ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை திருத்தலத்தில் தைப்பொங்கல் திருநாளுக்கு மறுநாள் திருவூடல் வைபவம் நடைபெறும். பிருங்கி முனிவர் ஈசனின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். சிவபெருமானை தவிர வேறு யாரையும் வழிபட மாட்டேன் என்ற கொள்கை பிடிப்பு கொண்டவர். ஒரு சமயம் அவர் கயிலை மலைக்கு வந்தார். அங்கு ரிஷப வாகனத்தின் மீது சிவபெருமானும் பார்வதி தேவியும் அருகருகே அமர்ந்திருந்தனர். இதையடுத்து, ஒரு பொன்வண்டாக உருவெடுத்த பிருங்கி முனிவர், சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையில் புகுந்து சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்டார்.
இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவரிடம், ‘என்னை வழிபடாத உன்னுடைய சக்தி அனைத்தும் உன்னை விட்டு அகலட்டும்’ என்று சாபம் கொடுத்தார். இதனால் சக்தியை இழந்த பிருங்கி முனிவர், நிற்க கூட தெம்பு இல்லாமல் கீழே விழப்போனார். இதைக்கண்டு மனமிரங்கிய சிவபெருமான், பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் ஒன்றை வழங்கினார். அப்போது பிருங்கி முனிவர் சிவபெருமானிடம், ‘தனக்கு மோட்சம் வேண்டும்’ என்று வேண்டினர்.
பிருங்கி முனிவர் கேட்ட மோட்சத்தை அளிக்க சிவபெருமான் தயாரானார். ஆனால், ஏற்கனவே பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் கொடுத்து சக்தி அளித்ததில் வருத்தம் அடைந்திருந்த பார்வதி தேவி, இப்போது அவருக்கு மோட்சமும் வழங்க சிவபெருமான் முன்வந்ததில் கோபம் கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் சிவபெருமான் மீது பார்வதி தேவிக்கு ஊடல் உண்டானது. அவர் சிவபெருமானை பிரிந்து கயிலையை விட்டு சென்றுவிட்டார்.
பார்வதி தேவியை சமாதானம் செய்வதற்காக சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமான் தூது அனுப்பினர். ஆனால், அந்தத் தூது வெற்றி பெறவில்லை. தனது பக்தனுக்கு உதவுவதாக? அல்லது மனைவியை சமாதானம் செய்வதா? என்று தவித்து போனார் சிவபெருமான். இருவருமே முக்கியம் என்ற முடிவுக்கு வந்த சிவபெருமான், இரவு முழுவதும் தனியாக இருந்தார். மறுநாள் பக்தனுக்கு அருள்பாலித்துவிட்டு மீண்டும் பார்வதி தேவியிடம் வந்து அவரது கோபத்தைத் தணித்தார். இதனால் சிவ பார்வதியின் ஊடல் முடிவுக்கு வந்தது.
இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை திருத்தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சுந்தரர் மூவரும் மண்டபத்தில் எழுந்தருவார்கள். பின்னர் அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும் திட்டிவாசல் வழியே வெளியே வருவார்கள். இதையடுத்து மாட வீதிகளில் மூன்று முறை சுற்றி வருவார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் இந்த மூன்று முறை மாடவீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.
அப்போது பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜைகள் செய்வர். அன்று மாலை சிவபெருமானுடன் பார்வதி தேவி கொள்ளும் திருவூடல் நிகழ்வு தெருவில் நடத்தப்படும். அப்போது சிவபெருமானிடம் அம்பாள் கோபம் கொண்டு கோயிலுக்குள் சென்று விடுவார். இதைத் தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலையார் தனியாகப் புறப்பட்டுச் செல்வார். அவர் குமரன் கோயில் சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.
அடுத்த நாள் காலை அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது. கிரிவலப் பாதையில் அண்ணாமலையாருக்கு சிறப்புகள் பூஜைகள் செய்யப்படும். அப்போது பிருங்கி முனிவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்து அருள்புரிவார். அன்று மாலை அண்ணாமலையார் ஆலயம் திரும்புவார். அப்போது உண்ணாமுலையம்மனுடன் சமரசம் செய்து கொள்வார். இதனால் அன்னையின் ஊடல் தீர்ந்துவிடும். இறுதியில் அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள்.
தன்னையே நம்பி இருக்கும் பக்தனுக்காக சிவபெருமான் எதையும் தியாகம் செய்வார் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தவே இந்த திருவூடல் நடத்தப்படுகிறது. இந்தத் திருவூடல் வைபவத்தை தரிசிக்கும் கணவன் மனைவியருக்கு இடையில் மறுவூடல் இல்லை என்பது ஐதீகம்.