

ஒருவர் வாழ்க்கையில் ராகு கிரக தோஷம் ஏற்பட்டால் அவர் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். இதனால் திருமணத் தடை, ஆரோக்கிய சீர்கேடு, குடும்பம் மற்றும் வியாபாரம் போன்றவற்றில் பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இந்த தோஷத்தால் தூக்கமின்மை, கெட்ட கனவுகள், உடல் அசதி, சோம்பல், பணக்கஷ்டம் போன்றவையும் ஏற்படலாம். சில நேரம் குடும்பத்தில் அனாவசிய செலவுகள், வழக்கு பிரச்னைகள் போன்றவையும் ஏற்படும். ராகு தோஷத்தைப் போக்கும் சில முக்கியமான பரிகாரத் திருத்தலங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. காளஹஸ்தி: இங்கு காளத்தி நாதரின் உருவில் ராகுவும் கேதுவும் இருப்பதாக ஐதீகம். இதனால் கிரகண காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை. இங்கு கோயில் வழி சுற்று அப்பிரதட்சிணமாக அமைந்திருக்கின்றது.
2. இராமேஸ்வரம்: இங்குள்ள தேவிப்பட்டினம் சென்று ஸ்ரீஇராமர் வழிபட்ட நவகிரகங்களை வழிபட்ட பிறகு இராமேஸ்வரம் சென்றால் ராகு தோஷம் மட்டுமின்றி, அனைத்து தோஷங்களும் நீங்கும்.
3. திருப்பாம்புரம்: ராகுவால் அதிக மனச்சோர்வு ஏற்பட்டவர்கள் இத்தலம் சென்று வழிபட ராகு அருள் கிடைக்கும்.
4. நாகர்கோவில்: இங்குள்ள நாகநாதர் ஆயில்ய நட்சத்திரத்துக்கு அதிபதியாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரத்தன்று விசேஷ பூஜை நடைபெறும்.
5. திருச்செங்கோடு: அர்த்தநாரி உருவத்தில் அருளும் இத்தல சிவன், பார்வதியை வழிபட ராகு தோஷம் விலகும்.
6. பேரையூர்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோயிலில் வழிபட ராகு தோஷம் நீங்கும். கோயில் மதில் முதல் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப விக்ரகங்கள் உள்ளன.
7. அஷ்டதசபுஜ மகாலெக்ஷ்மி துர்கா தேவி: புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்கையை வழிபட, ராகுவின் அருள் கிடைக்கும். ஜாதகத்தில் ராகு, சுக்கிரன் இணைந்தவர்கள் இந்த துர்கையை வழிபடுவது நல்லது.
8. ஸ்ரீ அரியநாச்சியம்மன்: விருதுநகர் மாவட்டம், நல்லுக்குறிச்சி கிராமத்தில் சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள அரியநாச்சியம்மன் மட்டும்தான் ராகு செவ்வாய் இணைந்தவர்கள். இக்கோயிலை வழிபட, நல்ல பலன் கிடைக்கும்.
9. காளி வழிபாடு: சிதம்பரம் தில்லைக்காளி, உறையூர் வெக்காளி மற்றும் மடப்புரம் பத்ரகாளி போன்ற காளி தேவியரை வழிபட ராகு தோஷம் நீங்கும்.
10. பஞ்சமி திதி: நாகங்களுக்கு மிகவும் புனிதமானது பஞ்சமி திதி. இந்த திதியில் நாகங்களை வணங்க ராகு தோஷம் நீங்கும்.
11. ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு எதிரில் காட்சி தரும் கருடன் உடல் முழுவதும் நாகாபரணங்களோடு காட்சி தருவார். இவரையும் சக்கரத்தாழ்வார் சன்னிதி செல்லும் வழியில் ஒரு கையில் அம்ருத கலசமும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்த கருடாழ்வாரைமும் வணங்க நாக தோஷம் நீங்கும்.
12. திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூரில் அருளும் வடிவுடையம்மன் உடனுறை படம்பக்க நாதரை வணங்க நாக தோஷம் தீரும்.
13. கும்பகோணம்: காவிரி சென்று காவிரியில் நீராடி வன துர்கையை வழிபட நாக தோஷம் நீங்கும்.
14. காஞ்சீபுரம்: இங்குள்ள சித்ரகுப்தன் ஆலயம் சென்று கொள்ளு, உளுந்து மற்றும் ப்ரௌன் நிற துணி தானம் செய்து பசுவுக்கு உண்ணக் கொடுக்க நாக தோஷம் நீங்கும்.
15. சிவகங்கை: இங்குள்ள காளையார்கோவில் சென்று கௌண்டின்ய மகரிஷி மற்றும் மகமாயி அம்மன் கானக்காளையீஸ்வரரை வழிபட நாக தோஷம் நீங்கும்.
16. ஸ்ரீவாஞ்சியம்: இங்குள்ள நாக தீர்த்தத்தில் நீராடி நாகநாதரையும் நாகராஜனையும் வழிபட நாக தோஷங்கள் விலகும்.
17. முடண்டகக்கன்னி அம்மன்: சென்னை, மைலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை வழிபட நாக தோஷம் நீங்கும்.
18. திருவாலங்காடு: கார்கோடகன் மற்றும் வண்டார்குழலம்மை உடனுறை ஊர்த்துவதாண்டவரை வழிபட நாக தோஷம் விலகும்.