
கேரள மாநிலத்தில் உள்ள நீர்புதூர் மகாதேவர் கோயில் 3000 ஆண்டுகள் பழைமையானது. இந்தக் கோயில் அறிவியலுக்கு சவாலாகவும் மர்மம் நிறைந்ததாகவும் உள்ளது. நீர்புதூர் மகாதேவர் கோயிலில் சிவலிங்கம் எப்படி உருவானது என்று எவருக்கும் தெரியவில்லை. இந்த லிங்கம் சுயம்புவாக எவ்வாறு உருவாகி இருக்கும் என்ற மர்மமும் இன்று வரை தீர்க்க முடியாத மர்மமாக உள்ளது. இந்த சுயம்பு லிங்கம் எப்போதும் நீரால் சூழப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலைப் பற்றியும் அதன் கருவறையும் பற்றியும் பல ஆய்வுகளை மேற்கொண்டும், விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அது தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது. இந்தக் கோயிலின் நீர் சூழ்ந்த அமைப்பின் காரணமாக அது உலகப் புகழ் பெற்றுள்ளது. ஆண்டு தோறும் வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோயிலின் அமைப்பைக் கண்டு வியக்கிறார்கள்.
வழக்கமாக பூமியில் உள்ள எந்தவொரு பொருளின் தோற்றத்தையும் வடிவத்தையும் அறிவியல் முறையில் பகுப்பாய்வு செய்து அது உருவான விதத்தை கண்டறிய முடியும். ஆனால். சுயம்புவாக உருவான இந்த சிவலிங்கம் பற்றி எந்த ஒரு தகவலையும் விஞ்ஞானிகளால் கண்டறிய முடியவில்லை. உள்ளூர் மக்களின் தகவல் படியும் இந்த சிவலிங்கத்திற்கான தெளிவான வரலாறு இல்லை. ஆண்டு முழுவதும் இக்கோயில் சிவலிங்கம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள நீர் ஆதாரமும் ஒரு மர்மமான ஒன்றாக உள்ளது. மழைக்காலங்களில் மட்டுமல்ல, கோடைகாலத்திலும் கூட, ஆண்டு முழுவதும் இந்தக் கோயில் சிவலிங்கத்தை சுற்றி நீர் நிரம்பியிருக்கும். இந்தத் தொடர்ச்சியான நீர் இருப்பு புவியியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கண்டறியப்படவில்லை.
நோய்களை தீர்க்கும் நீர்: இந்தக் கோயிலில் உள்ள நீர் 'பாவத்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர் நோய்களைக் குணப்படுத்துகிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த நீரில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சில கனிம மூலங்கள் உள்ளன. அதனால் இந்த நீர் ‘மருத்துவ நீர்' என்று மக்கள் அழைக்கின்றனர். நீர்புதூர் மகாதேவர் கோயிலின் கட்டடக்கலை அமைப்பு கூட ஒரு மர்மமாகும். அதன் அமைப்பு கட்டடக்கலை மற்றும் வானியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டது.
இன்றைய நவீன கருவிகளைக் கொண்டும் இந்தக் கோயிலை முழுமையாக அளவிட முடியாது. அதன் கருவறையின் கட்டுமானம், அதன் வெப்பநிலை மற்றும் அதற்குள் நிலவும் மர்மமான சக்தியைப் புரிந்துகொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், குறிப்பிட்ட முடிவுக்கு வர முடியவில்லை. பக்தர்களின் கூற்றுப்படி, பல விஞ்ஞானிகள் கருவறைக்குள் சென்றபோது, ஒரு அசாதாரண சக்தி இருப்பதை உணர்ந்துள்ளனர்.
இந்தப் பழைமையான மர்மம் நிறைந்த கோயிலுக்கு செல்ல பக்தர்கள் நாள்தோறும் படையெடுக்கின்றனர். நீர்புத்தூர் மகாதேவர் கோயிலை அடைவது மிகவும் எளிது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டிலிருந்து கொச்சின் அல்லது திருவனந்தபுரம் வரை விமானம் அல்லது ரயிலில் பயணம் செய்து அங்கிருந்து மலப்புரத்திற்கு பேருந்து மூலம் செல்லலாம். மலப்புரத்தில் இருந்து பேருந்து அல்லது டாக்சி மூலம் நீர்புத்தூர் கிராமத்தை அடையலாம்.