தெய்வீக மணம் கமழும் கோயிலில் அசைவ உணவுகளை உண்ட பிறகு செல்வது மிகவும் தவறாகும். ஏன் இச்செயல் தவறு என விளக்குகிறது இந்தப் பதிவு.
கோயிலுக்குச் செல்லும் போது உடலும் மனதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். கோயிலுக்கு செல்ல முன்னரே திட்டமிட்டு கிளம்புவர்கள் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவார்கள். அசைவம் சாப்பிட்ட பிறகு திடீரென கோயிலுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது? கோயிலுக்குள் போகலாமா வேண்டாமா? என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்குமல்லவா!
நாம் சாப்பிடும் உணவிற்கும் நமது மனதிற்கும் ஒரு நெருங்கிய தொடர்புள்ளது. பொதுவாக காரமான உணவை சாப்பிட்டால் அதிகமான கோபம் வரும் என்பார்கள். பொங்கல் மற்றும் தயிர் சாதம் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும் என்பார்கள். அதேபோல் அசைவ உணவுகளை சாப்பிடும் போது ஒருவிதமான மந்த நிலை உண்டாகும். மேலும், அசைவ உணவுகள் விரைவில் செரிமானம் ஆகாது.
மந்த நிலையோடு கோயிலுக்குச் சென்றால் நம்மால் நிம்மதியாக சுவாமியை வழிபட முடியாது. மேலும் நமக்கும் உள்ளுக்குள் அசைவம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்குச் சென்று விட்டோமே என்று ஒரு வருத்தம் இருக்குமல்லவா! பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும். இதில் உடல் சுத்தம் மட்டுமின்றி மன சுத்தமும் அவசியமாகும். மனதளவில் நாம் மந்த நிலையில் இருந்தால், கோயிலுக்குள் நிலவும் சூட்சம சக்திகள் மற்றும் தெய்வீக சக்திகளை உணரும் ஆற்றல் நமக்கு கிடைக்காமல் போகலாம். ஏனெனில், அசைவ உணவுகள் சூட்சம சக்தியை உணர்வதற்கான ஆற்றலைக் குறைக்க வல்லது. இதனால் நமது மனதை ஒருநிலைப்படுத்த முடியாது.
நாம் செய்த சிறுசிறு தவறுகளில் இருந்து விடுபட கோயிலுக்கு வரும் போது, அசைவம் சாப்பிட்டால் அது நமது பாவக் கணக்கை அதிகரித்து விடும். கோயிலுக்கு மட்டுமின்றி, வீட்டிலும் அசைவம் சாப்பிட்டு விட்டு பூஜை அறைக்குச் செல்லவோ விளக்கேற்றவோ கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள்.
சைவ உணவுகளை சாப்பிட்டு கோயிலுக்குச் செல்பவர்களின் மனம் மற்றும் உடல், கோயிலில் சுத்தமாக இருக்கும் பிராண சக்தியை அதிகமாக கிரகித்துக் கொள்கிறது. அதுவே அசைவ உணவுகளை சாப்பிட்டவர்களால் இந்த பிராண சக்தியை கிரகித்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அசைவம் நமது உடலில் கெட்ட புத்தியை அளிக்கக் கூடும். தெய்வீக நிலையை அடைய முயற்சிப்பவர்கள் அசைவத்தை அறவே தவிர்க்க வேண்டியது அவசியம் என சித்தர்களும், ரிஷிகளும் கூறியுள்ளனர்.
ஆகவே தான் கோயிலுக்குச் செல்லும் போது மிகவும் எளிமையான சைவ உணவுகளை மிதமான அளவில் உண்டு, மகிழ்ச்சியான மனதுடன் இறைவனை தரிசிக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அசைவ உணவைச் சாப்பிட்ட பிறகு, நீங்கள் கட்டாயம் கோயிலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், சாப்பிட்ட 3 முதல் 4 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட்டுச் செல்வது நல்லது.