

உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை தை அமாவாசையாகும். நமக்கு ஆசி வழங்குவதற்காக புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று பூமிக்கு பித்ருலோகத்தில் இருந்து வரும் நம்முடைய முன்னோர்கள் தை அமாவாசை நாளில் மீண்டும் பித்ருலோகத்திற்கு செல்வதாக நம்பப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் இருக்கும் ஸ்ரீ ராமநாத சுவாமி அம்பாளுடன் அக்னி தீர்த்தத்திற்கு எழுந்தருளி தை அமாவாசை அன்று புனித நீராடுவார். இதிலிருந்தே தை அமாவாசை எவ்வளவு புனிதமானது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும், கர்மாக்கள் நீங்க தை அமாவாசை நாளில் புனித நீராட வேண்டும் என்பது ஐதீகம்.
அபிராமி அந்தாதி: முன்னோர் வழிபாட்டிற்கு மிக முக்கியமான நாளான அமாவாசை அன்று நம்முடைய வாழ்க்கை நிலையை மாற்றும் முக்கிய வழிபாட்டையும் செய்ய வேண்டும். அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியை திருக்கடையூரில் தை அமாவாசை நாளில்தான் அருளினார்.
அபிராமி அம்பாள் தனது மீது தீராத பக்தி கொண்ட பக்தனுக்காக தான் அணிந்திருந்த காதணியை வானில் வீசி எறிந்து முழு நிலவு தோன்றச் செய்து அனைவருக்கும் தன்னுடைய திருக்காட்சியை தந்தருளிய அதிசய நிகழ்வு நடந்த திருநாள் தை அமாவாசை ஆகும்.
தை அமாவாசை அன்று திருக்கடையூரில் இந்த உத்ஸவம் வெகு விமர்சையாக இன்றளவும் நடைபெற்று வருகிறது. அமாவாசை நாளில் பித்ருகளின் வழிபாட்டை காலையில் மேற்கொள்ள வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் வாழ்க்கையில் தன்னுடைய நிலை மாறாதா என தீராத கஷ்டத்தில் இருப்பவர்கள் நெய் விளக்கேற்றி அபிராமி அம்மனை மனதார வேண்டிக் கொண்டு அபிராமி அந்தாதியின் நூறு பாடல்களையும் பாட வேண்டும்.
கஷ்டங்கள் தீர செய்ய வேண்டியது: அவ்வாறு 100 பாடல்களையும் பாட முடியாதவர்கள், ‘ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி’ என துவங்கும் 7வது பாடல், ‘வந்திப்பவர் உன்னை வானவர், தானவர்’ என துவங்கும் 14வது பாடல், ‘சொல்லும் பொருளும் என நடமாடும்’ என துவங்கும் 28வது பாடல், ‘அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய்’ என துவங்கும் 30வது பாடல், ‘உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில்’ என துவங்கும் 31வது பாடல், ‘தனந்தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா மனந்தரும்’ என துவங்கும் 69வது பாடல், ‘தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்’ என துவங்கும் 75வது பாடல் ஆகிய பாடல்களைப் பாடலாம்.
மேற்கூறிய அனைத்து பாடல்களையும் பாட வேண்டும். அவ்வாறு பாட இயலாதவர்கள் அதில் ஏதாவது ஒரு பாடலை ஒன்பது முறை பாடினால் பாடுபவர்களின் துன்பங்கள் மறைந்து அவர்களுடைய தலையெழுத்து மாறும். அத்தகைய வல்லமை அபிராமி அந்தாதியின் பாடல்களுக்கு உண்டு.
படிக்க வேண்டிய இடம்: தை அமாவாசை நாளில் மாலை 6 மணிக்கு நெய் விளக்கேற்றி மொட்டை மாடி அல்லது திறந்தவெளியில் அமர்ந்து வானத்தை பார்த்தபடி அபிராமி தேவியை வழிபட வேண்டும். பின்னர் அபிராமி அந்தாதியின் 100 பாடல்கள் அல்லது மேற்கூறிய பாடல்களை மனதார பாராயணம் செய்துவிட்டு வானத்தைப் பார்த்தால் அங்கு அபிராமியின் வடிவம் தெரிவதை உணரலாம். அபிராமி அந்தாதி பாடலைப் பாடுபவர்களுக்கு தங்களுடைய தலையெழுத்து மாறி, கஷ்டங்கள் தீர்ந்து நன்மைகள் நடக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.