
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாகவும், முன்னோர் வழிபாட்டுக்குரிய மாதமாகவும் கருதப்படுவதால் இந்த மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானதாகும். பௌர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது நாள் தேய்பிறை அஷ்டமி என்று கூறப்படுகிறது.
சிவபெருமானின் உக்கிர வடிவங்களில் ஒருவராக விளங்குபவர்தான் காலபைரவர். இவர் அவதரித்தது தேய்பிறை அஷ்டமி தினமாகும். சிவன் கோயிலில் ஈசானிய மூலையில் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார் காலபைரவர். காலையில் ஆலயம் திறக்கும்போது முதல் பூஜையும், இரவில் நடை சாத்தப்படும்போது கடைசி பூஜையும் காலபைரவருக்கு செய்யப்பட வேண்டும் என்பது நித்ய பூஜா ஆகம விதியாகும். எனவே, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
காலபைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஜாதக தோஷங்களைப் போக்கவும், கடன், நிலம் சார்ந்த பிரச்னைகளைப் போக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அஷ்டமி திதியன்று பொதுவாக, இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டும். சுப காரியங்கள் எதுவுமே அஷ்டமி, நவமி திதியில் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது. புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு, உக்கிர தெய்வங்களை வழிபடுவது, அம்பாளை வழிபாடு செய்ய உகந்தது.
தேய்பிறை அஷ்டமியன்று தொடர்ந்து நெய் விளக்கு அல்லது சிவப்பு நிற திரியில் விளக்கேற்றி வருபவர்களுக்கு நாள்பட்ட கடன், நோய் உள்ளிட்டவை தீரும் என்பது ஐதீகம். பைரவருக்கு செவ்வரளி மாலை சாத்தி மிளகு கலந்த சாதம், தயிர் சாதம் நைவேத்தியம் செய்ய, வாழ்வில் உயர்வான நிலையை அடையலாம்.
சனி பகவானின் தொல்லைகள், பைரவரை வழிபடுவதால் குறையும். சனி பெயர்ச்சி எதிர்மறையாக நடப்பவர்கள் மற்றும் ஜாதக ரீதியாக சனி தோஷம் இருப்பவர்கள் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு விளக்கேற்றி வழிபடலாம். தேய்பிறை அஷ்டமி விரதம் இருப்பவர்கள் பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிட வேண்டும். இரவில் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
இப்படி முறையாக விரதம் இருந்து பைரவரின் மந்திரங்களை உச்சரித்து வழிபட, துன்பங்கள் நீங்கி, கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பதில் ஐயமே இல்லை. கோயிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலிருந்தே பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபட அத்தனை நன்மைகளும் கிடைக்கும். வடை மாலை சாத்தி காலபைரவரை வழிபட, வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது வழக்கமாக உள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த காலபைரவரை புரட்டாசி மாதம் மட்டுமல்லாமல், எதிர்வரும் காலங்களிலும் வழிபட்டு மேன்மையான நிலையை அடைவோம்.