
சிவபெருமான் சினம் கொண்டு விநாயகப் பெருமானின் தலையை துண்டித்ததும், பிறகு பார்வதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, சினம் தணிந்து அந்த வழியாக வந்த ஒரு யானையின் தலையை கொய்து விநாயகப் பெருமானின் தலைக்குப் பதிலாக வைத்ததும் நாம் அனைவரும் அறிந்ததே.
விநாயகரின் அசல் தலை எங்கே விழுந்தது? புராணங்களின்படி, துண்டிக்கப்பட்ட தலை உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரின் அமைதியான மலைகளில் அமைந்துள்ள பாதால் புவனேஷ்வர் என்ற மாய குகையில் விழுந்தது, அது இன்றுவரை சிவபெருமானின் தெய்வீக சக்தியால் பாதுகாக்கப்படுகிறது. புராணக்கதைகள் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த குகை, இந்து ஐதீகங்களின் சான்றாக மட்டும் இல்லாமல் இயற்கை அழகு மற்றும் தெய்வீக கட்டடக்கலையின் அற்புதம் ஆகும்.
பித்தோராகரில் உள்ள கங்கோலிஹாட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த குகை, கலியுகத்தில் ஆதி சங்கராச்சாரியாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இமயமலையின் மடியில் அமைந்துள்ள இந்த புனிதத் தலம், ஆன்மீக ஆறுதல் மட்டுமல்ல, பண்டைய தொன்மங்கள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய புதிரான பார்வையையும் வழங்குகிறது.
குகைக்குள், ஆதி விநாயகர் என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமானின் சிலை, 108 இதழ்கள் கொண்ட பிரத்யேக பிரம்ம கமலத்தால் (தாமரைப் பூ) அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த புனித மலர் ஆதி விநாயகரின் தலையில் தெய்வீக நீரை சொட்டுவதாக நம்பப்படுகிறது. இது நித்திய ஆசீர்வாதங்களை குறிக்கிறது. புராணங்களின் படி, இந்த பிரம்ம கமலம் சிவபெருமானால் நிறுவப்பட்டது. இது குகை புனித தன்மையை மட்டுமல்லாமல் மர்மத்தையும் உள்ளடக்கியுள்ளது.
மற்றொரு பிரம்மித்தக்க நம்பிக்கை என்னவென்றால், சிவபெருமான் விநாயகரின் தலையைத் துண்டித்த பிறகு, அது நிலவுக்குள் சென்று ஐக்கியமானது. (அப்படி என்றால் நிலவுக்கு மனிதன் செல்வதற்கு முன்பே விநாயகரின் தலை நிலவிற்கு சென்றுள்ளது!) இந்த நம்பிக்கை மத மரபுகளில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அங்கு பக்தர்கள் அர்க்கியம் (அர்க்யா என்பது இந்து சடங்குகள் மற்றும் விருந்தோம்பலின் ஒரு பகுதியாக இருக்கும் நீர் பிரசாதம்) மற்றும் சங்கட ஹர சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்க்கிறார்கள். தடைகள் நீக்குவதற்கு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு விநாயகரின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள்.
திரேதா யுகத்தில் சூரிய வம்சத்தின் மன்னன் ரிதுபர்ணனால் கண்டுபிடிக்கப்பட்ட கதைகளால் குகையின் வரலாற்று முக்கியத்துவம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பாம்புகளின் ராஜாவான உபரியால் ராஜா குகைக்குள் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவருக்கு கடவுள்கள் மற்றும் சிவபெருமானின் தெய்வீக தரிசனம் வழங்கப்பட்டது. பாண்டவர்கள், துவாபர யுகத்தில் இந்த குகையை மீண்டும் கண்டுபிடித்து வழிபாட்டு தலமாக பயன்படுத்தினர். மஹாதேவ் சிவனே பாதால் புவனேஷ்வரில் வசிக்கிறார். அவரை வணங்க வரும் தெய்வங்களை ஈர்க்கிறார் என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.
சாகசம் மற்றும் ஆன்மீகத்தில் ஈர்க்கப்படுபவர்களுக்கு, பாதால் புவனேஷ்வர் இரண்டின் தனித்துவமான அனுபவக் கலவையை வழங்குகிறது.
இந்த மாய குகையை பார்வையிட சிறந்த நேரம் மார்ச் முதல் ஜூன் வரை அல்லது அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர் மாதங்களில், மழைக்காலத்தைத் தவிர்த்து.
எப்படி அடைவது:
சாலை வழியாக: இந்த குகை புது டெல்லி, லக்னோ மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் இருந்து டாக்சிகள் மற்றும் பேருந்துகள் எளிதில் கிடைக்கின்றன.
ரயில் மூலம்: பாதால் புவனேஷ்வரிலிருந்து 154 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனக்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ளது.
விமானம் மூலம்: அருகிலுள்ள விமான நிலையம் 224 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்த்நகர் ஆகும். மேலும் பயணிக்க பேருந்துகள் மற்றும் டாக்சிகள் உள்ளன.
பாதால் புவனேஷ்வர் பௌதிக மற்றும் ஆன்மீக பகுதிகளை பின்னிப் பிணைந்து, இந்து தொன்மவியல் மற்றும் தெய்வீகத்தின் நீடித்த மர்மங்களுடன் ஒரு ஆழமான தொடர்பை வழங்குகிறது.