
இந்து மதத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பத்ம புராணத்தில், இறை வழிபாட்டில் செய்யக்கூடாத சில தவறுகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இறை வழிபாட்டில் எப்போதும் கவனத்துடனும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடும் இருக்க வேண்டும். நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் பிரார்த்தனையின் நோக்கத்தை அடைய விடாமல் செய்து விடலாம். அதனால் பக்தியில் எப்போதும் சிரத்தை எடுத்துக்கொண்டு முழு உணர்வோடு செயல்பட வேண்டும். இந்தச் செயல்களை கோயில்களில் மட்டுமல்லாது, வீட்டிலும் அல்லது புனித யாத்திரை செல்லும் இடங்களிலும் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு சரியாக கடைபிடித்தால் உங்களது வேண்டுதல் நோக்கங்கள் சரிவர நிறைவேறும். இறை வழிபாட்டின்போது செய்யக் கூடாத சில தவறுகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கோயிலுக்கு எப்போது செல்ல நினைத்தாலும் குளித்துவிட்டு தூய்மையாக செல்ல வேண்டும். உடல் தூய்மை என்பது ஆன்மிகத்தில் முதல் படியாகும். உடலை தூய்மையாக வைத்திருக்கும் எண்ணம் இருந்தால்தான், அவர்களின் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க முடியும்.
2. கோயிலுக்குள் நுழைந்த பின்னர் மனதில் உள்ள தீய எண்ணங்களை வெளிப்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களை நினைக்காமல் இருக்க வேண்டும்.
3. கோயிலில் இறைவனை எதிர்கொள்ளும்போது வணங்காமல் இருக்கக் கூடாது.
4. இறைவனை ஒரு கையால் எப்போதும் வணங்கக் கூடாது.
5. கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை எப்போதும் பணிவுடன் இரண்டு கைகளால் பெற வேண்டும்.
6. கோயிலுக்குள் வாகனங்கள் மீது அமர்ந்து செல்வதும், காலணிகளை அணிந்து செல்வதும் தவறு.
7. பொய் பேசுவதும், மற்றவர்களைப் பற்றி பொறாமையில் தவறாகப் பேசுவதும் கோயிலில் உள்ளே கூடவே கூடாது.
8. கோயிலின் உள்ளே சத்தமாகப் பேசுவதும், அதிகாரம் செலுத்துவதும் கூடாது.
9. கோயிலின் உள்ளே அதிகாரத்தைப் பயன்படுத்துவதும் சிபாரிசுகளை பயன்படுத்துவதும் கூடாது. இறைவனின் முன் அனைவரும் சமம் என்பதால் அங்கு யாரையும் வேலை வாங்கக் கூடாது.
10. கோயிலில் வாக்குவாதம் செய்வதும் அல்லது சண்டையிடுவதும் கூடாது.
11. நடை சாத்திய பிறகு சன்னிதியை சுற்றி வரக் கூடாது.
12. கோயிலினுள் எந்த அசுத்தமும் செய்யக் கூடாது. கூடுமான வரையில் ஆலயத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
13. கோயில் நடை திறந்து இருக்கும் நேரத்தில் கோயில் வளாகத்தினுள் தூங்கக் கூடாது.
14. கடவுள் சிலை அமைந்திருக்கும் பீடத்தை விட உயரமான இடத்தில் உட்காரக் கூடாது.
15. கோயிலில் கால்களை நீட்டியோ, விரித்தோ உட்காரக் கூடாது. சன்னிதிக்கு எதிர் புறமும் பாதையிலும் கால்களை நீட்டி அமரக் கூடாது. எப்போதும் கால்களை சம்மணமிட்டுதான் அமர வேண்டும்.
16. இறைவனுக்கு நிவேதனம் படைக்கும் முன்னர் பிரசாதத்தை சாப்பிடக் கூடாது.
17. பயன்படுத்திய எந்தப் பொருளையும் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்க கூடாது.
18. இறைவனின் முன்பாக ஒருவரின் காலில் விழுவதோ, ஆசி பெறுவதோ கூடாது. இறைவனை விட பெரியவர் யாரும் அந்த இடத்தில் இல்லை.
19. கடவுளுக்கு எதிரில் எவரையும் தண்டிப்பது பெரிய பாவம்.
20. கோயிலில் கடுமையான வார்த்தைகளைப் பேசுவது தவறு.
21. கோயிலுக்கு வெளிர்ந்த அல்லது வண்ணமயமான ஆடை அணிந்து செல்லலாம். கருப்பு உடை அணிந்துகொண்டோ முகத்தை மூடிக் கொண்டோ செல்லக் கூடாது.
21. கோயிலில் இருக்கும்போது ஒருவரை விமர்சிப்பதும் புறம் கூறுவதும் தவறு.
22. கோயிலில் அமர்ந்து தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது கூடாது.
23. இறைவனை விமர்சிப்பது தவறு .ஒருவரின் கர்ம பலன்படியே கடவுள் அவருக்கு நன்மையைச் செய்வார்.
24. கடவுளுக்கு முன்பாக வேறொருவரைப் புகழ்ந்து பேசுவது கூடாது.
25. திருவிழாக்களையும் பண்டிகைகளையும் புறக்கணிக்கக் கூடாது.
26. தனக்குத் தேவையான நன்மைகளையும், பிறருக்குத் தேவைப்படும் நற்செயல்களை வேண்டியும் பிரார்த்தனை இருக்க வேண்டுமே தவிர, பிறருக்குக் கிடைப்பதை கெடுக்கும்படி எந்த ஒரு வேண்டுதலும் இருக்கக் கூடாது.