சபரிமலை 18 படிகளின் தத்துவம், புராண வரலாறு மற்றும் படி பூஜை சிறப்புகள்!

ஐம்புலன்களை வென்று இறைவனை அடையும் 18 படிகளின் ஆழமான அர்த்தங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்.
18 படிகள் - Sabarimala 18 steps meaning
18 படிகள் - Sabarimala 18 steps meaning
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

சபரிமலை ஐயப்பன் கோவில் என்றாலே அனைவரின் நினைவிலும் வருவது 18 படிகள் மற்றும் அதன் மீது தர்ம சாஸ்தாவாக வீற்றிருக்கும் மணிகண்டன் சன்னிதானம் தான். கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து, ஒரு மண்டலம் கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பனை தரிசிப்பது பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.

சபரிமலையின் 18 படிகள் ஜீவாத்மா பரமாத்மாவை அடையக் கடக்க வேண்டிய ஆன்மீகப் படிக்கட்டு களாகவும், மனிதனின் புலன்கள் மற்றும் குணங்களைக் கடந்து இறைவனை அடையும் தத்துவமாகவும் போற்றப்படுகின்றன. ஜீவாத்மா பலத்தடைகளைக் கடந்து பரமாத்மாவான ஐயப்பனுடன் இரண்டறக் கலக்கும் ஆன்மீகப் பயணத்தை இது குறிக்கின்றன.

1) தத்துவார்த்தப் பொருள்:

ஒவ்வொரு படியும் மனிதன் தன் வாழ்வில் வெல்ல வேண்டிய குணங்களையும், கடக்கவேண்டிய நிலைகளையும் உணர்த்துகின்றன.

1-5 பஞ்சேந்திரியங்கள் எனப்படும் ஐம்புலன்கள்:

கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்களின் ஆதிக்கத்தைக் குறிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஆன்மீக அனுபவ கட்டுரை: அழைத்ததும் அவனே… அருளியதும் அவனே!
18 படிகள் - Sabarimala 18 steps meaning

அடுத்த 8 படிகள் (அஷ்ட ராகங்கள்/ சித்திகள்):

அஷ்டராகங்கள் எனப்படும் எட்டு தீய குணங்கள் காமம் (ஆசை), குரோதம் (கோபம்), லோபம் (பேராசை), மோகம் (பற்று), மதம் (ஆணவம்), மாச்சரியம் (போட்டி/பகை), அசூயை (பொறாமை), தம்பம் (தற்பெருமை) போன்ற உணர்வுகளையும், அஷ்டமா சித்திகளையும் குறிக்கின்றன.

அடுத்த 3 படிகள் (முக்குணங்கள்):

சத்வ (அமைதி/தூய்மை), ராஜோ (வேகம்/செயல்பாடு), தமோ (சோம்பல்), ஆகிய மூன்று குணங்களைக் குறிக்கின்றன.

கடைசி 2 படிகள்:

17ஆம் படி வித்யையையும் (ஞானம்), 18ஆம் படி அவித்யையையும் (அறியாமை) குறிக்கின்றன. அதாவது உலகியல் மற்றும் ஆன்மீக அறிவைப் பெறும் ஞானத்தையும், அறிவையும் தாண்டி, அறியாமையையும் துறந்து இறைவனிடம் சரணடைவதைக் கடைசி இரண்டு படிகள் குறிக்கின்றன.

இந்த 18 படிகளுக்கும் 'தந்திர' முறையில் மாதா மாதம் பூஜை செய்து அந்தப் படிகளின் மகிமையையும் புனித தன்மையையும் போற்றுகின்றனர்.

2) புராண மற்றும் ஐதீகச் சிறப்புகள்:

சபரிமலையைச் சூழ்ந்துள்ள பொன்னம்பலமேடு, கரிமலை, நீலிமலை உள்ளிட்ட 18 புண்ணிய மலைகளின் வடிவமாக இந்த 18 படிகள் போற்றப்படுகின்றன.

ஐயப்பன் மகிஷியை வதம் செய்வதற்காக பயன்படுத்திய 18 ஆயுதங்களே படிகளாக மாறியதாகவும், ஒவ்வொரு படியிலும் வன தேவதைகள் குடி கொண்டிருப்பதாகவும் ஐதீகம் உள்ளது.

இந்தப் படிகளில் சூரியன், சிவன், சந்திரன், பராசக்தி உள்ளிட்ட 18 தெய்வங்களும், 18 வன தேவதைகளும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. படிகளின் இருபுறமும் சத்ய தர்மங்களின் வடிவமாக கடுத்தசாமி, கருப்பசாமி மற்றும் கருப்பாயி அம்மாள் ஆகியோர் காவல் தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர்.

முன்பு ஆரம்பத்தில் கருங்கல்லால் அமைக்கப்பட்டிருந்த இப்படிகள் தேங்காய் உடைப்பதால் தேய்மானம் அடைந்ததைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகிய பஞ்சலோகத்தால் படிகள் வேயப்பட்டன. 10 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளி மற்றும் பித்தளை, ஈயம், செம்பு போன்ற 4,000 கிலோ உலோகங்களைக் கொண்டு இந்தப் படிகளுக்கு கவசம் அமைக்கப்பட்டுள்ளது.

18 படிகள் - Sabarimala 18 steps meaning
18 படிகள் - Sabarimala 18 steps meaning

3) படி பூஜை:

18 படிகளுக்கும் மாத பூஜையின்போது நடை திறந்திருக்கும் நான்கு நாட்களிலும் இரவு 8 மணிக்குள் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் சித்திரை விஷு திருவிழா, ஓணம் பண்டிகை, பிரதிஷ்டை நாள் போன்ற தினங்களிலும் படி பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மண்டல மற்றும் மகரஜோதியின் சமயங்களில் 60 நாட்களும் படி பூஜைகள் நடத்தப்படுவதில்லை. 18 படிகளையும் கழுவி சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து, 18 படிகளுக்கு முன்னால் தீர்த்தங்கள் நிறைந்த கலசங்களையும் பூக்களையும் வைத்து 18 தேவதைகளையும் ஆவாகனம் செய்து பூஜை நடைபெறும். படி பூஜை முடிந்தவுடன் 18 படிகளிலும் மலர்கள் வைத்து, குத்து விளக்கேற்றி பூஜை முடிந்ததும் கற்பூரம் காட்டி மகா தீபாராதனை நடைபெறும்.

4) படிகளில் ஏற அனுமதி:

41 நாட்கள் கடுமையான விரதம் இருந்து தலையில் இருமுடி கட்டு சுமந்து வரும் பக்தர்கள் மட்டுமே இந்த 18 படிகளில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். படியேறும் முன்பு பக்தர்கள் தங்கள் கர்ம வினைகளையும் ஆணவத்தையும் உடைக்கும் விதமாகப் படிகளுக்குக் கீழே உள்ள தேங்காய் உடைக்கும் இடத்தில் தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர்.

முதல் படியில் வலது காலை வைத்து ஏறத் தொடங்கும் பொழுது ஒவ்வொரு படியையும் தொட்டு வணங்கி சரண கோஷத்துடன் ஏறுவது மரபு. தரிசனம் முடிந்து கீழே இறங்கும் பொழுது ஐயப்பனுக்கு முதுகைக் காட்டாமல் சன்னிதானத்தை நோக்கியவாறு பின்னோக்கி இறங்குவது மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரே கூரையின் கீழ் தனித்தனியா? குடும்ப உறவுகளை இணைக்கும் 20 நிமிட அதிசயம்!
18 படிகள் - Sabarimala 18 steps meaning