பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. கர்ப்பப்பை பலவீனமடைதல், கரு தங்காமை, நீர்க்கட்டி உருவாதல், மாதாந்திர தொந்தரவு இப்படி பல்வேறு விஷயங்களுக்கு நிவாரணம் தரும் திருத்தலமாக பேட்டைவாய்த்தலை ஸ்ரீ பாலாம்பிகை உடனமர் ஸ்ரீமத்யாஜூனேஸ்வரர் திருத்தலம் உள்ளது.
கரூர் திருச்சி சாலையில் குளித்தலை அருகே உள்ள பேட்டவாய்த்தலையிலிருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த சிவதலம். இந்த தலத்தில் மகாதேவர் ஸ்ரீ மத்தியார்ஜூனேஸ்வரரை வழிபட்டு, அன்னை ஸ்ரீ பாலாம்பிகை கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து, அம்மையப்பரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். பின் சந்நிதி தூணில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பொற்றாளம் பூவாய் சித்தரை வலம் வந்து வணங்கி, கர்ப்பப்பை கோளாறுகளை அறவே தீர்த்து அருள் புரிய வேண்டி பிரார்த்தனைச் சீட்டு எழுதி கட்டி தீபமேற்றி வழிபட, கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குவது எண்ணற்ற பக்தர்களின் அனுபவமாகும். பாதிக்கப்பட்ட பெண்ணோ பெண்ணின் தொடர்புடையவர்களோ இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இங்கு பொற்றாலம் பூவாய் சித்தர் என்ற முனிவர் ஜீவஜோதி ஆகியுள்ளார். முன்னொரு காலத்தில் பெண்களுக்கான ருது பத்து தினங்களுக்கு ஒரு முறை இருந்ததாம். இதனால் பெண்கள் படும் அவதி நீங்க இந்த சித்தர் வேண்டுகோளை ஏற்று இறைவன் மாதம் ஒருமுறை ருதுவாகும் தன்மை பெண்களுக்கு உண்டாகும் வரம் அளித்தாராம். இந்த இறைவனிடம் மேற்படியான வரத்தை பெற்ற பொற்றாலம் பூவாய் சித்தர் இங்கு ஜீவஜோதியாக இருப்பதால், இறைவனையும் அம்பாளையும் வழிபட்டு ஜீவஜோதியான பொற்றாலம் பூவாய் சித்தரின் திருவுரு அருகில் விளக்கிட்டால் நமது பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருக்கோவிலில் பல்வேறு மூர்த்திகளின் சிற்பங்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் பழமையான உருவங்களில் அமைந்துள்ளன. நர்த்தன கணபதி சிலை மற்றும் முருகன் சிலைகள் அதிஅற்புதமாக கருவறையின் வெளிப்புறத்தில் உள்ளத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன.
காவிரி நதிநீர் பெருக்கெடுத்து வாய்க்கால் வழி ஓடும் கண்கொள்ளாக் காட்சியுடன் வயல் வெளிகளின் அருகினில் அழகுற இறைவனாகிய லிங்கம் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கி அம்பாள் பாலாம்பிகை நின்ற கோலத்தில் காட்சி தருவது காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் காட்சியாகும்.
அம்மை பாலாம்பிகை நின்ற ரூபத்தில் இனிய சாந்த மலர்ந்த முகத்துடன் அபய கரத்துடன் காட்சி அளிப்பது தரிசிப்பவருக்கு தாம் நினைத்தது உறுதியாக நிறைவேறும் என்ற உத்வேக எண்ணத்தினை தரிசித்த உடனே கிடைக்கும் சிறப்பு உடையதாக இருக்கிறது.
மகா மண்டபத்தில் முருகர் தண்டாயுதபாணியாக பாலரூபத்துடன் சிறப்புடன் விளங்குகிறார். மேலும் புராதன கோவில்களில் விளங்கும் பிச்சாடனர் மற்றும் சரஸ்வதி தேவி சிலாரூபங்களும் அழகுடன் அருள் பாலிக்கும் தன்மை காண்போரை வியக்க வைக்கும் வண்ணம் உள்ளது. தூணில் அமைந்துள்ள பொற்றாளம் பூவை சித்தர் ரூபமும் சூரிய சந்திரர் சன்னதி, மகாலட்சுமி சன்னதி, நவகிரக சந்நிதி ஆகியவையும் எழிலுற விளங்குகின்றன. சன்னதியின் உள்ளும் புறமும் நிறைய கல்வெட்டுகள் உள்ளன.
இந்த திருத்தலம் மூன்றாம் குலோத்துங்கன் சோழ மன்னரால் அமைக்கப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் திருத்தலம் எங்கனம் இந்திரனின் பிரம்மஹத்தியை போக்கியதோ, அதேபோல இந்த திருத்தலமும் பிரம்மஹத்தியைப் போக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இவ்விறைவனை வழிபடுபவருக்கு மனதிட்பமும் வைராக்கியமும் கைகூடுகிறது.
இந்தத்தலம் சென்று கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும்படி பொற்றாலம் பூவாய் சித்தரையும் இறைவனையும் அம்பிகையும் வழிபட்டு பலன் பெறுவோம்....
(திருக்கோவில் வரலாறு என்ற நூலில் இருந்து தொகுப்பு)