
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான குகைக் கோயில் ஆகும். இந்த கோவில் பிள்ளையார்பட்டி என்ற ஊரில் காரைக்குடி மற்றும் புதுக்கோட்டைக்கு இடையில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவன் கோவிலாக இருந்தாலும் கற்பக விநாயகரால் மக்களிடையே பிரசித்தி பெற்று பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் என்றே மக்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோவில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டது. மேலும் இந்த கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆகம கல்வெட்டுக்களில் எழுதியுள்ளபடி இக்கோவில், பொ.ஊ. 1291 மற்றும் 1238ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோவிலில் உள்ளது.
மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் உருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது. ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமையப்பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது. பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது.
இங்கு 3 லிங்கங்கள் (திருவீசா், மருதீசா், செஞ்சதீஸ்வரா்) மற்றும் 3 பெண் தெய்வங்கள் (சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன்) ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றன. இந்த சிறப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத்தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம் (கொழுக்கட்டை) படைத்து வழிபடுகிறார்கள். தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து பயனடைகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அன்னதானம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணியளவில் நடைதிறக்கப்பட்டது. பின்னர் கற்பக விநாயகருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை வழிபாடு செய்தனர்.
காலை 9 மணிக்கு மேல் கோவில் திருக்குளத்தில் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
இந்த கோவிலில் வருடந்தோறும் தமிழ் புத்தாண்டு அன்று பாஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகரும், ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் கவுரி அம்பாளுடனும் எழுந்தருளி சிறப்பு ஆராதனையுடன் கோவில் உட்பிரகாரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.