானவர்கள் ஒற்றுமையை வேண்டியும், மணமாகாதவர்கள் திருமணப்பேறு வேண்டியும் விரதமிருந்து வழிபட்டால் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நிச்சயம்.
எனவே இந்த நாளை தவறவிடாமல் விரதம் அனுஷ்டித்து முருகனின் அருளைப் பெற்றிடுங்கள்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here