

'நாராயணீயம்' என்ற நுலை இயற்றிய நாராயண பட்டத்ரியின் பெருமைகளைக் கேட்ட குட்டப்பன் என்னும் பக்தன். அவரிடம் சென்று தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். ஆனால், அவன் கல்வியறிவு இல்லாதவன் என்பதால், அவனை சமையல் அறையில் உதவியாக இருக்கும்படி சொன்னார் நாராயண பட்டத்ரி.
ஒரு நாள் குட்டப்பன் நாராயண பட்டத்ரியிடம் " குருவாயூரப்பன் எப்படி இருப்பார்? என்று கேட்டான். ஏதோ எரிச்சலில் ' எருமை வடிவில் இருப்பார் என்று கூறிவிட்டார்.
குரு சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிய சீடனும், குருவாயூப்பனை எருமையாகவே பாவித்து வணங்க ஆரம்பித்தான். ஒருமுறை நாராயண பட்டத்ரி குருவாயூரப்பன் கோவிலுக்குச் சென்றபோது அவருடன் குட்டப்பனும் சென்றான்.
அப்போது வீதி உலா கொண்டு செல்வதற்காக உற்சவரை சன்னதிக்குள் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை.
அங்கிருந்தவர்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, குட்டப்பன் நாராயண பட்டத்ரியிடம் ' சுவாமியின் கொம்பு இடிக்கிறது; அதனால் தான் வெளியே கொண்டு வர முடியவில்லை ' என்றான்.
நாராயண பட்டத்ரி கோயிலுக்குள்ளே கவனித்தபோது, சுவாமி எருமை வடிவில் காட்சி தந்தார்.குட்டப்பனின் பக்தியையும் பெருமையையும் அப்போது தான் உணர்ந்தார் அவர்.
இறைவன் காலில் முள்!
ஒரு இளைஞனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அவன் வசிக்கும் ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் தினமும் சொற்பொழிவு ஆற்றுவார். இறைவன் இருக்கிறார் என்பதே அவரது பேச்சின் சாரமாக இருக்கும்.
அவரது பேச்சைக் கேட்ட இளைஞன், அவரிடம் சென்று, இறைவனை நேரில் பார்த்தால் அவர் சொல்வதை நம்புவதாகக் கூறினான்.
இறைவனை நினைத்து தவமிருந்தால், அவன் விரும்பியபடியே நடக்கும் என்றார் துறவி. இளைஞனும் அதனை ஏற்றுக்கொண்டு, கடும் தவம் இருந்தான்.
ஒரு நாள் அவனுக்கு இறைவன் காட்சி தந்தார்.ஆனாலும், அவனது சந்தேக புத்தி அப்போதும் தீரவில்லை. வந்திருப்பது கடவுள்தானா என ஆய்வு செய்ய ஆரம்பித்தான். அதை புரிந்துகொண்ட இறைவன்." நான் உன்னுடனேயே இருக்கிறேன். ஆனால், உன் பார்வைக்கு புலப்பட மாட்டேன்." என்றார்.
"சுவாமி! நீங்கள் என்னுடன் இருப்பதை எப்படி நான் தெரிந்துகொள்வது?" என்று கேட்டான்.
அதற்கு இறைவன்." நீ எங்கு சென்றாலும், நான்கு பாதச்சுவடுகள் தெரியும். அதில் இரண்டு என்னுடையது." என்றார்.
ஒரு நாள் அந்த இளைஞன் சந்தேகத்துடன், தான் வந்த பாதையில் திரும்பி பார்த்தான். அங்கே இரண்டு பாதச்சுவடுகள் மட்டுமே இருந்தது.
தன்னை இறைவன் ஏமாற்றியதாக கருதிய இளைஞன், சத்தமாக "இங்கே இரண்டு பாதச்சுவடுகள் மட்டும்தானே உள்ளது. இறைவா! நீ என்னுடன் இல்லையா?" என்று கத்தினான்.
அப்போது இறைவன் அவனிடம்," பக்தனே! என்னோடு இருப்பவர்கள் துன்பப்படுவதை பொறுக்க மாட்டேன். சற்று தள்ளிப்பார். அங்கே முள் கிடக்கிறது அல்லவா? எனவே, நான் முன்னரே சென்று அந்த முள் உன் காலில் குத்த இருந்ததைக் தடுக்கும் வகையில் என் காலில் குத்திக் கொள்ளச் செய்தேன்." என்றார்.
இறைவனின் கருணையை உணர்ந்த அவன், அவரிடம் மன்னிப்பு கேட்டான்.