

மகாபாரதத்தில் திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் சகோதரனாகப் பிறந்தவர் விதுரர். அஸ்தினாபுரத்தின் மந்திரியாக இருந்து உண்மை, நீதி, நெறிமுறை மற்றும் நிர்வாகத் திறன் பற்றி பல அறிவுரைகளைக் கூறியவர். அவரது ஆழமான அரசியல் அறிவு மற்றும் அச்சமற்ற நேர்மை அவருக்கு அளவில்லாத புகழைப் பெற்றுத் தந்தது. அவரது போதனைகள் பின்னாளில், ‘விதுர நீதி’ என்ற பெயரில் நீதி நூலாக எழுதப்பட்டது.
அவரது நீதி போதனைகள் அரசியல், தலைமைப் பண்பு, நிர்வாகம், நேர்மை, கடமை, விசுவாசம், சமூகம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அவர் வாழ்வியல் பற்றியும் பல கருத்துகளைக் கூறியுள்ளார். மேலும், தனிமை எவ்வளவு துன்பம் மிக்கது, அது என்னென்ன விளைவுகளை மனிதர்களுக்குள் ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும் கூறியுள்ளார். இந்த 4 தனிமையான விஷயங்களிலிருந்து விலகி இருங்கள் என்று விதுரர் எச்சரிக்கிறார். அந்த விஷயங்கள் என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
1. சுவை மிகுந்த உணவுகளை எப்போதும் தனியாக சாப்பிடக் கூடாது: சுவை மிகுந்த உணவை மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டு உண்ணும்போதுதான் அதன் சுவையை அறிய முடியும். தனியாக ருசியான உணவை சாப்பிடுவது மிகவும் சுயநலமான செயலாக உள்ளது. தனியாகவே சாப்பிடப் பழகி விட்டால் உணவின் சுவைக்கு முக்கியத்துவம் குறைந்து விடும். நாளடைவில் உண்ணுவது ஒரு சலிப்பான விஷயமாக கூட மாறிவிடும். சுவையான உணவை பகிரும்போது, அது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அந்த மகிழ்ச்சியை பார்ப்பவர்க்கு திருப்தி கிடைக்கும். இது அன்பு, ஒற்றுமை, மரியாதை, பிணைப்பு ஆகியவற்றின் அடித்தளமாக இருக்கிறது. சுவையான உணவை பகிர்வதன் மூலம் தனியாக உண்ணும் குற்ற உணர்ச்சி இன்றி நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.
2. தனியாக இருக்கும்போது முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடாது: ஏதேனும் ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்றால், முதலில் அந்த முடிவின் சாதகங்கள், பாதகங்கள் பற்றி தனது நலம் விரும்பும் சுற்றத்தாருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர்களின் பல்வேறு அனுபவங்கள் மற்றும் வழிகாட்டுதல் மூலம் ஒரு முடிவை நாம் தெளிவாக எடுக்க முடியும். நாம் நினைக்கும் முடிவைப் பற்றி சாதகமான எண்ணங்கள் மட்டுமே நம் மனதில் இருக்கும். மற்றவர்களின் பார்வையில் அதன் பாதகமான அம்சங்கள் கூட தெரியும். ஒரு செயலில் இடம், பொருள், ஏவல் எல்லாம் பற்றி சிந்தித்து செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். அதனால் தனியாக முடிவெடுக்க வேண்டாம் என்று விதுரர் கூறியுள்ளார்.
3. தனியாக வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்: நமக்கு நன்கு பழகிய இடத்தைத் தாண்டி வெளியில் செல்லும்போது துணையாக ஒருவரை கூட்டிச் செல்வது பல வகைகளில் பலனளிக்கும். அந்தக் காலத்தில் தனியாக ஊரைத் தாண்டி செல்லும்போது விலங்குகள் மற்றும் திருடர்களின் தொந்தரவு இருக்கலாம் என்று விதுரர் கூறியுள்ளார். அதை இந்தக் காலத்திற்குப் பொருத்தி பார்க்கையில், நீண்ட தூர பயணங்களில் துணையாக மற்றவர்களை அழைத்துச் செல்வது, பயணம் மகிழ்ச்சியாக அமைய உதவும். வழியில் ஏதேனும் உடல்நலக் குறைவு அல்லது வேறு ஆபத்து இருந்தாலும் உடன் இருப்பவர் ஆதரவு கிடைக்கும். வயதான அல்லது உடல் நலமில்லாத காலத்தில் தனியாக வெளியில் செல்வது ஆபத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
4. அனைவரும் தூங்கும்போது தனியாக விழித்திருக்காதீர்கள்: மற்றவர்கள் அனைவரும் தூங்கும்போது விழித்திருக்கக் கூடாது என்று விதுரர் எச்சரிக்கிறார். தனியாக ஒருவர் இரவில் தூங்காமல் இருந்தால், அப்போது அதிக பாதிப்புகள் இல்லா விட்டாலும் கூட நாளடைவில் ஒவ்வொரு பாதிப்பாக ஏற்படக் கூடும். இரவில் தனியாக கண் விழிப்பதால் சிந்தனைகள் மற்றும் செயல்களில் மாற்றம் வரக் கூடும். பயம் மற்றும் பதற்றம் ஆகியவை வரக்கூடும். மேலும், அப்போது தூங்கிக் கொண்டிருக்கும் நபர்கள் மீது, பொறாமை, வன்மை போன்ற எண்ணங்கள் வரக் கூடும். இரவு நேர தனிமை பெரும்பாலும் மனதை அமைதியற்றதாகவும், அதிக சுறுசுறுப்பாகவும் ஆக்குகிறது. இது தேவையற்ற மனம் சார்ந்த மற்றும் உடல் சார்ந்த நோய்களை கொண்டு வரக் கூடும்.