

புரட்டாசி மாதம் என்றாலே அது ஒரு சிறந்த ஆன்மீக மாதமாக கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதம் முழுவதும் இந்துக்கள் எல்லோருமே வெங்காயம், பூண்டு மற்றும் அசைவம் உண்பதை தவிர்ப்பார்கள். மேலும் இந்த புரட்டாசி மாதம் பெருமாளை வணங்குவதற்கான சிறந்த மாதமுமாகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிலர் மாவிளக்கேற்றி பெருமாளுக்கு அர்ச்சனை செய்வார்கள். இன்னும் சிலர் பலவிதமான உணவுகளை சமைத்து கடவுளுக்கு படைப்பார்கள்.
புரட்டாசி மாதத்தில் பிதுர்க்களுக்கான காரியங்களும் நடக்கின்றன, தெய்வீக வழிபாடுகளும் நடக்கின்றன. இப்படிபட்ட இந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புதான் என்ன? பார்க்கலாமா...
இந்த புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக திகழ்வது புதன் கிரகம். இந்த புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில்தான்.
ஆகவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கின்ற இந்த புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கு உரிய மாதமாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருக்கும். சூரியனுக்கு உரிய முக்கிய தெய்வம் பசுபதி அதாவது சிவபெருமான்.
புதனுக்கு உரிய முக்கிய தெய்வம் நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணையும் போது சங்கர நாராயணராக கருதப்படுகிறார்கள்.
இந்த காரணத்தினால்தான் சூரிய பகவானிற்கு சூரியநாராயண ஸ்வாமி என்ற பெயரும் வந்தது.
ஹரியும் சிவனும் ஒன்றே என்பதை இதன் மூலமாக திட்டவட்டமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த புரட்டாசி மாதத்தில் சக்கிரன் கன்னியில் வந்து அமர்வதாக ஜோதிடத்தில் கூறப்படுகின்றன. மேலும், ஜோதிடத்தில் இந்த சுக்கிரனை கண்பார்வைக்கு உரிய கோளாக கருதுகிறார்கள் . இந்த சுக்கிரன் கன்னி ராசியில் பலவீனமாகஅமர்வதாலும், சூரியனோடு இணைந்து அஸ்தமனம் பெறுவதாலும் இந்த நேரத்தில் கண்நோய் சார்ந்த உபாதைகள் மனிதர்களுக்கு வருவதாக ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன. ஆகவேதான் Conjunctive eye என்கிற கண்நோய் பெரும்பாலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நமக்கு ஏற்படுகிறது.
சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்து சந்திரனின் தீட்சண்யமும் இணையும் காலத்தில் நல்ல மழை பெய்யும் என்பது ஜோதிட விதி. இதனால்தான் இந்த மாதத்தில் பகல் நேரத்தில் கடும் வெயில் காய்ந்தாலும், இரவு நேரத்தில் மழையும் பெய்கிறது.
புரட்டாசியில் வரும் அமாவாசை, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முன்னால் வரும் 15 நாட்களை நாம் மஹாளய பட்சம் என்கிறோம்.
இந்த மஹாளய பட்சத்தில் இறந்துபோன நம் பெற்றோர்களுக்கு மட்டுமில்லாமல் , நண்பர்கள், அறிந்தவர், அறியாதவர் என இறந்த போனவர்கள் எல்லோரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். ஏனென்றால், இந்த மஹாளயபட்சத்தில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தங்களுடைய சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வருவார்கள் என சொல்லப்படுகிறது.
இந்த 15 நாட்களும் அவர்களின் நினைவாக சுபகாரியங்களை தவிர்த்து அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களுடைய ஆன்மாக்கள் சாந்தி அடையும் என்றும் நம்ப படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த நாட்களில் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் அன்னதானம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக மகாபாரதத்தில் கர்ணனின் கதை நமக்கு எடுத்து காட்டுகிறது.
தான தர்மங்களில் தலை சிறந்து விளங்கிய கர்ணன் இறந்த பிறகு சொர்க்கலோகத்தில் அவர் செய்த தான தர்மங்களின் பலனாக அவருக்கு தங்கமும், வெள்ளியும், ரத்தினங்களும் கிடைத்தன. ஆனால், அவருக்கு சாப்பிடுவதற்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை. காரணம் என்னவென்றால் அவர் எத்தனையோ தான தர்மங்கள் செய்திருந்த போதிலும் தான் வாழ்ந்த காலத்தில் அன்னதானம் மட்டும் செய்திருக்கவில்லை.
பிறகு தன் தவறை உணர்ந்த கர்ணன் தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு திரும்ப வந்து 14 நாட்கள் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ததோடு மட்டுமில்லாமல் தன்னுடைய முன்னோர்களுக்கு உரிய கடன்களையும் செய்து மீண்டும் சொர்க்கம் திரும்பியதாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவேதான் அந்த 14 நாட்களுடன் அமாவாசையையும் சேர்த்து மொத்தம்15 நாட்களும் மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.
பிதுர்க்களுக்கான காரியம் முடிந்தவுடன் தேவகாரியம் தொடங்கும் என்பதை உணர்த்தும் வகையில் மஹாளய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
தெய்வத்தையும் பிதுர்க்களையும் ஒரே மாதத்தில் வழிபடுகின்ற காரணத்தினால் தான் இந்த புரட்டாசி மாதம் ஒரு சிறந்த புனிதமான மாதமாக கருதப்படுகிறது.