பரிகாரத் திருத்தலங்கள்: காஞ்சிபுரத்திலும் உண்டு நவகிரக கோயில்கள்!

Kanchipuram Navagraha Temples
Kanchipuram Navagraha Temples
Published on

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவகிரக தலங்கள் அமைந்துள்ளது பலரும் அறிந்த ஒன்று. அதேபோல, காஞ்சிபுரத்திலும் நவகிரக தலங்கள், அதுவும் மிகவும் பழைமையான நவகிரக தலங்கள் அமைந்துள்ளது பலரும் அறியாத ஒன்று. அத்தகைய நவகிக தலங்களைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சூரிய பரிகார தலம் அருள்மிகு பரிதீஸ்வரர் திருக்கோயில். பல்லவ மன்னர்களால் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட இத்தலம் சிறியதாகக் காட்சி தருகிறது. இத்தலத்தில் சூரிய பகவான் ஈசனை வழிபட்டு கிரகப் பதவியினை அடைந்ததாக ஐதீகம். பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தமிழ்நாடு அரசின் விதைப்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள செவ்வந்தீஸ்வரர் கோயிலைக் கடந்து சென்றால் இடதுபுறம் பிரியும் சாலைக்கு அருகில் உள்ள பருத்திக்குளத்தின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ராமருக்கு சிவபெருமான் அளித்த சத்தியவாக்கு!
Kanchipuram Navagraha Temples

திங்கள் பரிகார தலமான அருள்மிகு சந்திரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது தற்போது வெள்ளைக்குளம் என்று அழைக்கப்படும் சந்திர தீர்த்தக்கரையில் அமைந்துள்ளது. சந்திரேசம் என்று அறியப்படும் இத்தலம், காஞ்சி புராணத்தில் சோமேச்சுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளைக்குளம் என்ற பகுதியில் சந்தவெளி அம்மன் கோயிலுக்குப் பின்புறம் உள்ள தெருவில் இத்தலம் அமைந்துள்ளது.

செவ்வாய் பரிகார தலமாக அமைந்த திருக்கோயில் அருள்மிகு செவ்வந்தீஸ்வரர் திருக்கோயிலாகும். கி.பி.ஏழாம் நூற்றான்டில் பல்லவ மன்னர்களால் அமைக்கப்பட்ட இத்தலம், மேற்கு திசை நோக்கி அமைந்த திருத்தலமாகும். அங்காரகன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து செவ்வந்தி மலர்களைக் கொண்டு வழிபட்டதாக ஐதீகம். அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலின் அருகில் அமைந்துள்ள பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தமிழ்நாடு அரசின் விதைப்பண்ணையின் உட்புற வளாகத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பொறாமை பார்வை எனும் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்!
Kanchipuram Navagraha Temples

புதனுக்குரிய தலம் அருள்மிகு பிரமராம்பிகை சமேத ஸ்ரீ சத்யநாத சுவாமி திருக்கோயிலாகும். சுமார் 1600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலம் திருக்காலிமேடு என்ற பகுதியில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் இது, பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருக்காலிமேடு என்ற பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. ரயில்வே ரோடில் இருக்கும் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் செல்லும் பாதையில் பயணித்தால் திருக்காலிமேட்டை அடையலாம்.

காஞ்சி நவகிரக தலங்களில் குரு பரிகார தலமாக விளங்குகிறது அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில். இத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில் பிள்ளையார்பாளையம் என்ற பகுதியில் அமைந்துள்ளது.

சுக்ரன் பரிகாரத் தலமாக அமைந்த திருக்கோயில் அருள்மிகு இஷ்ட சித்தீஸ்வரர் திருக்கோயிலாகும். மேற்கு திசை நோக்கி அமைந்த இத்திருத்தலம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலுக்குள் இத்தலம் ஒரு தனி சன்னிதியாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தீராத பணப் பிரச்னை தீர வெற்றிலை தீப ரகசியம்!
Kanchipuram Navagraha Temples

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் சனி பரிகார தலமாகும். ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இத்தலம், பிற்கால சோழர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட பெருமை கொண்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் சின்ன காஞ்சிபுரத்தில் தேரடியிலிருந்து வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் வழியில் திருக்கச்சி நம்பி தெருவில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில் ராகு, கேது பரிகாரத் தலமாகும். ராகுவும் கேதுவும் மனித உருவத்தில் எழுந்தருளியுள்ள அபூர்வ தலங்களில் இது ஒன்று. இத்தலத்தில் நிழல் கிரகங்களான இவர்கள் இருவரையும் சிவபெருமான் தனது திருக்கரங்களில் ஏந்திக் காட்சி தருகிறார். காமாட்சி அம்மன் கோயிலுக்குப் பின்புறத்தில் மேற்கு ராஜகோபுரத்திற்கு அருகில் ஜவஹர்லால் தெருவில் இத்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com