

விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறுகிறார் அருணகிரிநாதர். அவர் வென்றது எப்படி? அதுபோல் விதியை மதியால் வென்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்கள் யார் யார் என்பதை இப்பதிவில் காண்போம்.
ஊழில் பெருவழி யாவுல மற்றொன்று சூழினும் தான் முந்துரும்- என்கிறார் திருவள்ளுவர்.
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயல்பட்டாலும் அந்த வழியிலேயோ வேறொரு வழியிலேயோ அது மீண்டும் நம்முடன் வந்து நிற்கும். விதியைவிட வேறு எவை வலிமையானவை என்று வள்ளுவர் கூறுகிறார்.
ஆழ்கடலில் நின்றுகொண்டு ஒரு கால் படியில் நீரை அமுக்கி அமுக்கி அளந்தாலும் ஒரு கால்படி நான்கு கால்படி நீரை கொள்ளாது. அதுபோல்தான் கண்ணுக்கு அழகான, கை நிறைய சம்பாதிக்கும் கணவனும், கிடைத்துவிட்டாலும் அவை எல்லாவற்றையும் நீ அனுபவித்து விடலாம் என்று கணக்குப் போடாதே. எவ்வளவு நீ அனுபவிக்க வேண்டும் என்று விதி விதிக்கப்பட்டிருக்கிறதோ அவ்வளவுதான் உன்னால் அனுபவிக்க முடியும் என்கிறார் அவ்வையார்.
இதே கருத்தின்படி, வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி கொடுத்தார்க்குந் துய்த்தல் அரிது என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
விதிச்சது நடக்கும் விதிக்காதது நடக்காது என்று தீர்க்கமாக சொல்கிறார் -ரமண மகரிஷி.
உங்களிடம் இருந்து எடுக்கப்பட வேண்டியவையும், உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவையும் என்றோ நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்கிறது பைபிள்.
இந்த உலகில் இறைவன் கொடுத்ததை எவராலும் பறிக்க முடியாது; இறைவன் மறுத்ததை எவராலும் கொடுக்க முடியாது என்கிறது இஸ்லாம்.
இப்படி எல்லாம் கூறப்பட்டாலும், இறைவனின் திருவடி என்னென்ன செய்யும் என்பதை அருணகிரிநாதர் தெளிவாக கூறியிருக்கிறார்.
அருணகிரியாரின் தலைமேல் மதியான முருகனின் திருவடிப்பட்டு பிரம்மன் எழுதிய தலை எழுத்து விதி அழிந்தது. ஆகவே "நாளென் செய்யும்; வினைதான் என் செய்யும். என்னை நாடி வந்த கோள் என் செய்யும்" என பாடினார் அருணகிரிநாதர்.
இதைத்தான் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். இங்கு 'என் தலைமேல் நின் கால்பட்டு அழிந்தது அயன் கை எழுத்தே'. என்பது கந்தர் அலங்காரப் பாடல். எனவே இறைவனின் திருவடியானது நம் விதியையே மாற்ற வல்லது.
பெருமாள் கோவில்களுக்கு சென்றால் நம் தலை மீது இறைவனின் திருவடிச் சின்னமான சடாரி வைக்கப்படுவது நம் தலையெழுத்து சிறப்பாக அமையவேண்டும் என்பதால்தான்.
அஜ்மீர் ரயில் நிலையத்திலிருந்து பனிரெண்டு மைல் தொலைவில் உள்ளது புஷ்கரம் என்கின்ற புண்ணிய ஸ்தலம். இந்த க்ஷேத்திரத்தில் தாமரைப் பூ விழுந்ததால் புஷ்கரம் என்று இதற்கு பிரம்மா பெயரிட்டதாக வரலாறு. புஷ்கரம் என்றால் தாமரைப்பூ. இங்கு பிரம்மா தவம் செய்தபோது நாரதர் இடை புகுந்து கலகம் செய்து பிரம்மாவை பற்றிய சில பொய் செய்திகளை அவருடைய மனைவியான சாவித்திரியின் காதில் ரகசியமாக போட்டு கலகமூட்ட, சாவித்திரி அவைகளை உண்மை என்று நம்பி பிரம்மாவிடம் கோபித்துக்கொண்டு தவத்திலிருந்து எழுந்து சென்றார்.
தவம் செய்யும்போது மனைவி இல்லாமல் தவம் செய்யக்கூடாது என்ற ஒரு விதி இருப்பதால் பிரம்மா கோப ஜாதியைச் சேர்ந்த வேறொரு கன்னிகையைத் திருமணம் செய்து அவளுக்கு காயத்ரி என்று பெயர் சூட்டி யாகத்தை தொடர்ந்தார். இதைக்கண்ட சாவித்திரி பொங்கி எழுந்து பிரம்மா உள்ளிட்ட மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும் சாபம் இட்டார்.
சாவித்திரி சபித்ததால் பிரம்மாவுக்கு இத்தலத்தை தவிர வேறு எந்த இடத்திலும் கோயில் இல்லை என்பது வரலாறு. ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்கள் இந்த புஷ்கரணியில் நீராடி பிரம்மனை வழிபாடு செய்து வந்தால் குரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
புராணங்களில் சாவித்திரி, மார்க்கண்டேயன் போன்றவர்கள் தங்கள் கடமையாலும், இறை நம்பிக்கையாலும் விதியை மதியால் வென்றதாகக் கூறப்படுகிறது. அதன் புராண வரலாறும் நாம் அறிந்ததே.
ஆதலால், இறைவனை யாதனம், சிரவணம், கீர்த்தனம், அர்ச்சனம், துதி என்ற ஐந்து நிலைகளில் அவன் திருவடி பணிந்து வழிபட்டு, ஆற்றவேண்டிய கடமைகளை ஒரு குறையும் வைக்காது வீட்டினருக்கும், தெய்வத்திற்கும் செய்து வந்தால், இறைவன் பார்வை நம் மீது படும். அந்த அருள் பார்வை நமக்கு நல்ல மதியைக் கொடுக்கும். அந்த மதியால் விதியை வெல்லலாம்.