முன்பொரு காலத்தில் காடாக இருந்த பகுதியில் மக்கள் ஆடுகளை மேய்த்து வந்துள்ளனர். அதனால் 'மந்தைகாடு' என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் மருவி 'மண்டைக்காடு' என்பதாக அறியப்படுகிறது.
அமைவிடம்: நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் மண்டைக்காடு என்னும் ஊரில் கடல் மட்டத்திலிருந்து 64 மீட்டர் உயரத்தில் 8.1633°N 77.2799°E என்ற புவியியல் ஆள் கூறுகள் கொண்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமையப் பெற்றுள்ளது.
சிவபெருமானின் கட்டளைப்படி பூலோக மக்களை காத்திடும் பொருட்டு அன்னை பார்வதி தேவி பத்திரகாளியாய் அவதரித்து பூலோகம் முழுவதும் சஞ்சரித்து கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாள் அரபிக்கடல் அருகில் பனைமரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்து ‘ஓம் சக்தி பத்திரகாளி காளி சூலினி' என்ற மந்திர ஒலி தொடர்ச்சியாக காற்றில் மிதந்து வந்தது. அந்த ஒலி அம்பாளை கட்டி இழுத்தது. பைரவர் என்ற சித்தர் ஸ்ரீ சக்கரம் அமைத்து அதில் அமர்ந்து கொண்டு தேவியின் நாமங்களை கூறியபடியே பல ஆண்டுகளாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். அவ்வாறு இருந்த காரணத்தால் அவரது உடல் முழுவதும் மண் புற்று வளர்ந்து அவரை மூடி மறைத்து ஸ்ரீ சக்கரம் புற்றாக காட்சி அளித்தது.
பைரவ சித்தரது தவத்தின் வலிமையையும், சக்தியையும் உணர்ந்த அன்னை, அந்த சித்தருக்கு நேரில் காட்சி கொடுத்தாள். அன்னையின் திருக்காட்சியை காணப்பெற்ற சித்தர் பூரிப்படைந்தார். பின்னர், ‘தாயே நான் பூஜித்த ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து அனைவருக்கும் அருள் பாலிக்க வேண்டும்' என்று வரம் கேட்டார். அன்னையும் அவ்வாறே வரமளித்து அந்த ஸ்ரீ சக்கரத்தில் ஐக்கியமாகி விட்டார்.
ஸ்ரீ சக்கரத்தின் மேல் மணல் புற்று வளர்ந்தது. ஒரு நாள் மணல் மேடாகிப் போன அந்த புற்றில் இருந்து இரத்தம் வடிந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இது பற்றி பிரசன்னம் பார்த்த போது அங்கு பத்திரகாளித்தாய் பகவதியாக வீற்றிருப்பது தெரிந்தது. இதை அடுத்து அங்கு பகவதி அம்மனுக்கு ஆலயம் எழுப்பப் பட்டது.
பெண்கள் சபரிமலை: 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையில் முட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ள பகவதியம்மன் இக்கோயிலின் சிறப்பாகும். பெண்கள் 41 நாள் விரதமிருந்து இருமுடி கட்டி கால்நடையாக இந்த கோவிலுக்கு வருவதால் பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
மாசிமாத கொடைவிழா இந்த ஆலயத்துக்கு புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பங்குனி மாத பரணி நட்சத்திரத்தில் தான் பகவதியம்மன் அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே அன்றையத்தினம் அம்மனுக்கு அளப்பரிய பூஜை ஒன்று நடத்தி குத்தியோட்டம், பூமாலை, துலாபாரம், பிடிப்பணம் போன்றவை நடத்தப்படுகிறது. இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் குவிவார்கள்.
மாசித்திருவிழாவின் 10 ம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு 9 மண்பானை, 4 சட்டி,1 பனை ஓலைப்பெட்டி ஆகியவற்றில் 11 வகை பதார்த்தங்களையும், 2 குடம் தேனையும் கொண்டு படையலிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ ‘ஒடுக்கு பூஜை' நடைபெறும். ஊர்வலத்தின் போது அந்த பகுதியே நிசப்தமாக இருக்கும். பறையொலி மட்டுமே கேட்கும்.
ஒடுக்குபூஜையில் படைத்த அன்னத்தை வாய் பேசாத குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு பேச்சு வரும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலில் கை, கால், தலை போன்ற உடலுறுப்புகள் மரத்திலும், வெள்ளியிலும் செய்து விற்பதை உடல்நலக்குறைவு உள்ளவர்கள் வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியை தடவி கோயில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.