Kalahastheeswarar
Kalahastheeswarar

சப்தரிஷிகள் வழிபட்ட கத்திரி நத்தம் காளஹஸ்தீஸ்வரர்!

Published on

அமைவிடம்:

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான, சப்தரிஷிகள் வழிபட்ட சாப விமோசனத்தலம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கத்திரி நத்தம்  அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை உடனுரை காலஹஸ்தீஸ்வரர்  திருக்கோயில் தலமாகும். இத்தலம் தஞ்சையில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த காலஹஸ்தீஸ்வரர் கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்த ராகு- கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. 

 புராணக் கதை:

இறைவனுடைய சாபத்தால் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகள் விமோசனம் தேடி  பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக புன்னைக் காட்டிற்கு தெற்கே உள்ள ஒரு இலுப்பைக் காட்டிற்கு வந்தனர். அங்கு தங்களுடைய நிலையை எண்ணி வருந்தி கோயில் கொண்டிருந்த காலஹஸ்தீஸ்வரரை வழிபடத் தொடங்கினர்.

தொடர்ந்து 48 நாட்கள் கோயிலுக்கு எதிரே இருந்த திருக்குளத்தில் மூழ்கி எழுந்து வழிபட்டு ,பிறகு தவமும் மேற்கொண்டனர். பின்னர், ரிஷிகளின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்ட காலஹஸ்தீஸ்வரர் சாபத்தை விலக்கி அவர்களின் நோயையும் நீக்கி அருள்புரிந்தார். இப்படி ஒரே நேரத்தில் ஏழு ரிஷிகளும் வழிபாடு செய்ததால் இந்த தலம் சப்தரிஷி நத்தம் என அழைக்கப்பட்டது. 

முதல் செங்கற்கல் கோயில்:

அழகிய இலுப்பை மரங்கள் நிறைந்த அந்த காட்டின் நடுவே காலஹத்தீஸ்வரர் அருள் பாலித்ததை அறிந்த சோழ மன்னன் ஆகிய முதலாம் ராஜராஜ சோழன் தன் தந்தை எப்படியெல்லாம் சிவபெருமானுக்கு கோயில் எடுத்து ஈசனின் மனம் குளிர வழிபாடுகளை நடத்தினாரோ அதேபோல் தன்னுடைய பக்தி நெறியையும் வெளிப்படுத்த விரும்பி அதன்படி தஞ்சை பெரிய கோவிலுக்கு அடுத்தபடியாக இந்த கோயிலை நிறுவினார். 

சோழர்களின் ஆட்சியில் காலஹஸ்தீஸ்வரருக்கு முதல் முதலாக செங்கற்களால் இத்திருக்கோயிலை வடிவமைத்தார்கள். அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மராட்டியர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் இக்கோயிலை புதுப்பித்தனர்.  இக்கோயிலில் முன் மண்டபத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் துக்கேஜி என்னும் துளஜாவின் கல்வெட்டு சாசனம் ஒன்று உள்ளதைக் காணலாம். அந்த சாசனம் ஆங்கிலச் ஆண்டு கார்த்திகை மாதம் 28ஆம் நாள் செவ்வாய்க்கிழமையை குறிப்பதாகும். 

இதையும் படியுங்கள்:
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இந்த முருகனின் பிரசாதம் பற்றித் தெரியுமா?
Kalahastheeswarar

பெயர் காரணம்:

சப்தரிஷிகள் தவம் புரிந்ததால் முதலில் சப்தரிஷி தலம் எனவும் பிறகு கத்திரி நத்தம் எனவும் மருவிவிட்டது. இவ்வாறு சோழ நாட்டில் காலஹஸ்தீஸ்வரர் அருள் பாலித்து வருவதால் இத் தலம் திருக்காளத்தி என்னும் காலஹஸ்திக்கு நிகரானதாகவும், தென்காளஹஸ்தி என்னும் சிறப்புடனும் போற்றப்படுகிறது. காளகஸ்தீஸ்வரருக்கு இடப்பாகத்தில் அமர்ந்து அழகிய தோற்றத்தோடு அம்பாள் ஸ்ரீ ஞானாம்பிகை பக்தர்களுடைய குறைகளைத் தீர்த்து வைக்கிறார். 

 சிறப்பு:

இங்கு தலமரமாக வில்வம் உள்ளது. கோயில் ஓம் என்னும் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தலத்தில் சண்டீ கேஸ்வரரை சுற்றிவராமல் நேராக இறைவனை தரிசனம் செய்யலாம். நவகிரக சூரியன் மேற்கு நோக்கிய படியும் , சந்திரன் கிழக்கு நோக்கிய படியும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பது புதுமையாக உள்ளது. இத்தலத்தில் கொடி மரமும், ராஜகோபுரமும் இல்லாதது  வித்தியாசம்.

 மற்ற தெய்வங்கள்:

இக்கோயிலின் முன் மண்டபத்தில் நாக தேவதையும், முருகனும் அருள் பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் அமர்ந்தபடி கணபதி நம்மை நோக்கி கருணை பார்வையை வீசுகிறார். அவருக்கு இடது பக்கத்தில் கைலாய தட்சிணாமூர்த்தி தன்னுடைய கையில் பாம்பினை பிடித்தவாறு தரிசனம் தருவது அபூர்வம். ஒவ்வொரு சிவாலயத்திலும் லிங்கோத்பவர் இருப்பார். ஆனால் இக்கோயிலில் கால ஹஸ்தீஸ்வரருக்கு நேர் பின்னால் அர்த்தநாரீஸ்வரர் அழகுற அமைந்திருக்கிறார். அவருக்கு எதிரே வள்ளி தெய்வானையோடு முருகப்பெருமான் உள்ளார். 

இதையும் படியுங்கள்:
சிவராத்திரி நாளில் தரிசிக்க வேண்டிய கோவில்கள்!
Kalahastheeswarar

தோஷம் நீங்க:

தலை நகர்  தஞ்சையில் இருக்கும் தலையாய இறைவனுக்கு சிறப்பு செய்ய விரும்பி இக்கோயிலை நிர்மாணித்திருக்கிறார்கள். காலஹஸ்தீஸ்வரர் ஏழு அடி உயரத்திலும் 15 அடி சுற்றளவிலும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார். பக்தர்களின் ராகு -கேது தோஷத்தை இத்தல இறைவனான காலஹஸ்தீஸ்வரரே நிவர்த்தி செய்துவிடுகிறார். ஒவ்வொரு திங்கட்கிழமையும் தோஷம் களைய, கோயில் திருக்குளத்தில் நீராடி பின்னர் கால ஹஸ்தீஸ்வரரை வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற்று, திருமணத் தடைகள் விலகி குடும்ப ஒற்றுமை ஓங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com