
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் இரண்டு முக்கிய பண்டிகைகள் என்றால் அது ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளாகும். இந்த இரண்டு பண்டிகைகளையும் இஸ்லாமியர்கள் சந்தோஷமாக கொண்டாடினாலும், இந்த நாளில் செய்ய வேண்டிய சில முக்கிய சடங்குகளை தங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கடமையாக கருதுகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டு பக்ரீத் பண்டிகை இன்று (ஜூன் 6-ம் தேதி) உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை மார்ச் 31-ம்தேதி இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. ரம்ஜான் மற்றும் பக்ரீத் இரண்டு பண்டிகைகளும் இஸ்லாமியர்களுக்கு முக்கியமானது என்றாலும், இந்த இரண்டு பண்டிகைகளின் போது கடைபிடிக்கப்படும் சடங்குகளில் வேறுபாடுகள் உள்ளது.
சரி இப்போது இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பக்ரீத் பண்டிகையை அரபி மொழியில் ஈத் அல்-அழ்ஹா என்றும், ரம்ஜான் பண்டிகையை ஈத் அல்-பித்ர் என்றும் அழைக்கின்றனர் இஸ்லாமியர்கள். ஈத் அல்-பித்ர் என்றால் விரதத்தை நிறைவு செய்வது, ஈத் அல் அதா என்றால் தான தர்மங்கள் செய்வதாகும். ஆனால் இவை இரண்டிலும் விலங்குகளை பலியிடுவது பொதுவானதாகும்.
ரம்ஜான் என்பது இஸ்லாமிய நோன்பு மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஒரு பண்டிகையாகும், ஆனால் பக்ரீத் என்பது தியாகத்தின் திருவிழா, இது ஹஜ் யாத்திரையின் முடிவைக் குறிக்கும் ஒரு பண்டிகையாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். அதுமட்டுமின்றி இது இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூறுகிறது.
ரம்ஜான் பண்டிகை என்பது முஸ்லீம்கள் ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் தொடங்கி மாலையில் சூரிய அஸ்தமனம் வரை எச்சில் கூட விழுங்காமல் கடுமையான விரதத்தை கடைபிடித்து சூரியன் மறைந்ததும் பழச்சாறு அருந்தி விரதத்தை நிறைவு செய்வதை குறிக்கிறது. ரமலான் மாதம் முழுவதும் திருமணம், விசேஷம் போன்ற அனைத்து சந்தோஷங்களையும் துறந்து, தான தர்மங்கள் வழங்குவது போன்ற நல்லொழுக்கங்களை வளர்க்கும் பண்டிகையாக ஈத் அல் ஃபிர் என்று அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதே சமயம் ஈத் அல் அதா என்று சொல்லப்படும் பக்ரீத் பண்டிகை தியாக திருவிழா அல்லது தியாக பண்டிகை என்பதாகும். இந்த பண்டிகை இஸ்லாமியர்களின் இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹீம், இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன்னுடைய மகனையே பலியிட துணிந்ததன் தியாகத்தை போற்றும் திருநாளாகும். இந்த புனிதமான பக்ரீத் பண்டிகை சமயத்தில் தான் முஸ்லீம்கள் அவர்களது வாழ்வில் புனிதமான கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையை மேற்கொள்கின்றனர். இந்த புனிதமான நாளில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் சிறப்பு தொழுகையை நடத்துவதுடன், குர்பானி எனப்படும் விலங்குகளை பலியிடும் சடங்கை மேற்கொண்டு குர்பானி செய்த இறைச்சியை தனது உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுக்கின்றனர்.
அதுமட்டுமின்றி பக்ரீத் என்பது துல் ஹிஜ்ஜாவின் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் என்பது நோன்பு மாதத்தின் முடிவில் கொண்டாடப்படுகிறது.
பக்ரீத், இஸ்லாமியர்களின் தியாகம் மற்றும் கடவுள் மீதான அன்பை வெளிப்படுத்தும் ஒரு பண்டிகையாகும். ரம்ஜான், நோன்பு மற்றும் இறைவனுடன் நெருங்கிப் பழகும் ஒரு மாதத்தை குறிக்கிறது.
இப்படி இந்த இரண்டு பண்டிகைகளிலும் வேறுபாடுகள் இருந்தாலும் இவை இரண்டும் இஸ்லாமியர்களால் குடும்பத்தினருடனும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சந்தோஷமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.