புரட்டாசி மாதத்தின் முப்பெரும் வழிபாடுகள்: விஷ்ணு, சக்தி, பித்ரு வழிபாட்டின் மகத்துவம்!

புரட்டாசி மாதம் மகாவிஷ்ணு (பெருமாள்) வழிபாடு, சக்தி வழிபாடு (நவராத்திரி) மற்றும் முன்னோர்கள் வழிபாடு (மகாளய பட்சம்) ஆகியவற்றிற்கு மிகவும் உகந்தது.
புரட்டாசி வழிபாடு -முன்னோர்கள் வழிபாடு
புரட்டாசி வழிபாடுAI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாடு தான் நம் நினைவுக்கு வரும். குறிப்பாக சிறப்புமிக்க புரட்டாசி மாதத்தில் பெருமாளை மனதார வழிபட்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. அதிலும் இந்த மாதம் மகாவிஷ்ணு (பெருமாள்) வழிபாடு, சக்தி வழிபாடு (நவராத்திரி) மற்றும் முன்னோர்கள் வழிபாடு (மகாளய பட்சம்) ஆகியவற்றிற்கு மிகவும் உகந்தது.

காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிற்கு மிகவும் உகந்த மாதமாக புரட்டாசி கருதப்படுவதால், இந்த மாதத்தில் பெரும்பாலான பெருமாள் கோவில்களில் உற்சவமும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

அதேசமயம், புரட்டாசி மாதம் முழுவதும் தெய்வ வழிபாட்டிற்கும் ஆன்மிக கடமைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுவதால், பொதுவாக இம்மாதத்தில் திருமணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் (வீடு குடியேறுதல்) போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது வழக்கமாகும்.

இந்த மாதத்தில் வரும் மிக முக்கியமான ஆன்மிக விசேஷங்கள் மற்றும் அதன் சிறப்புகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

புரட்டாசி சனிக்கிழமை விரதம் :

புரட்டாசி மாதத்தின் மிக முக்கியமான விசேஷம் புரட்டாசி சனிக்கிழமை ஆகும். மகாவிஷ்ணு வெங்கடாசலபதியாக பூலோகத்தில் அவதரித்த மாதம் இது என்று நம்பப்படுகிறது.

சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், சுண்டல், வடை மற்றும் பழங்கள் நைவேத்தியமாக படைத்து, விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் பெருமாள் ஸ்லோகங்களைச் சொல்லி, துளசி அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். இவ்வாறு வழிபடுவது, பெருமாளின் அருள் கிடைப்பதுடன், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களைக் குறைக்கும் என்பது நம்பிக்கை. பூஜையின் முடிவில் துளசி இலை போட்ட தீர்த்தத்தை அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம். சனிக் கிழமையில் ராகு காலம், எமகண்டம் தவிர்த்த நல்ல நேரத்தில் பெருமாளுக்குப் பூஜை செய்யவேண்டும்.

இந்த மாதத்தில் பெரும்பாலான தமிழ் குடும்பங்கள் முழுமையாக அசைவ உணவுகளைத் தவிர்த்து தீவிர விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

முன்னோர்கள் வழிபாடு
முன்னோர்கள் வழிபாடுAI image

மகாளய பட்சம் மற்றும் மகாளய அமாவாசை (முன்னோர்கள் வழிபாடு):

புரட்டாசி மாதத்தின் தேய்பிறை காலத்தில் வரும் 15 நாட்கள் மகாளய பட்சம் (பித்ரு பட்சம்) என்று அழைக்கப்படுகிறது. அதாவது புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை உள்ள 15 நாட்கள் மகாளய பட்சம் என்றும், அதன் நிறைவு நாளான அமாவாசை மகாளய அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.

இக்காலத்தில் எமலோகத்தில் இருந்து நமது மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) பூமிக்கு வந்து அவரவர் இல்லங்களில் தங்குவதாக ஐதீகம்.

இந்த 15 நாட்களில் வரும் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது, தான தர்மங்கள் செய்வது, தை மற்றும் ஆடி அமாவாசைகளை விடவும் பல மடங்கு புண்ணியத்தைத் தரும். குறிப்பாக ஆண்டு முழுவதும் திதி கொடுக்க மறந்துவிட்டவர்கள்கூட, இந்த 15 நாட்களில் தங்களுக்குத் தெரிந்த நாட்களில் தர்ப்பணம் கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
புரட்டாசி சனியில் பெருமாளின் அருள் பெற மாவிளக்கு ஏற்றி வழிபடுவது எப்படி? முழு விவரம்!
புரட்டாசி வழிபாடு -முன்னோர்கள் வழிபாடு

இந்த ஆண்டு (2026) மகாளய பட்சம் செப்டம்பர் 27 அன்று தொடங்கி, வரு அக்டோபர் 10 அன்று மகாளய அமாவாசையுடன் நிறைவடைகிறது.

துர்கா நவராத்திரி (சக்தி வழிபாடு):

மகாளய அமாவாசை முடிந்து அடுத்த நாள் (வளர்பிறை பிரதமை) தொடங்கும் 9 நாட்கள் நவராத்திரி திருவிழா ஆகும்.

நவராத்தி 9 நாட்களும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரைக் போற்றி வழிபாடு செய்வார்கள். முதல் மூன்று நாட்கள் துர்கை (வீரத்தின் வடிவம்), அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி (செல்வத்தின் வடிவம்), கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி (ஞானத்தின் வடிவம்) எனப் போற்றப்படுகின்றனர்.

நவராத்திரியின் 9-ம் நாள் கல்வி, கலைகள் மற்றும் தொழில் உபகரணங்களை வணங்கும் நாளாகும். 10-ம் நாள் தீமையை அழித்து நன்மை வென்ற நாளாகவும், புதிய தொழில் மற்றும் கல்வியைத் தொடங்க (வித்யாரம்பம்) மிக உகந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனைகள் நடத்தப்படுகின்றன.

பிரதோஷம் மற்றும் ஏகாதசி:

புரட்டாசி மாதத்தில் வரும் சனி பிரதோஷம் மற்றும் உமா மகேஸ்வர விரதம், ஏகாதசி விரதங்கள் சிவபெருமானையும் விஷ்ணுவையும் ஒருசேர வழிபட உகந்த நாட்களாகும்.

இதையும் படியுங்கள்:
புரட்டாசி மாதத்தின் ஆன்மீக ரகசியங்கள்: விரதம், வழிபாடு மற்றும் பலன்கள்!
புரட்டாசி வழிபாடு -முன்னோர்கள் வழிபாடு

தூர்வாஷ்டமி மற்றும் ஜேஷ்டாஷ்டமி விரதங்கள்:

விநாயகப் பெருமானுக்குரிய இவ்விரதங்களை அனுஷ்டிப்பதன் மூலம் தடைகள் நீங்கி உடல் வலிமை மற்றும் நல்வாழ்வு பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com