சபரிமலை ஸ்ரீஐயப்பன் சன்னிதானத்திற்கு முன்னிருக்கும் 'பதினெட்டுப் படிகள்' மிகவும் புகழ் பெற்றவை, மிகவும் புனிதமானவை. கடுமையான விரதமிருந்து இருமுடி கட்டியவர்கள் மட்டும் இந்தத் திருப்படிகளில் ஏறிக் கடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
இங்கு பதினெட்டுத் தேவதைகள் பதினெட்டுப் படிகளாக இருக்கிறார்கள். படிகளைக் கடந்து செல்லும் உண்மையான விரத ஐயப்ப சாமிகளின் பாவங்களை அந்தத் தேவதைகள் நீக்குகின்றனர் எனும் தொன்ம நம்பிக்கை இருக்கிறது.
'பதினெட்டாம் படியான்' என்ற ஒரு திருப்பெயர், சிறப்பாக ஸ்ரீ ஐயப்பனையும், பொதுவாக, கருப்பண்ணசாமி முதலிய காவல் தெய்வங்களையும் குறிப்பிடுகிறது. பதினெட்டாம்படியின் மாண்புகளை அறிவதற்கு இப்பெயர் ஒரு சிறந்த சான்றாக விளங்குவதைக் காணலாம்.
உண்மையில், பதினெட்டுப் படிகளுக்கும், பதினெட்டாம் படிக்கும் தனி மகிமைகள் இருக்கின்றன. அவை சில தத்துவ உட்பொருள்களையும் மறைவாக உணர்த்துகின்றன.
பதினெட்டுப் படிகள் என்பவை வருமாறு:
1. பூதங்கள் 5
2. பொறிகள் 5
3. புலன்கள் 5
4. மலங்கள் 3
ஆக 18 படிகள். அதாவது, பூதங்கள் 5, பொறிகள் 5, புலன்கள் 5 ஆகிய பதினைந்து ஆன்ம தத்துவங்களின் துணையோடு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களைக் கடப்பது பக்தி சாதனத்தில் ஒரு நிலையாகும். பதினெட்டுப் படிகளும், பதினெட்டாம் படியும் இந்த நிலையை உணர்த்துகின்றன.
மனிதர்களிடம் இருக்கும் தீய குணங்கள் காமம், குரோதம், மதம், கோபம் முதலியன பலவாகும். பதினெட்டுப் படிகளில் ஒவ்வொரு படியைக் கடக்கும் போதும், ஒவ்வொரு தீய குணத்தை ஒழிக்க வேண்டும். தீய குணங்களை ஒழித்தபடியே இறைவனை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்.
சில தலங்களில் பதினெட்டாம் படியைத் தவிர, வேறு படியைப் புனிதப் படியாகப் போற்றுகிறார்கள்.
திருச்செங்கோட்டில் அறுபதாம் படி ‘சத்தியப்படி' ஆகும். ஏதேனும் ஒரு வழக்கில் ஒருவர் அறுபதாம் படியின் மீது நின்று, முருகன் பெயரால் சத்தியம் செய்தால், மக்கள் அதை முழு மனதுடன் ஏற்று வழக்கை முடிக்கிறார்கள்.
இறைவனை அடைவதற்குத் தத்துவங்கள் திருப்படிகளாகும். ஆகவே, திருக்கோயில் படிகள் அனைத்தும் தத்துவங்களே.
படிகளின் தத்துவ உட்பொருட்களை முதன் முதல் விளக்கியவர் திருமூலர்.
"முப்பத்தாறு தத்துவங்களை முக்தியை அடைவதற்குரிய ஏணிப் படிகளாகப் பயன்படுத்த வேண்டும். அவற்றைக் கடந்து முன்னேறிச் சென்று முடிவில் சிவபெருமானைத் தரிசித்து, தெளிந்து, சிவமேயாய்ச் செயலற்றிருக்க வேண்டும்" என்று திருமூலர் குறிப்பிடுகிறார் (திருமந்திரம் 126).
திருவண்ணாமலையில் மூலவரைத் தரிசிக்க முப்பத்தாறு படிகளைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த முப்பத்தாறு படிகள் என்பன ஆன்ம தத்துவம் 24; வித்யா தத்துவம் 7; சிவ தத்துவம் 5; என்ற முப்பத்தாறு தத்துவங்களே.
இவ்வாறு பக்திப் படிகளால் தெரியும் உண்மைகள் பல இருக்கின்றன.
ஆகவே, கோயில்களில் காணப்படும் திருப்படிகள் சாதாரணப் படிகள் அல்ல. பலவகைப்பட்ட உட்பொருள்களுடன் அவை திகழ்கின்றன. படிகள் தெய்வாம்சங்கள் நிறைந்தவை. வழிபாட்டுக்குரியவை.
பதினெட்டுப் படிகளைத் தொடர்ந்து, ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கையும் கடப்பது ஓர் உயர்ந்த நிலை. முப்பத்தாறு தத்துவங்களைக் கடப்பது அதற்கும் மேலான நிலை. தொண்ணூற்றாறு தத்துவங்களைக் கடப்பது மிக மிக உச்சநிலை; முக்தி நிலை; வீடுபேறு.
இவ்வுலக வாழ்க்கை பயனுடையதாக அமைய, படிப்படியாக உயர்வைப் பெற்றிட இந்தப் படிகள் நமக்கு உதவுகின்றன.