
துளசி யாருடைய வீட்டில் வளர்க்கப்படுகிறதோ, அந்த வீட்டில் துஷ்ட சக்திகள் ஒருபோதும் வராது.
துளசியின் மணமானது ஒருவரைப் பரிசுத்தப்படுத்தும் மகிமை குணம் கொண்டது.
துளசி குச்சியினால் தீபமேற்றினால் அந்த தீபம் மிகச் சிறந்த புண்ணியப் பலன்களைத் தரும்.
ஒருவர் இறந்து விட்டால் அவரைத் தகனம் செய்யும்போது, சந்தனக் கட்டைகளை வைத்து எரித்தாலும், ஒரேயொரு துளசி கட்டையை வைத்து தகனம் செய்ய, அவர் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்கிறது புராணம்.
ஒரே ஒரு துளசி தளத்தை நீரில் போட்டு நீராடினால், கங்கையில் நீராடிய புண்ணியப் பலன் கிடைக்கும். அதோடு, பத்து பசுக்களை தானம் செய்த பலனும் கிட்டும்.
துளசி தளத்தை கையால் தொட்டாலே சகல பாபங்களும் நீங்கி புண்ணியம் சேர்ந்து விடும்.
ஹோமங்களின்போது எத்தனையோ சமித்துக்களைப் பயன்படுத்தினாலும் ஒரேயொரு துளசிக் கட்டையை பயன்படுத்த, அந்த ஹோமம் அற்புதமான பலன்களைத் தந்து வாழ்விக்கும்.
பற்பல புஷ்பங்கள் இறை பூஜையின் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு புஷ்ப பூஜைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. ஆனால், துளசியைப் பயன்படுத்தும்போது, அத்தனை புஷ்பங்களையும் பயன்படுத்திய புண்ணியம் உண்டாகும்.
இறைவனுக்கு நிவேதனம் தயாரிக்கையில், எரியும் அந்த அக்னியில் ஒரு துளசிக் கட்டையை போட, அந்த அக்னியில் தயாரிக்கப்பட்ட நிவேதனம் ஈடு இணையில்லாத மகிமை வாய்ந்ததாக மாறி விடுவதாக ஐதீகம்.
இராமாயணத்தில் அனுமன் கடலைக் கடக்கும் முன்பு, துளசி தேவியை வணங்கி விட்டுத்தான் சென்றதாகக் கூறப்படுகிறது.
துளசி செடிக்கு பக்கத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமான நெல்லிச் செடியை வைத்து திருக்கல்யாணம் நடத்துவது மரபு. ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு அடுத்த நாளை, ‘உத்தான துவாதசி’ என்பார்கள். இதனை, ‘மதன துவாதசி’ என்றும் சொல்வர். அன்று துளசிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் விவாகம் செய்ய நல்ல புண்ணியப் பலன்கள் கிடைக்கும்.
துளசி கல்யாணம் செய்வதால் அந்த வீட்டு மகன் அல்லது மகளின் திருமணத் தடைகள் நீங்கும். சுப காரியங்கள் விருத்தியாகும். பிள்ளைப் பேறு கிடைக்கும். சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். மகாலட்சுமி என்றென்றும் அந்த வீட்டில் வாசம் செய்வதாக ஐதீகம்.
பகவான் மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிரியமான துளசியின் மகிமைகள் எண்ணிலடங்கா புண்ணியப் பலன்களைத் தர வல்லது.