ஒரு முறை அஷ்ட வசுக்கள் எட்டு பேரும் சேர்ந்து வசிஷ்ட முனிவருக்குச் சொந்தமான பசுவைத் திருடியதால் வசிஷ்ட முனிவர் அந்த அஷ்ட வசுக்கள் எட்டு பேரையும் மனிதர்களாகப் பிறக்கச் சாபமிட்டார்.
கங்கை கரையோரம் ஒருமுறை சந்தனு மகாராஜா நடந்து கொண்டிருக்கும்போது, கங்கை அழகான பெண் வடிவில் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தாள். இதனைப் பார்த்த சந்தனு மகாராஜா இந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதை அப்பெண்ணிடமும் சொன்னார். கங்கா தேவியும் அவரை ஏற்றுக் கொண்டு ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் முன் வைத்தாள். அது என்னவென்றால், 'திருமணத்திற்குப் பிறகு நான் எந்தச் செயல் செய்தாலும் நீங்கள் ஏன்? என்ற கேள்வியை மட்டும் என்னிடம் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால் நான் உடனடியாக உங்களை விட்டுச் சென்று விடுவேன்' என்று சந்தனு மகாராஜாவிடம் சொன்னாள்.
மன்னனும் அப்பெண்ணின் மேல் கொண்ட காதல் மோகத்தினால் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டார். அதன்படி கங்கா தேவிக்கும் சந்தனு மகாராஜாவுக்கும் திருமணமாகிறது. அந்த அஷ்ட வசுக்கள் எட்டு பேரும் இந்த இரு தம்பதியர்களுக்கும் மகன்களாகப் பிறந்தார்கள். கங்கா தேவி தனக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் முதலில் பிறந்த ஏழு குழந்தைகளையும் ஆற்றில் வீசி விடுகிறாள்.
இதனைக் கண்டும் ஏன் என்று கேள்வி கேட்க முடியாத நிலையில் இருந்தார் சந்தனு மகாராஜா. அந்த எட்டாவது குழந்தையை ஆற்றில் வீசும் தறுவாயில் சந்தனு மகாராஜா, ‘ஏன் குழந்தையை ஆற்றில் வீசுகிறாய்’ என்று கேட்டு விட்டார்.
கங்கா தேவி தம்மிடம் கொடுத்த வாக்கை மீறியதால் சந்தனு மகாராஜாவை விட்டுச் செல்ல முற்படுகிறாள். அப்போது இந்த அஷ்ட வசுக்களின் முற்பிறப்பின் கதையை மன்னரிடம் கூறுகிறாள். இந்தக் குழந்தை மட்டும் ஆற்றில் வீசப்படாமல் இருப்பதற்கான காரணத்தையும் கூறினாள். எட்டு பேரில் இந்தக் குழந்தைதான் கடைசி வசு. இவன்தான் அந்தப் பசுவைத் திருடுவதற்கான எண்ணத்தை மற்றவர்களுக்கு அளித்தான். அதனால் வினைப்பயனை அனுபவிக்க இவனை மட்டும் காலத்தின் கைகளில் உயிரோடு விட்டுச் செல்லும் சூழல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறாள்.
அந்த எட்டாவது குழந்தை வேறு யாருமில்லை; மகாபாரதத்தில், ‘பிதாமகர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பீஷ்மரே ஆவார். இப்படி பிறக்கும் முன்பே சாபம் பெற்றவர் இவர் ஆவார். வசிஷ்டருடைய சாபத்தால் இல்லற சுகத்தைத் துறந்து சந்ததி இன்றி வாழ்ந்தார். தனது தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியால் அஸ்தினாபுரத்தைக் காக்க, கௌரவர்கள் பக்கம் நின்று யுத்தம் புரிந்தார். தர்மம் பாண்டவர்கள் பக்கம் இருந்ததால் தனது உயிரையும் கொடுத்து தர்மத்தைக் காத்தார்.