
மந்தப்பள்ளி சனீஸ்வரரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம் தோஷங்கள் தொலைத்து, வாழ்வை வளம் பெறச் செய்யும் அருளாளன் இவர். கோயிலின் தல புராணம் என்ன?
அஸ்வத்தனும், பிப்பலனும் அரக்க குணத்தின் அநியாயப் பிரதிநிதிகள். அஸ்வத்தன் அரச மர வடிவெடுக்கும் அசகாய சூரன்; பிப்பலனோ அந்தண வடிவம் பூணுபவன். தேவர்களும் முனிவர்களும் கூடி யாகசாலைகளுக்குச் செல்வார்கள். அங்கிருக்கும் அரசமரத்தில் அஸ்வத்தன் கலந்து விடுவான். அந்தண வடிவில் பிப்பலனும் யாகசாலைக்குள் நுழைந்து அமைதியாய்க் காத்திருப்பான். யாகம் நிறைவுறும்போது இருவரும் சுய உரு கொண்டு, யாகத்தை அழிப்பார்கள்; யாகம் வளர்க்கும் அந்தணர்களைக் கொன்று புசிப்பார்கள்.
இதனால், பெருந்துன்பமுற்ற எஞ்சிய அந்தணர்கள் இவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஏங்கிக் காத்திருந்தார்கள். அவர்கள், ஒரு நாள் நதிக்கரையில் தவம் இயற்றிக் கொண்டிருந்த சனி பகவானைக் கண்டார்கள். அரக்கர்களின் அக்கிரமங்களை அவரிடம் சொல்லி தங்களைக் காப்பாற்றுமாறு அவரிடம் வேண்டிக் கொண்டார்கள். சனி, மனமிசைந்தார்.
உடனே அந்தண கோலம் கொண்டார். அஸ்வத்தன் உறைந்திருந்த அரச மரத்தை அவர் வலம் வந்தார். இதுபோன்ற வாய்ப்புக்காகவே காத்திருந்த அரக்கன், அவரை அப்படியே பற்றி எடுத்து விழுங்கினான். வல்லமை மிக்க சனி பகவான் அரக்கனின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்தார். அஸ்வத்தன் ஒழிந்தான்.
வேத பாடசாலையில் ரிஷப வடிவில் வீற்றிருந்த பிப்பலனை (இவன் காளை உருவமும் எடுத்து வேதப் பயிலும் மாணவர்களைத் தன் பசிக்கு இரையாக்கி வந்தவன்) அணுகி, அவனிடம் வேதம் பயில வந்ததாகப் பணிவுடன் பகர்ந்தார். மிகுந்த வேட்கையுடன், பிப்பலன் அவரை விழுங்கினான். அவன் வயிற்றையும் கிழித்துக் கொண்டு சனிபகவான் வெளிவந்தார். பிப்பலனின் கதையும் முடிந்தது. அனைவரும் பெருமகிழ்ச்சியுற்றனர்.
ஆனால் அசுரர்களை வதம் செய்த சனிபகவானை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அதிலிருந்து மீள அவர் அந்த இடத்தில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கி தோஷ நிவர்த்தி அடைந்தார். கூடவே, எவர் ஒருவர் தனக்குரியதான சனிக்கிழமையில் அரச மரத்தை வலம் வந்து தான் பிரதிஷ்டை செய்த ஈஸ்வரனை, எள் எண்ணெயால் அபிஷேகம் செய்து ஆராதிக்கிறார்களோ அவர்களை சனி தோஷம் அண்டாது என்றும், கோரியன யாவும் ஈடேறும் என்றும், எடுத்த காரியம் எதுவாயினும் தடையின்றி நிறைவேறும் என்றும் அருள் வாக்குரைத்தார்.
அப்போதிலிருந்து இந்த மந்தபள்ளி தலத்தில் வழிபடுவோர்க்கு கேட்ட வரம் தடையின்றி கிடைக்கப் பெறுகின்றன என்பது அனுபவபூர்வமான உண்மை.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து அமலாபுரம் செல்லும் வழியில் மந்தப்பள்ளி அமைந்திருக்கிறது.
விசாலமான வெளிப்பிராகாரம். அதில் வரிசையாக ஐந்து சந்நிதிகள். முதலில் சனீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார். சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் சனீஸ்வரர் என்றும், மந்தப்பள்ளியில் குடி கொண்டிருப்பதால் மந்தேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்தக் கருவறைக்கு வெளியில் சுவரோரமாய் ஒரு வடிகால் நீண்டுள்ளது. பக்தர்கள் இந்த வடிகாலின் ஒரு முனையில் நல்லெண்ணெயை விட்டால் அது நேரே சென்று சுவாமியின் சிரசில் அபிஷேகமாகப் பொழிகிறது.
சனீஸ்வரர் சந்நிதிக்கு அடுத்து அன்னை பார்வதி அருள் புரிகிறார். அடுத்து பிரம்மன் பிரதிஷ்டை செய்த பிரம்மேஸ்வரன் சந்நிதி. பிரம்மேஸ்வரர் நாகக்குடையின் கீழே கவசம் தரித்து கம்பீரமாகக் காட்சியருள்கிறார். மூன்றாவது சந்நிதியில் அஷ்ட மஹா நாகங்களில் ஒன்றான கார்கோடகனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகேஸ்வரர். ஸ்படிக நாகக்குடை, ஸ்படிக லிங்கம் என்று காட்சியருள்கிறார் நாகேஸ்வரர்.
அடுத்த சந்நிதியில் கௌதம மகரிஷி பிரதிஷ்டை செய்த வேணு கோபால மூர்த்தி. இந்தத் தலத்தின் க்ஷேத்திர பாலகரான இவர், கையில் புல்லாங்குழல் ஏந்தியிருக்கிறார்.
ஒவ்வொரு சனிக்கிழமையிலும் இருநூறு, முன்னூறு பேர் சனீஸ்வர சுவாமிக்கு எள் எண்ணெய் அபிஷேகம் செய்கிறார்கள்.
அமாவாசைக்கு முன்போ, பௌர்ணமிக்கு முன்போ வரும் திரியோதசை திதி, சனிக்கிழமையாக அமைந்து விட்டால் பதினைந்தாயிரம், இருபதாயிரம் என்று பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
மந்தப்பள்ளி சனீஸ்வரரை தரிசியுங்கள். சனி தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுங்கள்.