பெருமாளின் அருளைப் பெற்றுத்தரும் தாயாரின் 5 திருநாமங்கள்!

Perumalin Arulai Petru tharum Thayarin 5 Thirunamangal
Perumalin Arulai Petru tharum Thayarin 5 Thirunamangal

திருமகளாம் மகாலட்சுமி தாயாரின் பெருமைகளைப் புகழ்ந்து சொல்லிட ஆயிரம் நா படைத்த அந்த ஆதிசேஷனாலேயே முடியாது. அவ்வளவு பெருமைகளுக்கு உறைவிடமாகத் திகழ்பவள் தாயார் மகாலட்சுமி. பெருமாள் கோயில்களுக்குச்  செல்லும்போது முதலில் தாயாரின் திருவடியை பற்றிவிட்டுதான் திருமாலின் திருவடியை நாம் பற்ற வேண்டும். தாயாரின் பாதத்தில் முதலில் நாம் சரணாகதி செய்தால்தான், அந்தத் தாயார் நமக்காக பெருமாளிடம் பரிந்துரை செய்து நம்மை திருமாலின் திருவடிக்கு அழைத்து செல்வாள் என்பது ஐதீகம்.

தாயாரின் திருவடியை பற்றிக்கொள்ள நாம் செய்ய வேண்டிய சுலபமான வழி ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால், தாயாரின் திருநாமங்களை விடாமல் ஜபித்துக்கொண்டே இருப்பதுதான்.

ஜன்ம சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் நாம், அந்தச் சுழலில் மீண்டும் மீண்டும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், தாயாரின் கழலினை இறுகப் பற்றி, அவளது திருநாமங்களில் மிகவும் எளிதான ஐந்து திருநாமங்களையாவது தினமும் சொல்லிட வேண்டும் என்று வழி காட்டுகிறார் தம், ‘ஸ்ரீ ஸ்துதி’யின் வாயிலாக ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன்.

அந்த ஐந்து திருநாமங்கள் என்னென்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை: லட்சுமி, பத்மினி, ஜலதி தனயா, இந்திரா மற்றும் விஷ்ணு பத்னி என்பதாகும். இந்த ஐந்து திருநாமங்களைத்தான் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இனி, அந்த ஐந்து திருநாமங்களுக்கான பொருள் என்ன என்பதைப் பார்ப்போம்.

லட்சுமி: இந்தத் திருநாமத்தின் பொருள், திருமாலுக்கு லட்சணமாக, அடையாளமாக இருக்கிறாள் என்பதாகும். பேயாழ்வார் முதன் முதலில் பெருமாளைப் பார்த்ததும், ‘திருக்கண்டேன்’ என்றே ஆரம்பிக்கிறார். பெருமாளின் திருமார்பில் வீற்றிருக்கும் திருவை முதலில் பார்த்துவிட்டுத்தான் தனது எதிரில் வந்திருப்பவர் திருமால் என்றே பாடுகிறார் ஆழ்வார்.

பத்மினி: பத்மினி என்றால் உலகில் உள்ள மொத்த அழகின் ஸ்வரூபமாக இருப்பவள் என்றே பொருள். அழகு என்றாலே அது தாயார் மகாலட்சுமிதானே?

இதையும் படியுங்கள்:
மற்றவர் மனதைக் கவர இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Perumalin Arulai Petru tharum Thayarin 5 Thirunamangal

ஜலதி தனயா: மூன்றாவது திருநாமமான ஜலதி தனயா என்றால் சமுத்திரத்தின் மகள் என்று பொருள். பாற்கடலில் உதித்தவள்தானே மகாலட்சுமி தாயார்?

இந்திரா: நான்காவது திருநாமம் இந்திரா. இந்தி என்றால் செல்வம். இந்திரா என்றால் செல்வம் உடையவள் என்று பொருள். செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி தாயார் என்பதை இது குறிக்கிறது.

விஷ்ணு பத்னி: ஐந்தாவது திருநாமம் விஷ்ணு பத்னி. இதற்கு மகாவிஷ்ணுவுக்கு ஏற்றவள் என்பதாகும்.

‘தாயே’ என்றால் எளியவருக்கும் தயை புரிந்து அருள்புரியும் மகாலட்சுமி தாயாரைப் போன்றே இந்த ஐந்து திருநாமங்களும் வழிபடுவதற்கு மிகவும் எளிமையானது, இனிமையானது. மகாலட்சுமி தாயாரின் இந்தத் திருநாமங்களை மனதில் நிறுத்தி வழிபடுவோம். திருவின் அருளோடு திருமாலின் அருளையும் சேர்த்துப் பெற்றிடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com