

புரட்டாசி மாதம் என்பது தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் ஆறாவது மாதமாகும். இது ஆங்கில மாதமான செப்டம்பர் பாதியிலிருந்து அக்டோபர் பாதி வரை வரும். இந்தாண்டு புரட்டாசி மாதம் நாளை செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 17-ம்தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாடு தான் நம் அனைவரின் நினைவுக்கும் வரும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை மனதார வழிபட்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் அரிசி மாவால் விளக்கு செய்து, அதில் நெய் ஊற்றி பெருமாளுக்கு தீபம் ஏற்றி பெருமாள் வழிபாடு என்பது மிகவும் விசேஷமாகும். பக்தர்கள் பெருமாள் பெயரில் விரதம் இருந்து துளசி தீர்த்தம் சாப்பிட்டு வழிபாடு செய்வர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1வது, 5வது சனிக்கிழமையில் போடுவார்கள். பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.
இந்நாட்களில் நெற்றியில் திருமண் அல்லது நாமம் அணிந்து, "கோவிந்தா, கோவிந்தா" என்ற திருநாமங்களைச் சொல்லி விஷ்ணுவை மனதார துதிப்பார்கள்.
காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிற்கு (பெருமாள்) மிகவும் உகந்த மாதமாக புரட்டாசி கருதப்படுவதால், இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களில் உற்சவமும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை, குறிப்பாய் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவது மிகச் சிறந்தது. இக்காலத்தில் திருப்பதிலும், பிற வைணவத் தலங்களிலும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடக்கும்
அதுமட்டுமின்றி, புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் பக்தர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து, முழுமையான சைவ உணவை உண்ணும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி, உடல் நலம் பேணும் அறிவியல் ரீதியாகவும் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. ஏனெனில், இக்காலநிலையில் காற்றில் ஈரப்பதம் குறைந்து வெப்பம் மாறுபடுவதால், அசைவ உணவுகள் செரிமானக் கோளாறை ஏற்படுத்தும். எனவே, உடல் நலனைப் பேணவே இம்மாதம் முழுவதும் சைவம் சாப்பிடும் வழக்கம் உருவானது.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர், மூதாதையர்களுக்கு விரதம் இருந்து திதி கொடுப்பது அவர்களுடைய ஆசீர்வாதத்தால் (ஆசிர்வாதம்) வம்சம் தடையின்றி வளரும்.
அதாவது புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் முன்னோர்களை நினைத்து திதி கொடுத்து வழிபாடு செய்யும் மஹாளய பட்ச காலம் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் தான் ஒன்பது நாட்கள் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வேண்டி நவராத்திரி கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவில் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எனவே எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் விஷ்ணு பகவானை வழிபட வேண்டும்.
பெருமாளின் அம்சமாக கருதப்படுபவர் புதன். அவருடைய வீடு கன்னி ராசி. புரட்டாசி மாதத்தில் தான் சூரியன் கன்னி ராசியில் அமர்கிறார்.
எனவேதான், இம்மாதத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும், புதனுக்கு நட்பு கிரகமாக கருதப்படுபவர், சனிபகவான்.
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மேலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் அல்லது சனிக்கிழமைகளில் பலரும் அசைவ உணவைத் தவிர்த்து, எளிய சைவ உணவை உட்கொண்டு விரதம் இருப்பர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது சனி தோஷத்தின் தாக்கத்தை குறைத்து, மன அமைதியையும் செல்வத்தையும் தரும்.
ஜாதகத்தில் ராகு, கேதுவால் ஏற்படும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம் போன்ற பல தோஷங்களும் புரட்டாசி மாத கருட வழிபாடால் விலகும். சனி, புதன் திசை நடப்பவர்கள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைகள் அனைத்து நீங்கும். பாவங்கள் விலகி புண்ணியம் கூடும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.
புரட்டாசி சனிக்கிழமையில் காகத்திற்கு எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.
மேலும் புரட்டாசி மாதத்தில் நடத்தப்படும் சிவபெருமான், விநாயகர், அம்மன் வழிபாடும் சிறப்பான பலனை பெற்றுத்தரும்.