பெருமாள் சேவையில் சீர்திருத்தம் - ஸ்ரீராமானுஜரின் முயற்சி வெற்றியடையாத தலம் எது?

Temple
Temple
Published on

புரட்சித் துறவியான ஸ்ரீராமானுஜர், வைணவத் திருத்தலங்களில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தார். அவர் அவ்வாறு உருவாக்கிய நடைமுறைகளை 'ஆலய ஒழுகு முறை' என்று வகைப்படுத்தினார்கள்.

ஸ்ரீரங்கம் திருக்கோவிலில், பெருமாளின் தினசரி வழிபாட்டுக்கும், மற்றும் உற்சவங்களுக்கும், இன்றளவும், அவர் உருவாக்கித் தந்த நடைமுறைகளே சரியான வழிகாட்டியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று சொல்லப்படுகிறது.

சைவ, வைணவ அடியார்களிடையே, திருமலையில் (திருப்பதி) கோவில் கொண்டிருக்கும் இறைவன் முருகனா, பெருமாளா என்ற சந்தேகம் எழுந்தபோது, அதைத் தீர்த்து வைத்தவர் ராமானுஜர்தான்.

கோவில் மூலஸ்தானத்தை முந்தின நாள் மாலையில் மூடிவிட்டு மறுநாள் காலையில் திறந்து பார்ப்பது என்றும், அப்போது இறைவன் எவ்வாறு காட்சியளிக்கிறாரோ அவ்வாறே அவரை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் யோசனை சொன்னார்.

அதேபோல, மறுநாள் கர்ப்பகிரஹ கதவு திறக்கப்பட்டபோது மூலவர், சங்கு – சக்கர பாணியாக, பெருமாளாகக் காட்சியளித்தார் என்கிறார்கள்.

இவ்வாறு பிற வைணவக் கோயில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை அனுசரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ராமானுஜர் பல தலங்களுக்குச் சென்றார். ஆனால் அவருடைய முயற்சியைத் திருவினையாக்காத ஒரு தலம் ஒன்று உண்டு. அது, திருவனந்தபுரம் அனந்த பத்மனாபஸ்வாமி கோயில்.

இதையும் படியுங்கள்:
தனது பக்தர்களை நூல் கொண்டு கட்டி இழுக்கும் ஷீரடி சாயி பாபா!
Temple

தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி தலத்தில் தங்கியிருந்த அவர், தன் சீடனான வடுக நம்பியுடன் திருவனந்தபுரம் சென்று தம்முடைய வைணவ கோட்பாடுகளை அங்கே நிறுவ முயன்றார். ஆனால், அனந்த பத்மனாப சுவாமி கோயிலில் இறைப்பணி ஆற்றிக் கொண்டிருந்த நம்பூதிரிகள், ராமானுஜரின் வருகை நோக்கம் அறிந்து கலங்கினார்கள். காலங்காலமாக நடைமுறையில் பழகி வரும் சம்பிரதாயங்களை இவர் மாற்றி விடுவாரோ என்று பயந்தார்கள். அதை பத்மனாப சுவாமியிடமும் முறையிட்டார்கள்.

அவருக்கும் நம்பூதிரிகளின் பணிவிடைகளில் எந்தக் குறையும் காண இயலவில்லை. ஆகவே, இங்கே சீர்திருத்தத்திற்கோ, மாற்றத்திற்கோ அவசியமில்லையே என்று பெருமாளும் உணர்ந்தார் போலிருக்கிறது. இவர்களுடைய பாரம்பரிய பணிக்கு எந்த இடையூறும் ஏற்பட்டுவிட வேண்டாமே என்ற எண்ணத்தில், கருடாழ்வாரிடம், "ராமானுஜர் உறங்கும் நேரத்தில் அவரை திருக்குறுங்குடிக்கே கொண்டுபோய் விட்டுவிடு" என்று உத்தரவிட்டார். கருடாழ்வாரும் அப்படியே செய்தார். (இதனாலேயே திருவனந்தபுரம் அனந்தபத்மனாப சுவாமி கோயிலில் கருடாழ்வார் இடம் பெறவில்லை.)

இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 2 - தேவர்களை விடுத்து, பக்தர்களைத் தேடி வரும் பரம்பொருள்!
Temple

திருவனந்தபுரத்தில் முந்தின நாள் உறங்கச் சென்ற தான், விடிந்ததும், திருக்குறுங்குடியில் இருப்பதைக் கண்டு திகைத்த ராமானுஜர், பெருமாளின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொண்டார். அந்த தெய்வச் செயலுக்கு மதிப்பளிக்கும் வகையில் மீண்டும் திருவனந்தபுரம் செல்ல முயற்சி மேற்கொள்ளவில்லை. வழக்கம்போல தினசரி அனுஷ்டானங்களில் ஈடுபட்டார். தனக்கு சேவை புரியும் தன் சீடனான வடுக நம்பியை அழைத்தார்.

ஆனால் அந்த வடுக நம்பியோ, குருநாதருடன் வந்த தான், திருவனந்தபுரத்தில் தனித்து விடப்பட்டதையும், அவரை திடீரெனக் காணாத குழப்பத்திலும் தவித்துக் கொண்டிருந்தார்! அதேசமயம், இங்கே, ராமானுஜர் அழைத்தபோது, திருக்குறுங்குடி பெருமாளே, வடுக நம்பியாக உருக்கொண்டு தன் திருக்கரத்தால் ராமானுஜருக்கு 'வழக்கம்போல' திருமண் காப்பிட்டு ஆசானை அலங்கரித்து, திருமண் மற்றும் பூஜை பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தார்.

திருக்குறுங்குடி கோயிலுக்குள் ராமானுஜர் நுழைந்தபோது, அவருக்கு முந்திச் சென்ற 'வடுக நம்பி' நேராக மூலவர் சந்நிதானத்துக்குள் சென்று மறைந்தார்.

இந்த அற்புதத்தைக் கண்டு நெகிழ்ந்தார் ராமானுஜர். அனந்த பத்மனாபஸ்வாமியின் உள்ளம் அறிந்து அமைதி கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com