

சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது. 'லிங்' என்றால் ' லயம்' 'கம்' என்றால் தோற்றம். தன்னுள் லயித்த உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமாக நின்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் என்கிற ஐந்து விஷயங்களை புரிவதே லிங்கம்.
சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது. இந்த லிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது. இவற்றில் மனிதர்களால் வழிபடப்பட்ட லிங்கமான மானுட லிங்கங்களில் மட்டும், 90 வகையான லிங்கங்கள் உள்ளதாக 'மகுடாகமம்' என்னும் சைவ ஆகமம் கூறுகிறது. மனிதர்களால் உண்டாக்கப் பட்டது "மனுஷ்ய லிங்கம்" இவைகள் ஓரிடத்திலேயே நிலை கொண்டு அசையாமல் இருப்பதால் இதனை "அசல் லிங்கம்"என்றும் செல்வர்.
சுயம்பு லிங்கம் - இறைவன் இச்சைப்படி தானாக தோன்றிய லிங்கம். 'விடங்கர்' என்பது தானே தோன்றி வந்த சுயம்பு மூர்த்திகளை குறிக்கும் சொல்லாகும். அவ்வாறு இறைவன் தானே வெளிப்பட்டு காட்சி கொடுத்த ஏழு தலங்கள். அந்த ஏழு விடங்கர்கள், வீதி விடங்கர்- திருவாரூர்,நகர விடங்கர்- திருநள்ளாறு,சுந்தர் விடங்கர்- நாகப்பட்டினம்,ஆதி விடங்கர்- திருக்கார வாசல்,நீல விடங்கர் -திருவாய்மூர்,அவனி விடங்கர்- திருக்குவளை,புவனி விடங்கர்-திருமறைக்காடு. என்ற தலங்களில் உள்ளன. இவை அனைத்தும் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடப்பட்டதை "சக்தி லிங்கம்" எனப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள ஆதிகாமாட்சி அம்மன் கோவிலில் உள்ள 'சக்தி லிங்கம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவமும், சிவபெருமானின் வடிவமும் இணைந்து காணப்படுகிறது, இது ஆண்-பெண் சக்திகளின் ஐக்கியத்தைக் குறிக்கிறது. இந்த லிங்க பாணத்தில், வீராசனத்தில் நான்கு கரங்களுடன் சக்தி அமர்ந்திருக்கிறார்.
சிவ லிங்கத்தில் உருளை வடிவ லிங்கப் பகுதியில் உருளையாக இல்லாமல் பட்டை பட்டையாக நீளவாக்கில் உள்ள லிங்கங்களை "தாரா லிங்கம்" என்கிறார்கள். இந்தப்பட்டைகள் 5 முதல் 64 வரை இருக்கும். அதிகமாக இருப்பது 16 பட்டைகள் இருக்கும் லிங்கங்களே. கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென் பொன் பரப்பியில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள லிங்கம் 16 பட்டைகளாக உள்ளது. இந்த லிங்கத்தை தட்டிப் பார்த்தால் வெண்கல மணியோசை கேட்கும். இவரை வழிபட 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
லிங்கத்தை சுற்றிலும் 107 சிவலிங்கங்கள் பொறிக்கப்பட்டு இருப்பின். அதனை "அஷ்டோத்திர சதலிங்கம்" என்பர். சிவலிங்கத்தின் பாணத்தில் 999, அல்லது 1008 சிறிய லிங்க உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தால் அதனை "சஹ்ஸ்ர லிங்கம்" என்பர்.
பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் ஒரே கல்லில் 1008 லிங்கத்துடன் கூடிய மிகப் பெரிய சிவலிங்கம் இருக்கிறது.ஒரு சிவ லிங்கத்தை வடிவமைத்து அதில் தேன் கூடுபோல் மிக நுணுக்கமாக 1008 லிங்கங்களை நேர்த்தியாக செதுக்கியுள்ளனர்.
லிங்கத்தின் பாணத்தில் சிவபெருமான் உருவம் அல்லது வேறு உருவ வடிவங்கள் காணப்பட்டால் அதனை "முக லிங்கம்" என்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் முத்தாம்பிகா சமேத அர்த்த நாரீஸ்வரர் ஆலயத்தில் லிங்கத்திற்கு தேனாபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் கையில் கிளியுடன் இருக்கும் அம்மனை காணலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் அத்தி முகத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கத்தில் யானை முகம் உள்ளது.
"சல லிங்கங்கள்" எனப்படும் அசையும் லிங்கங்கள். மண், உலோகங்கள், மரம், கல் போன்றவற்றால் செய்யப்பட்ட லிங்கங்கள். சல லிங்கங்கள் அவை செய்யப்படும் பொருட்களைக் கொண்டே பெயர்கள் சூட்டப்படுகின்றன.
மண்ணால் செய்யப்படும் லிங்கம் - "மருண்மய்" லிங்கம். உலோகத்தால் செய்யப்பட்டவை - "லோகஜ" லிங்கம். முத்து பவளம் போன்ற ரத்தினங்களால் செய்யப்படும் லிங்கம் - "ரத்னஜ" லிங்கம். மரங்களில் செய்யப்பட்ட லிங்கம் - "தாருக" லிங்கம், கல்லால் செய்யப்படும் லிங்கம் -"சிவா"அல்லது "சைலஜ" லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஒரு திருக்கோயிலாகும். ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் லிங்கம் மணலால் ஆனது.
ஷணிக லிங்கம் - தற்காலிக வழிபாட்டிற்காக மலர், அன்னம், சந்தனம், விபூதி போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் லிங்கம்."ஷண லிங்கம்" அரிசி, மண், களிமண், பசுஞ்சாணி, வெண்ணெய், ருத்ராட்சம், தர்ப்பம், மஞ்சள் மற்றும் மாவு போன்றவற்றிலும் செய்யப்படும்.
ரிஷிகளும், முனிவர்களும் தங்களின் வழிபாட்டிற்காக உருவாக்கிய லிங்கம். "ஆர்ஷ லிங்கம் " என்பதாகும். ரிஷிகளால் உண்டாக்கப்பட்டு வணங்கப்படுபவை. அடிப்புறம் சற்று பெருத்து தேங்காய் வடிவம்போல இருக்கும். மயிலாடுதுறை அருகே உள்ள திருதலைச்சங்காட்டில் சங்கவனேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு மூலவர் சங்கு போன்ற உருண்டையான வடிவில் காட்சி தருகிறார்.