
‘பழுதை’ என்னும் சொல் வைக்கோலால் திரிக்கப்பட்ட கயிற்றைக் குறிக்கும். சைவ ஆசாரியருள் சிலரை, ‘பழுதை கட்டி’ எனக் குறிப்பிடுவது வழக்கம். இவர்கள் தமது உடலை, ‘பழுதை’ எனக் கூறிக் கொண்டனர். இவர்கள் இறந்த பின்னர் தம் உடலாகிய ‘பழுதையை எரிக்கவோ, புதைக்கவோ வேண்டாம்’ என்றும், தன் உடலின் காலில் பழுதைக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்று ஆற்று நீரில் எரிந்து விடும்படி தம் மாணாக்கர்களுக்குக் கூறி வைத்திருந்தனர். அதனால் அவர்கள் 'பழுதை கட்டி' என்னும் அடைமொழியுடன் குறிப்பிடப்பட்டனர்.
‘பழுதை கட்டி’ என்று குறிப்பிடப்படுபவர்களில், கமலை ஞானப்பிரகாசர், சம்பந்த முனிவர், சிற்றம்பல நாடிகள் எனும் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கமலை ஞானப்பிரகாசர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ ஆசாரியார். திருவாரூர் ஞானப்பிரகாசர், செட்டித்தெரு ஞானப்பிரகாசர், தேசிகர், பட்டாரகர், பழுதை கட்டி ஞானப்பிகாச பண்டாரம் என்று இவர் வேறு சில பெயர்களாலும் அறியப்படுகிறார். சிவபுரம் தத்துவப் பிரகாச பண்டாரம் என்பவரைக் குருவாகக் கொண்ட கமலை ஞானப்பிரகாசருக்கு பல மாணவர்கள் இருந்தனர். அவர்களுள், நூல் எழுதிய துழாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய தேசிகர், ஆன்மலிங்க மாலை ஆசிரியர், திருவொற்றியூர் ஞானப்பிரகாசர், தருமபுர ஆதீன முதல்வர் திருஞான சம்பந்தர், கருவூர்ப் புராண ஆசிரியர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தருமபுர ஆதீன பரம்பரையில் வந்த சைவப் பெரியார்களுள் ஒருவராக இருந்தவர் பழுதை கட்டி சம்பந்த முனிவர் என்பவர். இவரைக் காழி - பழுதை கட்டி சம்பந்த முதலியார் எனவும், பழுதை கட்டிச் சம்பந்த பண்டாரம் என்றும் குறிப்பிடுவர். இவர் வாழ்ந்த காலம் 1350 முதல் 1375 எனக் கணிக்கப்பட்டுள்ளது. காழி என்பது சீர்காழி. இவரது ஆசிரியர் பழுதை கட்டிச் சிற்றம்பல நாடிகள். சிவானந்தமாலை உள்ளிட்ட சில நூல்கள் இவரால் இயற்றப்பட்டிருக்கின்றன.
14ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெரியார்களில் ஒருவர் சிற்றம்பல நாடிகள். இவரைப் பழுதை கட்டிச் சிற்றம்பல நாடிகள் எனவும் கூறுவர். சீரை என்னும் சீர்காழிப் பகுதியிலுள்ள வேளைநகர் என்னும் புள்ளிருக்குவேளூர் எனும் ஊரைச் சேர்ந்த இவருக்கு சீர்காழியில் வாழ்ந்த, ‘கங்கை மெய்கண்டார்’ என்பவர் ஆசிரியராக இருந்தார். தில்லைச் சிற்றம்பலத்தையே இவர் நாடியதுடன், இவர் தில்லைச் சிற்றம்பலத்தையே தம் நாடித் துடிப்பாகக் கொண்டிருந்ததால், ‘சிற்றம்பல நாடிகள்’ எனப் போற்றப்பட்டார். இவர் எப்போதும் மாணவர் திருக்கூட்டத்தோடு வாழ்ந்து வந்தார்.
இரங்கல் மூன்று, சிவப்பிரகாசக் கருத்து, சிற்றம்பலநாடி கட்டளை, ஞானப் பஃறொடை, திருப்புன்முறுவல், துகளறுபோதம் எனும் நூல்களை இயற்றியிருக்கிறார். இவரிடம் கற்ற மாணவர்கள், அறிவானந்த சித்தியார். அனுபூதி விளக்கம், சிற்றம்பல நாடிகள் கலித்துறை, சிற்றம்பலநாடி பரம்பரை, திருச்செந்தூர் அகவல், சிற்றம்பல நாடி தாலாட்டு, சிற்றம்பல நாடி வெண்பா போன்ற நூல்களை இயற்றி இருக்கின்றனர்.
சிற்றம்பல நாடிகளின் சமையல்காரன் ஒரு நாள், தன்னையறியாமல் சமையலின்போது, வேப்பெண்ணெய் விட்டுச் சமைத்து விட்டான். அதனை சிற்றம்பல நாடிகளும், அவருடன் இருந்த மாணவர்களும் உண்ணும்போது, வேறுபாடு தெரியாமல் உண்டனர். கண்ணப்பர் எனும் ஒருவர் மட்டும் வேப்பெண்ணெய்யின் கசப்புச் சுவையினைக் கண்டு குமட்டினார். உடனே நாடிகள், ‘நம் திருக்கூட்டத்தில் பக்குவம் இல்லாதவர் இருப்பது தகுதியோ?’ என்றார். அது கேட்ட கண்ணப்பர் வெட்கப்பட்டுத் தாமே கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டார்.
சிற்றம்பல நாடிகள் தமக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, தானும் தன் திருக்கூட்டத்தாரும், சித்திரை திருவோண நாளில் குழியில் இறங்கப்போவதாக அறிவித்தார். அவர் விருப்பப்படி அவ்வூர் அரசன் அவர்களுக்கு 63 குழிகள் அமைத்துத் தந்தான். குறித்த நாளில் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் 63 பேரும் குழியில் இறங்கினர். குழி மூடப்பட்டது. வேப்பெண்ணெய்க்குக் குமட்டிய கண்ணப்பர் அங்கு வந்தார். அவர்,
‘ஆண்டகுரு சிற்றம் பலவா அடியேற்கா
மீண்டும் எழுந்தருள வேண்டாவோ – நீண்டமால்
ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியைப்
பூரணமாய் வையாத போது’
எனும் பாடலைப் பாடித் தன்னையும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.
அப்போது சிற்றம்பல நாடிகள் சமாதி திறந்தது. அங்கிருந்த நாடிகள் கண்ணப்பரைத் தம் மடியில் ஏற்றுக் கொண்டு கல்லறையானார் என்று சொல்லப்படுகிறது.
இந்த இடம் இப்போது மயிலாடுதுறைக்கு மேற்கே சித்தர்காடு எனப் பெயர் பெற்றுள்ளது. அங்கு சிற்றம்பல நாடிகளது சமாதி ஒரு கோயிலாகக் கட்டப்பட்டுள்ளது.