இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக 'மகா கும்பமேளா' விளங்குகிறது.
பக்தர்களின் கூற்றுப்படி, கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் இந்த புனிதமான காலகட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஒருவரின் பாவங்களை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் ஆன்மீக சக்தியை மேம்படுத்தி, முக்தியை அடைய உதவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டு மகா கும்பமேளா 2025 ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி (45 நாட்கள்) மகா சிவராத்திரியுடன் முடிவடைகிறது. இதில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து 45 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களில் முறையே மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும். அதாவது, ஹரித்வாரி கும்பமேளா நடைபெறுகிறது என்றால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு பின் உஜ்ஜைன் நகரிலும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு பின் நாசிக் நகரிலும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு பின் பிரயாக்ராஜ் நகரிலும் கும்பமேளா நடைபெறும்.
இந்த நான்கு நகரங்களிலும் கும்பமேளா நிறைவடைய 12 ஆண்டுகள் ஆகும். 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிரயாக்ராஜ் நகரில் கொண்டாடும் நிகழ்வே மகா கும்பமேளா என்றழைக்கப்படுகிறது. மகா கும்பமேளா நிகழ்விற்கு, கும்பமேளாவை விட அதிக பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும், மகா கும்பமேளா நிகழ்வு அதிக ஆன்மீக முக்கியத்துவம் பெறுகிறது. இதையொட்டி 13-ம்தேதி தொடங்கவுள்ள மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் நகர் விழாக்கோலம் பூண்டு வருகிறது. கும்பமேளா திடலுக்கு துறவிகள் ஊர்வலமாக வந்து முகாமிட்டு வருகின்றனர்.
கும்பமேளாவில் நீங்கள் தவறவிடக்கூடாத, பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்...
திரிவேணி சங்கமம் : கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி சந்திக்கும் இடத்தில் புனித நீராடுங்கள். பிரயாக்ராஜுக்கு செல்லும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.
ஷாஹி ஸ்னான் : மகா கும்பத்தில் ஷாஹி ஸ்னான் சடங்கு தூய்மைப்படுத்துதல், ஆன்மீக விடுதலை மற்றும் மகத்தான கலாச்சார முக்கியத்துவத்தை குறிக்கிறது.
கங்கா ஆரத்தி : வாரணாசியில் பாயும் கங்கை ஆற்றுக்கு தசவசுவமேத படித்துறையில் செய்யப்படும் அற்புதமான கங்கா ஆரத்தியைக் கண்டு அனுபவியுங்கள். கங்கா ஆரத்தியை காண பக்தர்கள் கங்கைக்கரையில் கூடுகின்றனர்.
டீப் டான் (deep daan) : டீப் டான் என்பது மகா கும்பத்தின் போது நடைபெறும் மற்றொரு அழகான சடங்கு ஆகும். அங்கு ஏற்றப்படும் ஆயிரக்கணக்கான தீபங்கள் புனிதமான திரிவேணி சங்கம் நீரை ஒளிரச் செய்கின்றன. மக்கள் தங்கள் வாழ்க்கையில் இருந்து இருளை விலக்கி, அறிவு மற்றும் ஞானத்தின் வடிவில் ஒளியை வரவழைக்க டீப் டான் செய்கின்றனர்.
அகாரா முகாம்கள் : அகாரா முகாம்கள் என்பது, மகாகும்பமேளாக்களின்போது பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் போன்ற இடங்களில் அமைக்கப்படும் சாதுக்களின் முகாம்கள். கும்பமேளாவுக்காக ஹரித்வாரில் அமைக்கப்படும் சாவ்னி (முகாம்களில்) நிரஞ்சனி அகாரா மிகவும் முக்கியமானது.
கோவில்களுக்குச் செல்லுங்கள் : பிரயாக்ராஜ் இந்தியாவின் புனிதமான நகரங்களில் ஒன்றாகும். இந்த இடத்தில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன. சென்று வாருங்கள்.