
பவழமல்லி என்கிற பாரிஜாத மரமானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பரலோகத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்டதாக புராணக் கதைகள் கூறுகின்றன. பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம். இதனை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின் தோட்டத்தில் நட்டு வைத்தார். ஆனால், அந்த மரம் நன்றாக வளர்ந்து சத்யபாமாவின் அரண்மனையில் பூக்களைக் கொட்டியது. இதனால் ருக்மணி வருத்தமுற்றதாலேயே இதனை ‘வருத்தமரம்’ என்றும் அழைக்கின்றனர்.
பவழமல்லி மலர்கள், இரவு மல்லிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது புதர் செடி வகையைச் சேர்ந்தது. இந்த மலர்களின் இதழ்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். தண்டு ஆரஞ்சு - சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த மலர்கள், பூஜை உள்ளிட்ட ஆன்மிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பவழமல்லி மலர்கள் பகலில் மலராமல், இரவு நேரத்தில் மட்டும் மலரும் தன்மை கொண்டது. இந்தப் பூக்கள் மிகுந்த வாசனை கொண்டவை.
இந்தப் பூக்கள் ஏன் சூரியன் உதிக்கும் முன் உதிர்ந்து விடுகின்றன என்று பலருக்கும் மனதில் கேள்வி எழலாம். அதற்கும் ஒரு கதை உள்ளது.
உலகிற்கே ஒளி தரும் சூரியனிடம் காதல் கொண்டாள் பாரிஜாதம் என்ற பெயர் கொண்ட அரசகுமாரி. அந்தக் காதலை ஏற்க மறுத்த சூரியனை எண்ணி மனமுடைந்து தன்னையே அவள் மாய்த்துக் கொண்டாளாம். அவளது அஸ்தியிலிருந்து இம்மரம் உருவாகியதாகவும், இம்மரம் வளர்ந்ததும் சூரியனின் பார்வையைத் தாங்க முடியவில்லை என்றும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இதன் காரணமாக இந்த மரம் இரவிலே பூக்களை மலர்வித்து காலையிலே பூக்களையெல்லாம் உதிர்த்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது.
சிவனுக்கும், திருமாலுக்கும் அர்ச்சனை செய்ய ஏற்ற மலர் இதுவாகும். இறைவனை அர்ச்சிப்பதற்கு உரிய எட்டு மலர்கள் உள்ளன. அந்த எட்டு மலரில் இந்த பாரிஜாத மலரும் ஒன்று. இறைவனுக்கு அர்ச்சனை செய்யவும் உதவுகிறது. இந்த செடி மரமாக வளர்ந்து பூ பூக்கும்போது வீட்டில் எந்தவித தீய சக்திகளும் அண்டாது.
மனிதர்களுக்குத் தெரியாத பல்வேறு மருத்துவக் குணங்களை இந்தப் பூக்கள் கொண்டுள்ளன. பவழமல்லி செடியின் இலைகள், பூக்கள், விதைகள், வேர்பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தின்படி வாத தோஷத்தின் ஏற்றத்தாழ்வு காரணமாக இவை வலியை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.
தொற்று நோய்கள் மற்றும் தொற்று அல்லாத நோய்களுக்கு இவை சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் போன்று சரும வியாதிகளுக்கும் கூட இவை மருந்தாகிறது. மலமிளக்கி, இருமல் மற்றும் சளி பிரச்னை, உஷ்ணம், மூட்டுவலி, சியாட்டிகா போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கவும் இது உதவுகிறது.
பவழமல்லி இலைகள் கீல்வாதம் போன்ற வலி மிகுந்த நிலைகளை குறைப்பதற்கான பயனுள்ள மூலிகை மருந்தாகும். கீல் வாதம் என்பது வாத தோஷத்தின் தீவிரத்தால் ஏற்படுகிறது. வாதத்தால் உண்டாகும் கீல் வாதத்தில் வலி, வீக்கம், மூட்டு இயக்கக் குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பவழமல்லி இலை நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் உகந்தது. மழைக் காலத்தில் சளி, இருமல், தலைவலி, உடம்பு வலி போன்ற அனைத்து உடல் உபாதைகளுக்கும் இது ஒரு அரிய மருந்தாகும்.