
திருவாரூரில் உள்ள சக்திபுரம் திருத்தலத்தில் அமைந்துள்ளது சீதளா தேவி மாரியம்மன் கோயில். இங்குள்ள அம்மனுக்கு ஆதிபராசக்தி, கமலாம்பாள் என்ற வேறு பெயர்களும் உண்டு.
சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள். இக்கோயிலில் அருளும் அம்மன், வழிபடும் மக்களின் உடல், மன உஷ்ணத்தை போக்கும் தாய் என்பதால் இவளுக்கு சீதளா தேவி என்றும் பெயர் அமைந்துள்ளது.
இக்கோயிலில் எந்த அம்மன் கோயிலிலும் கேள்விப்படாத அதிசயம் என்னவெனில், கோயில் வளாகத்தில் உள்ள பழைமை வாய்ந்த வேப்ப மரத்தின் இலை மிகவும் இனிப்பு வாய்ந்தது. சாதாரணமான இனிப்பு போல் இல்லாமல் தேன் போன்று இதன் இலை சாறு இனிப்பது அதிசயமாக உள்ளது. பல விதமான ஆராய்ச்சிகள் செய்து பார்த்தும் இதற்கான காரணம் தெரியவில்லை என பக்தர்கள் உறுதி செய்து சொல்கின்றனர்.
இந்த வேப்ப இலையை கோயில் வளாகத்திற்கு வெளியில் வந்து சாப்பிட்டால் கசப்பு சுவையோடு இருப்பது ஆச்சரியம். இது அம்பாளின் அருளாலேயே நடக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோயிலே பிரம்மாண்டமாக பரந்து விரிந்து வளர்ந்துள்ள வேப்ப மரத்தின் கீழேதான் அமைந்துள்ளது. கோயிலின் முன் நாகலிங்க மரமும் அதன் கீழ் விநாயகரும் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘நாகலிங்க விநாயகர்’ என்று பெயர். அனுமன் தனிச்சன்னிதியில் காட்சி தருகிறார்.
இக்கோயில் கருவறையில் அம்மன் இரு உருவங்களாக முன்புறம் சீதளா தேவியாகவும், பின்புறம் பெரிய மகமாயி அம்மனாகவும் காட்சி தருகிறார். இங்கு நவராத்திரி அன்று மண்டபத்தின் நடுவில் சதுர பாத்திரம் வைத்து அதில் சர்க்கரை பொங்கல் நிரப்பி நடுவில் குளம் போல் நெய் ஊற்றி வழிபடுவார்கள். இதில் அம்மன் முகம் தெரிவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பூஜையின் முடிவில் அந்த சர்க்கரைப் பொங்கலையே பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள்.
இந்த அம்மன் முன்பு ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு மஞ்சள் துணியில் கட்டி முடிந்து அர்ச்சகரிடம் கொடுத்தால அதை அவர் அம்மன் பாதத்தில் வைத்து விடுவார். நாம் நினைத்த காரியம் நிறைவேறிய பிறகு அந்த காசை உண்டியலில் போட்டு விடுகிறார்கள்.
இத்தலத்தில் சித்திரையில் விழா சிறப்பாக நடைபெறும். சீதளா தேவியை வசந்த ருது காலமான சித்திரை, வைகாசி மாதங்களில் வட மாநிலங்களில் உலகத்தின் ராணியாக விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள். சீதளா தேவி கருணை உடையவளாகவும், மங்கல ரூபிணியாகவும் தன்னை வேண்டி வழிபாடு நடத்தும் பக்தர்களிடம் இரக்க குணம் உள்ளவளாகவும் விளங்குகிறாள். இவளை வெப்ப காலத்தில் வணங்கி அருள் பெறுவோம்.