பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் வழியில் 125வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீரங்கப்பட்டணம் பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில். இக்கோயிலில் ஸ்ரீ ரங்கநாதர் யோக சயனத்தில் சாளக்ராம மூர்த்தியாகக் காட்சி தருகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நாபிக்கமலத்தில் பிரம்மா என ரங்கநாத பெருமாளுடன் யாரும் இல்லை. பாதத்திற்கு நேரே கௌதம ரிஷி காட்சி தருகிறார்.
ஒரு சமயம் சப்த ரிஷிகளில் ஒருவரான கௌதமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது இந்தத் தலத்திற்கு வந்தார். பெருமாளின் தரிசனம் வேண்டி இங்கு அவர் தவம் இருந்தார். சுவாமி அவருக்கு சயனக் கோலத்தில் காட்சி தந்தார். கௌதமர், பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டினார். கௌதம ரிஷியிடம் ஒரு புற்றை சுட்டிக்காட்டிய சுவாமி, அதில் தனது சயன வடிவ சிலை இருப்பதாகக் கூறினார்.
அதன்படி சிலையைக் கண்ட கௌதமர், பெருமாளுக்கு ரங்கநாதர் எனத் திருநாமமிட்டு பிரதிஷ்டை செய்தார். பிரம்மா சுவாமிக்கு பிரம்மானந்த விமானம் அமைத்தார். பிற்காலத்தில் மன்னர்களால் இந்த கோயில் எழுப்பப்பட்டது. ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்ட இந்தத் தலம் ஸ்ரீரங்கப்பட்டணம் என்றே பெயரும் பெற்றது.
கௌதம ரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த நிகழ்ச்சி சித்திரை வளர்பிறை சப்தமி என்ற ரங்க ஜயந்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி இரத்தின கிரீடம் அணிந்து உலா வருவார். கன்னட வருடப் பிறப்பு மற்றும் தீபாவளி நாட்களில் மட்டுமே மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப்படும். காவிரி பாயும் வழியில் அதன் மத்தியில் தீவு போல அமைந்த மூன்று தலங்களில் பெருமாள் காட்சி தருகிறார். அதில் இது முதல் தலம் என்பதால் இதை ‘ஆதிரங்கம்’ என்கிறார்கள்.
பெருமாள் தலங்களில் மார்கழி வைகுண்ட ஏகாதசி அன்றுதான் சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இந்தக் கோயிலில் ரங்கநாதர் மகர சங்கராந்தி மாலையில் சொர்க்கவாசல் கடக்கிறார். சூரியன் உத்ராயண புண்ணிய கால பயணத்தைத் துவக்கும் நாள் என்பதால் இந்நாளின் புனிதம் கருதி இவ்வாறு செய்கிறார்கள். வருடத்தில் இன்று ஒரு நாள் மட்டும் மூலவர் ரங்கநாதர் வெண்ணை காப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்.
இந்தக் கோயில் பிராகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கஜேந்திர வரதர், வேங்கடாஜலபதி, ஆஞ்சனேயர், கருடாழ்வார் சன்னிதிகள் உள்ளன. பெருமாள் சன்னிதி முகப்பில் சதுர்விம், சதி கம்பம் எனப்படும் இரண்டு தூண்களில் பெருமாளின் இருபத்தி நான்கு வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.