
பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், சுகப் பிரசவம் நடைபெறவும் செல்லும் கோயில்களில் ஒன்று வேலூர் மாவட்டம், தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயில். அரக்கோணத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் அருளும் இத்தல தட்சிணாமூர்த்தி அம்பாளுக்கு பதிலாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து வைப்பவராக அருள்புரிகிறார். பெண்களின் துன்பங்களை தலை சாய்த்து கேட்பது போல், தலையை ஒரு புறமாக சாய்த்தபடி தட்சிணாமூர்த்தி இக்கோயிலில் காட்சி தருகிறார். குழந்தைகளின் கல்வி சிறக்க இவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
காஞ்சிபுரம், திருப்புலிவனம் வியாக்ரபாதர் ஈஸ்வரர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி ஒரு காலை சிங்க வாகனத்திலும்,மறு காலை முயலகன் மீதும் வைத்துள்ளார். இக்கோலம் இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தினை சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலய தட்சிணாமூர்த்தி வித்தியாசமாக இரு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இவரை வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூர் - கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் நல்லூரில் கல்யாண சுந்தரர் கோயில் அமைந்துள்ளது. இங்கே இரட்டை தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். இங்கு குந்தி தேவிக்கு தனி சன்னிதி உள்ளது. அதேபோல் திருப்பத்தூர் வைரவன்பட்டி வைரவ சுவாமி கோயிலிலும் இரண்டு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்று வதாரண்யேசுவரர் ஆலயம். இக்கோயில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ளது. இக்கோயில் வள்ளலார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் தட்சிணாமூர்த்தியை நந்தி மேல் அமர்ந்த கோலத்தில் தரிசிக்கலாம். அற்புதமான இவருக்கு பிரதி வியாழன் தோறும் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ளது திருவாடானை. இங்குள்ள ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. வேறு எங்குமில்லாத சிறப்பாக இங்குள்ள ராஜகோபுரத்தில் கோபுரத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.
வைணவக் கோயில்களில் தட்சிணாமூர்த்தியை காண்பது அரிதானது. ஆனால், திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் வேதநாரயணர் கோயிலில் உள்ள விமானத்தின் உச்சியில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இங்கு இவருக்கு தனிச் சன்னிதி இல்லாமல், ஒரு கோபுரத்தில் அமைக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் காண முடியாதது.
ஒரு பக்கம் ஆண் உருவமும், இன்னொரு பக்கம் பெண் உருவமும் கொண்டு அர்த்த நாரீஸ்வரராகவும், முயலகனை கையிலும், பாதத்திலுமாக பிடித்த நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தியை காண வேண்டுமானால் திருவேங்கடவாசல் கோயிலில் மட்டுமே காணலாம். இவரை அர்த்தநாரீஸ்வரர் தட்சிணாமூர்த்தி என்கிறார்கள். சிவனருள் மற்றும் அம்பிகையின் அருளும் கிட்ட இவருக்கு வியாழக்கிழமையில் அர்ச்சனை செய்கிறார்கள்.
வழக்கமாக நான்கு சீடர்களுடன்தான் தட்சிணாமூர்த்தி காட்சி தருவார். ஆனால், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திடியன் கைலாசநாதர் கோயிலில் தட்சிணாமூர்த்தி 14 சீடர்களுடன் காட்சி தருகிறார். இவர்கள் 14 பேரும் அவரிடம் உபதேசம் பெற்ற கோலத்தில் உள்ளனர். இத்தகைய அமைப்பில் தட்சிணாமூர்த்தியின் அமைப்பை காண்பது மிகவும் அரிது.
பொதுவாக, தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள தனி கோயிலில், வடக்கு பார்த்த கோலத்தில் காட்சி தருகிறார். தட்சிணாமூர்ததிக்கு அருகில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் நான்கு முனிவர் மட்டுமே இருப்பர். ஆனால், இங்கு 18 முனிவர்கள் உள்ளனர். குரு தோஷ பரிகாரமாக இவரது சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
எல்லா கோயில்களிலும் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி காட்சி தருவார். ஆனால், காரைக்குடி அருகே உள்ள பட்டமங்கலம் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கி அருள்கிறார். திருமாலும், பிரம்மாவும் சேர்ந்து அமர்ந்து தட்சிணாமூர்த்தியை வணங்குவதை இங்கு மட்டுமே காண முடியும்.