புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் திருச்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது விராலிமலை முருகன் கோயில். இக்கோயில் 207 படிகள் கொண்ட சிறிய மலையாகும். சண்முகநாதன் என்கின்ற ஆறுமுகசாமி வள்ளி தேவசேனாவை திருமணம் செய்து கொண்ட தலம் இது. இக்கோயில் மூலவர் முருகப்பெருமான் 10 அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும். தீர்த்தம் நாக தீர்த்தம். தல விருட்சம் விராலி செடியாகும்.
சுமார் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயம் இது. ஆறு முகங்களுடன் அசுர மயிலில் அமர்ந்தபடி அற்புதமாகக் காட்சி தருகிறார் மயில் வாகனன். மலை உச்சிக்கு செல்லும் வழியில் இடும்பன் சன்னிதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஒரு சிறிய குகை சன்னிதியும், படிக்கட்டுகளின் முடிவில் சந்தனக்கோட்டம் என்ற மண்டபமும் உள்ளது.
தல சிறப்புகள்: வசிஷ்டரும் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவம் இருந்தனர். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாக இத்தலத்தில் நாரதருக்கு உத்ஸவர் விக்ரகம் உள்ளது. அதோடு, முருகனின் சேனாதிபதியான வீரபாகுவிற்கு மிகப்பெரிய சிலை இத்திருத்தலத்தில் மட்டுமே உள்ளது. நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், நீடித்த ஆயுளுக்கும் இங்குள்ள முருகனை வேண்டுவது சிறப்பு.
வித்தியாசமான சடங்குகள் மற்றும் பழக்கங்கள்:
தவிட்டுக்கு பிள்ளை: பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள் நேர்த்திக்கடனாக பிள்ளை பிறந்ததும் அதை முருகப்பெருமானிடம் அவரது பிள்ளையாகவே கொடுத்துவிட்டு பிறகு பிள்ளையின் மாமா அல்லது சித்தப்பா முருகப்பெருமானுக்கு தவிட்டை கொடுத்து பிள்ளையை பெற்றுச்செல்லும் சடங்கு இங்கு மிகவும் பிரபலமானது.
சுருட்டுப் படையல்: எந்த ஒரு முருகன் கோயிலிலும் இல்லாத ஒரு விசித்திரமான பழக்கமான முருகனுக்கு சுருட்டை நிவேதனமாக படைக்கும் வழக்கம் இங்குள்ளது. இதற்குப் பின்னால் ஒரு சுவையான கதையும் கூறப்படுகிறது. சூறாவளி காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று கோயில் செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகில் மற்றொருவர் குளிரில் நடுங்கிக் கொண்டு நிற்பதைக் கண்டு குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றை வாங்கிக் கொடுத்தாராம். பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து கோயிலுக்கு அருகில் செல்லும் வரை கூட வந்தவர் திடீரென காணாமல் போக, வியப்புற்ற கருப்பமுத்து கோயிலை அடைந்ததும் அங்கு முருகனுக்கு முன் சுருட்டு புகைந்து கொண்டிருப்பதைக் கண்டு தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்ததாகவும் அன்று முதல் இக்கோயிலில் முருகனுக்கு சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகும் கூறப்படுகிறது.
அருணகிரியாரை ஆட்கொண்டு அருள்புரிதல்: 15ம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் அவதரித்தார். அருணகிரி தனது சிறு வயதில் ஏற்பட்ட விரக்தியினாலும் குழப்பத்தினாலும் திருவண்ணாமலை கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தனது உயிரை விட முற்பட்டார். கோயிலில் உள்ள வல்லாள கோபுரத்தின் உச்சியில் ஏறி, ‘ஒருவன் இருந்தால் காக்க’ என்று உரக்க சொல்லிக் கொண்டே குதித்தார். அப்போது முருகப்பெருமான் அடியவர் கோலத்தில் வந்து அருணகிரியை தனது இரு கரங்களினால் தாங்கி தடுத்தாட்கொண்டார்.
முருகப்பெருமான் அவருக்கு, ‘சும்மா இரு’ என்று உபதேசம் செய்தார். அதன்படியே 12 ஆண்டுகள் எவருடனும் பேசாமல் தவம் செய்தார். மேலும், முருகப்பெருமான் அவரது தொழு நோயை குணப்படுத்தினார். 12 வருடங்கள் கழித்து அருணகிரியார் முன்பு முருகப்பெருமான் காட்சி தந்து தமது வேலினால் அவரது நாக்கில் எழுதி திருப்புகழை ஓதும்படி பணித்தார். அதையடுத்து அருணகிரியார், ‘முத்தைத்தரு பத்தி திருநகை’ என்ற திருப்புகழைப் பாடினார். பின்னர் முருகப் பெருமான் அருணகிரிநாதரை வயலூருக்கு வருமாறு பணித்தார். வயலூரில் பொய்யா கணபதி முன் ‘கைத்தல நிறைகனி’ என்ற திருப்புகழைப் பாடி துதித்து, முருகனையும் பல பாடல்களால் துதித்துக்கொண்டு அங்கு தங்கியிருந்தார். ஒருநாள் அருணகிரிநாதர் கனவில் முருகன் தோன்றி விராலிமலைக்கு வரும்படி பணித்தார்.
அந்த இரவில் அவர் விராலிமலைக்கு நடந்து சென்றார். குரா மரங்கள் அடர்ந்த விராலிமலை காட்டுக்குள் வழி தவறி சென்று விட்டார். அப்போது அவர் மனம் உருகி முருகனை நினைக்க, எங்கிருந்தோ ஒரு வேடன் வேங்கைப் புலி ஒன்றை வேட்டையாட துரத்திக் கொண்டு ஓடினான். அருணகிரிநாதர் அந்த வேடனை துரத்திச் சென்று அந்த வேடனிடம் விராலிமலைக்கு வழி கேட்டார். அந்த வேடன் விராலி மலையைக் காட்டிவிட்டு மறைந்து போனான். வந்தது முருகனே என்று உணர்ந்த அருணகிரிநாதர் பெருமானின் கருணையை நினைத்து மனம் உருகினார்.
அருணகிரிநாதர் விராலிமலையிலேயே வெகு காலம் தங்கி இத்தலத்து இறைவன் மேல் 16 திருப்புகழ்கள் பாடியுள்ளார். அவ்வாறு அவர் தங்கி இருந்தபொழுது முருகன் தோன்றி சந்தனக்கோட்ட மண்டபத்தில் அவருக்கு ஞானோபதேசம் அளித்து அட்டமா சித்திகளையும் அளித்து அருள்புரிந்தார்.