
1806 ஆம் ஆண்டு பிறந்த அய்யா வைகுண்டர் 'ஒரே கடவுள், ஒரே சமயம், ஒரே சாதி' என்று கொள்கையை நிறுவி ஆன்மிக சமூகப் புரட்சிக்கு வித்திட்டார்.
திருவாங்கூர் மன்னராட்சியில் தாழ்த்தப்பட்ட 18 சாதிகளில் ஒன்றான பனையேறி நாடார் சாதியில் தோன்றிய இவரது இயற்பெயர் முடிசூடும் பெருமாள். கீழ் சாதிக்காரன் இப்பெயர் வைக்கக் கூடாது என்று உயர் சாதியினர் தடுத்து 'முத்துக்குட்டி' என்றே அழைத்தனர்.
நோயுற்றிருந்த இவரைத் திருச்செந்தூருக்கு இவர் அம்மா கூட்டிச் சென்றார். அங்குக் கடலில் குளிக்க மூழ்கியவர் மூன்று நாட்களாகக் காணாமல் போய் நான்காவது நாளாக நாளில் வெளியே வந்தார். 'அம்மா இனி என் பெயர் வைகுண்டன். நான் விஷ்ணுவின் அவதாரம்' என்றார்.
வைகுண்டரைப் பூவண்டர் என்ற கோனார் தன் தென்னந்தோப்பில் குடில் அமைத்துத் தங்க வைத்தார். அங்கு ஆறு ஆண்டுகள் கடும் தவம் மேற்க்கொண்டார். சீடர்கள் சேர்ந்தனர். பொதுமக்கள் இவரை தரிசித்து தங்கள் துன்பங்கள் தீர்க்கப் பெற்றனர். இவருடைய புகழ் எங்கும் பரவியது.
ஆதிக்க சாதியினர் இவர் தன்னை விஷ்ணுவின் அவதாரம் என்றதால் மகாராஜாவிடம் புகார் செய்தனர். அரசன் ஆணைப்படி காவலர்கள் வைகுண்டரை வழி நெடுக அடித்து, இழுத்து வந்து 112 நாட்கள் சிறையிலிட்டு கண்ணில் மிளகாய்ப் புகை தூவி பலவிதக் கொடுமைகள் செய்தனர். பின்பு இவரை விடுதலை செய்தனர்.
வைகுந்தரின் ஆன்மீக வழி 'அய்யா வழி' என்ற பெயரில் அற வழியே அன்பு வழி என்றது. இவரது இயக்கம் அன்புக்கொடி இயக்கம் ஆகும். இவர் ஆன்மீகத்தையும், சமூக வாழ்வியலையும் இணைத்துப் பெரும் புரட்சி செய்தார். தங்களுக்குக் கீழான சாதியினருடன் சமபந்தி நடத்தினார். 'தாழக் கிடப்பாரை தற்காப்பது தர்மம்' என்றார்.
கீழ்ச் சாதியினர் குளிக்கக் கூடாது என்ற தடை திருவாங்கூரில் இருந்தது. அதனை மாற்றி வைகுண்டர் முந்திரிக்கிணறு என்ற ஒரு கிணறு வெட்டி அங்கு அனைவரும் குளித்து, துவைத்த துணியை உடுக்க வேண்டும் என்றார். இதற்குத் 'துவையல் இயக்கம்' என்று பெயர்.
வைகுண்டர் விக்கிரக வழிபாட்டை எதிர்த்தார். சாமிக்கும் பக்தருக்கும் இடையில் புரோகிதர் என்ற புரோக்கர் தேவையில்லை என்றார். மாந்திரீகம், பில்லி, சூனியத்தை நம்பாதீர் என்றார். சைவ உணவை வலியுறுத்தினார்.
வைகுண்டர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சாதிக் கொடுமைகளை எதிர்த்துத் தலையில் தலைப்பாகை, காலில் செருப்பு, கையில் குடை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். இடுப்பில் வேட்டி தளரக் கட்ட வேண்டும் என்றார்.
வீடுகளை வரிசையாக கட்டி முன் வாசல், பின் வாசல் வைத்து நல்ல குடியிருப்புகள் அமைக் சொன்னார். இவை அனைத்தும் இவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளாகும். பெண்களை மேல் சேலை அணியும்படி அறிவுறுத்தினார். தோள் சீலைப் போராட்டத்தை ஆதரித்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
வைகுண்டர் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் படி அறிவுறுத்தனார். இவர் கூறியதால் நாடார் சாதியினர் ஊருக்கு ஊர் தங்கள் சங்கத்தின் மூலமாக ஐஏஎஸ் பயிற்சி நிலையம், கல்லூரிகள், விளையாட்டுப் பயிற்சி நிலையங்கள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், சிலம்பம், கராத்தே, குங்ஃபூ, களரிப் பயிற்சிப் பள்ளிகள் உருவாக்கினர். இளைஞர்களுக்குச் சிறந்த கல்வி, தொழில் வாய்ப்பு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தி நாட்டின் வளமான வலிமையான குடிமக்களாக உயர்த்தினர்.