நாளை மகாளய அமாவாசை- மறந்தும் இதையெல்லாம் செய்யாதீங்க...!!

மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு, பித்ருக்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்த நாளில், என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது தெரியுமா?
Mahalaya paksha
Mahalaya paksha மகாளய பட்சம்
Published on

இந்தியாவில் இந்து சமய வழிபாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மக்கள் பண்டிகைகள், விரதம், வழிபாடு போன்ற ஆன்மிக விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதை கடமையாக பலரும் செய்து வருகின்றனர். அதுவும் தென்னிந்திய மாநிலங்களில் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதை காலம்காலமாக சாஸ்திர சம்பிரதாயங்களுடன் கடைபிடித்து வருகின்றனர். மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதுவும் மற்ற அமாவாசைகளை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு மிக முக்கியமான வழிபாடு செய்யும் காலமாக கருதப்படுகிறது. இந்த நாளில், நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாகவும், அவர்கள் நம்முடைய வழிபாட்டை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்குவதாகவும் நம்பப்படுகிறது.

இந்த நாளில் தர்ப்பணம், விரதம், அன்னதானம் செய்வதால் பித்ரு தோஷம் நீங்கி, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பித்ரு கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை தர்ப்பண ரகசியங்கள்!
Mahalaya paksha

மகாளய அமாவாசை நாளில் மக்கள் விரதம் இருந்து கடற்கரைப் பகுதிகளில் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். மேலும், முக்கிய நீர்நிலைகள் அல்லது கடல் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் அதிக பலன் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு மகாளய அமாவாசை நாளை(21-ம்தேதி) வருகிறது.

சாதாரண அமாவாசை நாட்களில் மூன்று தலைமுறை முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளயபட்ச அமாவாசை நாளில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனிப்பெருஞ் சிறப்பாகத் திகழ்கிறது. அதேபோல் மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், ஏழேழு ஜென்ம பாவங்களும் போகும் என்பது ஐதீகம். எனவே, மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக, முன்னோர்களுக்கு, இறந்தவர்கள் ஆன்மா திருப்தி அடைய திதி கொடுக்க வேண்டும்.

மகாளய அமாவாசையில் வரும் சூரிய கிரகணம் :

செப்டம்பர் 21-ம் தேதி நிகழ உள்ள சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 10.59 மணி தொடங்கி, செப்டம்பர் 22ம் தேதி அதிகாலை 3.23 மணி வரை கிரகணம் தொடரும் என்றும் நள்ளிரவு 1.11 மணிக்கு கிரகணம் உச்சமடையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மகாளய பட்சம்: 15 நாட்களில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசியம்!
Mahalaya paksha

இந்திய நேரப்படி இரவு நேரத்திலேயே சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. அதனால் மகாளய அமாவாசை விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுப்பவர்கள் செப்டம்பர் 21-ம் தேதி காலை சூரிய உதயத்திற்கு பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம். அதேபோல் இரவு 9.30 மணிக்கு முன்னதாக விரதத்தை நிறைவு செய்து விட வேண்டும்.

மகாளய அமாவாசை செப்டம்பர் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிகாலை 01.03 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 22-ம்தேதி அதிகாலை 1.42 வரை அமாவாசை திதி உள்ளது.

தர்ப்பணம் கொடுக்க சிறந்த இடங்கள் :

நதிகள் சங்கமிக்கும் இடங்கள், கடல்கள், புனித நதிகள் பாயும் கரைகள் ஆகியவற்றில் தர்ப்பணம் செய்வது பல மடங்கு பலன் தரும். முன்னோர்களின் பசியையும் தாகத்தையும் போக்கவும், அவர்களின் ஆசிகளைப் பெறவும் எள் கலந்த தண்ணீர் கொண்டு தர்ப்பணம் செய்யப்படுகிறது.

சென்னையில் தர்ப்பணம் கொடுக்க மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகள், சிவன் கோவில்களில் உள்ள குளக்கரைகள் தர்ப்பணம் கொடுக்க சிறந்த இடங்களாகக் கருதப்படுகின்றன.

நாளை நடைபெற உள்ள மகாளய அமாவசை நாளில், நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பன குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை :

* அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது.

* மகாளய அமாவாசை அன்று போதைப்பொருட்கள், மது, புகை பழக்கம் கூடாது.

* வீட்டில் அவைசம் செய்யவோ சாப்பிடவோ கூடாது. மீதமான உணவுகளை சாப்பிடக் கூடாது.

* நாம் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது.

* நகம் மற்றும் முடியை வெட்டக்கூடாது.

* யாரிடமும் கோபப்படவோ, அடிக்கவோ, தகாத வார்த்தைகளை பயன்படுத்தவோ கூடாது.

* நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது எள்ளை கடனாக வாங்கி தர்ப்பணம் செய்யக்கூடாது.

* தர்ப்பணம் கொடுக்கும் போது ராகு காலம், எமகண்டம் போன்றவற்றை பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் முன்னோர்களுக்கு படையல் போடும் போது ராகு காலம், எமகண்டம் இருக்கக்கூடாது.

* முன்னோர்கள் வழிபாடு முடியும் வரை வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றக்கூடாது.

* சுமங்கலி பெண்கள், பெண் பிள்ளைகள் பெற்றோருக்காக எள்ளும் தண்ணீரும் இறைத்து பிண்டம் வைக்கக்கூடாது.

மகாளய அமாவாசை
மகாளய அமாவாசைImage Credits: Times Now Kannada

செய்ய வேண்டியவை :

* அமாவாசைக்கு முதல் நாளே வீட்டை சுத்தமாக கழுவி விடவேண்டும்.

* மகாளய அமாவாசை அன்று அதிகாலை சீக்கிரமாகவே எழுந்து சுத்தமான நீரில் நீராடிய பின்னர் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பின்னர் வீட்டில் விளக்கு ஏற்றி முன்னோர்களுக்கு உணவு படைத்து வழிபாடு செய்த பின்னர் காகத்திற்கு கிழக்கு பார்த்தவாறு சாதம் வைத்து, பிறகு நீர் விலவி அதை காகம் எடுத்த பிறகு தான் நாம் சாப்பிட வேண்டும். ஏனெனில் காகமாக வந்து நம் முன்னோர்கள் நம்முடைய வழிபாட்டை ஏற்றுக்கொண்டு நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.

* ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த பொருளுதவி மற்றும் தானங்கள் செய்ய வேண்டும். பசி என வருபவர்களுக்கு முடிந்த வரையில் சாப்பாடு போடவேண்டும்.

* மகாளய அமாவாசை அன்று முறைப்படி பித்ருக்கடன் செய்வது, பித்ரு தோஷம், சாபம் ஆகியவற்றைப் போக்கும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், வஸ்திர தானம் அளித்து, பசுக்கள், நாய்கள் மற்றும் காகங்களுக்கு உணவளிக்க வேண்டும், இதைச் செய்தால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதாவது ஏதேனும் இரு ஜீவராசிகளுக்கு கண்டிப்பாக அன்னதானம் கொடுக்க வேண்டும்.

* உங்களிடம் உங்களுடைய முன்னோர்கள் படம் இல்லை என்றால் தெற்கு பார்த்தவாறு ஒரு அகல் விளக்கு மட்டும் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.

* மகாளய அமாவாசை அன்று மாலை 6 மணிக்கு மேல் உங்கள் வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முன்னோர்களை வேண்டி ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

* மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டை முடித்த பின்னர் நீங்கள் போகக்கூடிய தூரத்தில் குலதெய்வம் கோவில் இருந்தால் அங்கு சென்று வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். அப்படி அருகில் குலதெய்வம் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
மகாளய பட்சம்: ஒருமுறை தர்ப்பணம் செய்தால் பல ஜன்ம பாவங்கள் தீர்க்கும் வழிபாடு!
Mahalaya paksha

இதையெல்லாம் நாம் கடைப்பிடிக்கும் போது நமது முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து நம்மையும் நமது சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com